குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வடமாகாண கல்வி மற்றும் விவசாய அமைச்சர்கள் தொடர்பில் இதுவரையில் முடிவு எடுக்கவில்லை என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
குறித்த அமைச்சர்கள் தொடர்பான தற்போதைய நிலைமை தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில் ,
வடமாகாண கல்வி மற்றும் விவசாய அமைச்சர்களை நியமிப்பதற்காக உறுப்பினர்களில் இருவரை தெரிவு செய்வதற்காக அவர்களிடம் சுயவிபர கோவைகளை தருமாறு கோரி இருந்தேன். அதன் அடிப்பையில் சில உறுப்பினர்கள் தங்களுடைய சுய விபர கோவைகளை கையளித்துள்ளனர். ஏனையவர்களும் தமது சுய விபர கோவைகளை கையளித்ததும் அது தொடர்பில் கட்சி மற்றும் மாவட்டங்களை ஆராய்ந்து தகுதியான உறுப்பினர்களுக்கு அமைச்சு பதவிகளை கையளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
வடமாகாண அமைச்சர்கள் மீதான குற்ற சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை செய்ய முதலமைச்சரினால் நியமிக்கப்பட்ட விசாரணை குழு கல்வி மற்றும் விவசாய அமைச்சர்கள் இருவரையும் பதவி விலக பரிந்துரை செய்திருந்தது.
அதன் அடிப்படையில் கடந்த 14ஆம் திகதி நடைபெற்ற மாகாண சபை அமர்வில் இரு அமைச்சர்களும் தமது பதவிகளை தியாகம் செய்ய முன் வர வேண்டும் என முதலமைச்சர் சபையில் கோரினார்.
அதனை அடுத்து கடந்த 15ஆம் திகதி விவசாய அமைச்சரும் கடந்த 20ஆம் திகதி கல்வி அமைச்சரும் தமது பதவி விலகல் கடிதத்தினை முதலமைச்சரிடம் கையளித்தனர். அதனை தொடர்ந்து நேற்றைய தினம் (21ஆம் திகதி ) முதலமைச்சர் குறித்த இரு அமைச்சுக்களையும் பொறுப்பெடுத்துக்கொண்டார். என்பது குறிப்பிடத்தக்கது.