நாட்டில் நீர்வளம் தொடர்பாக பொறுப்புக்கூற வேண்டிய தனியொரு நிறுவனம் காணப்படாமை நீர் முகாமைத்துவத்தில் உள்ள பாரிய சிக்கலாகும் என ஜனாதிபதி தெரிவித்தார்.
பௌதீக ரீதியில் எமக்கு கிடைக்கும் நீரின் அளவு, எமது நாட்டைப் போன்று பத்து மடங்கு பாரிய நிலப்பகுதிக்கு போதுமானதாக காணப்பட்டபோதிலும், உரிய முறையில் முகாமை செய்யப்படாமையின் காரணமாகவே நீர்ப் பிரச்சினையை எதிர்நோக்கவேண்டியுள்ளது எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
இன்று கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெற்ற ‘சுபென் பிரஜா அபிமானி’ மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கிராமத்து மக்களின் தாகத்தை தீர்க்கும் சமூக அடிப்படை அமைப்புக்களை பலப்படுத்தி நெறிப்படுத்தும் பொறிமுறையொன்றினை தயாரித்தல், மக்கள் மயப்படுத்தல் மற்றும் கௌரவிப்பதற்காக நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சும், தேசிய சமூக நீர் வழங்கல் திணைக்களமும் இணைந்து இச்செயற்திட்டத்தை ஏற்பாடு செய்திருந்தன.
மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி நீர்வளம் தொடர்பாக பொறுப்புக்கூறும் தனியானவொரு நிறுவனம் காணப்படாமை போன்றே பொதுமக்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் என்பன நீர் முகாமைத்துவம், நீர் பாதுகாப்பு மற்றும் சிக்கனம் தொடர்பாக குறைந்த பொறுப்புடன் செயற்படுதல் நீர் முகாமைத்துவத்தின் அடிப்படை பிரச்சினையாக உருவெடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
நீரைச் சிக்கனமாகப் பாவித்தல், நீர் பாதுகாப்பு மற்றும் சுற்றாடல் பாதுகாப்பு தொடர்பாக அனைவரும் பொறுப்புடன் தமது கடமைகளை நிறைவேற்ற வேண்டியதன் அவசியம் குறித்தும் ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தினார்.