வடக்கு – கிழக்கு மாகாணங்களில் சில நிதி நிறுவனங்கள் குடும்பங்களை குறிப்பாக, பெண் தலைமைத்துவக் குடும்பங்களை மாத்திரமே இலக்கு வைத்து, கடன் வழங்குவதன் பின்னணி என்ன என நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா இன்றைய தினம் (22) நிதி அமைச்சர் மங்கள சமரவீரவிடம் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
வடக்கு – கிழக்கு மாகாணங்களில் குறிப்பாக, கிளிநொச்சி, முல்லைதீவு, வவுனியா, மட்டக்களப்பு போன்ற மாவட்டங்களில், எல்லையோரக் கிராமங்களிலும், மிகவும் பின்தங்கிய கிராமங்களிலும் உள்ள பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் மற்றும் வருமானம் குறைந்த குடும்பங்களை இலக்கு வைத்து இலங்கை மத்திய வங்கியின் கீழ் பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படுகின்ற 46 வரையிலான நிதி நிறுவனங்களில் சுமார் 30 வரையிலான நிதி நிறுவனங்கள் அதிக வட்டி கூடிய கடன்களை வழங்கி, அதனை வாராந்த அடிப்படையில் அறவிட்டு வருகின் றன.
இந்த கடன் வசதிகள் குறித்து விழிப்புணர்வுகள் எதுவும் இல்லாத அப்பாவி மக்கள் குறிப்பாக, பெண்கள் கடனைப் பெற்று அவற்றைத் திருப்பிச் செலுத்துவதில் பாரிய சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும் தெரிய வருகிறது.
கடந்தகால யுத்தம் மற்றும் தொடர் இயற்கைப் பாதிப்புகளினால் பாரிய பாதிப்புகளுக்கு உட்பட்டிருக்கின்ற மக்கள் முன் இவ்வாறான கடன் திட்டங்களை வழியவே சென்று வழங்குவதும், பின்னர் அவற்றைத் திருப்பிப் பெற இரவு பகல் பாராது அம் மக்களிடம் சென்று அவர்களை பல்வேறு அழுத்தங்களுக்கு ஆளாக்கி வருவதுமான ஒரு நிலைப்பாட்டினை இந்த நிதி நிறுவனங்கள் மேற்படி பகுதிகளில் முன்னெடுத்து வருவதாக மக்கள் பகிரங்கமாகவே குறைகூறி வருகின்றனர்.
க டனை மீளச் செலுத்த முடியாத காரணத்தால், இத்தகைய நிதி நிறுவனங்களது கெடுபிடிகள் தாங்காத நிலையில் வவுனியா, பன்றிக்கெய்தகுளம் பகுதியில் அண்மையில் ஒரு தாய் தனது குழந்தையுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்த சம்பவமும், முல்லைதீவு, விஸ்வமடு பகுதியில் பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவமும் இடம்பெற்றுள்ளன.
இந்நிலையில், இந்த நிதி நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்ற இத்தகைய செயற்பாடுகளின் நியாயத்தன்மை குறித்து விளக்குமாறும், இந்த நிதி நிறுவனங்கள் வழங்கும் கடன் தொகைகளுக்கான நிபந்தனைகள், வட்டி விகிதாசாரங்கள் என்ன வகையில் தீர்மானிக்கப்பட்டுள்ளன என்றும் கேள்வி எழுப்பினார்.
மேலும் இத்தகைய கடன் திட்டங்களை வழங்கும் முன் இந்த நிறுவனங்கள் உரிய திட்டம் குறித்து கடன் பெறும் மக்களுக்கு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தாதது ஏன்? என்றும், இத்தகைய நிதி நிறுவனங்களால் ஏற்பட்டுவரும் நெருக்கடிகளிலிருந்து எமது மக்கள் விடுபடுவதற்குரிய மார்க்கங்கள் யாவை என்றும் டக்ளஸ் தேவானந்தா கேள்வி எழுப்பியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.