குளோபல் தமிழ்ச்செய்தியாளர்
கிளிநொச்சி குளத்தினை மணல் மற்றும் கழிவுகளை அகற்றி ஆழமாக்குமாறு இரணைமடுக் குள விவசாயிகள் சம்மேளனச் செயலாளர் சி.சிவமோகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இரணைமடுக் குளத்தில் இருந்து இக்குளம் நிரப்பப்பட்டு மூன்றாம் வாய்க்கால் தொடக்கம் உருத்திரபுரத்தின் பத்தாம் வாய்க்கால், குஞ்சுப் பரந்தன், பெரிய பரந்தன் ஆகிய பகுதிகளுக்கு இக்குளத்தில் இருந்தே நீர் விநியோகம் மேற்கொள்ளப்படுவது வழமை.
கிளிநொச்சி கனகாம்பிகைக்குளத்தின் வான்வெள்ளம் மற்றும் ஆற்று படுகைகளின் வெள்ளம் கிளிநொச்சி நகரத்தின் கழிவுகள் இக்குளத்தினை தற்போது நிரப்பி உள்ளன. இதன் காரணமாக குளத்தில் கூடுதலான நீர் சேமிக்க முடியாத நிலைமை காணப்படுகின்றது.
அது மட்டுமல்லாது குளத்தின் நன்னீர் பெருக்கம் குறைந்து காணப்படுகின்றது. இக்குளத்தினை ஆழமாக்குமாறு இறுதியாக நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், விவசாயக் கூட்டங்கள் வலியுறுத்தப்பட்ட போதிலும் இது தொடர்பான எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.
இக்குளத்தினை கிளிநொச்சி நகரத்தின் கழிவுகள் கூடுதலாக சாராய வெற்றுப் போத்தல்கள், பியர் ரின்கள் குளத்திற்குள் காணப்படுவதன் காரணமாக நன்னீர் மீன்பிடிக்காக விரிக்கப்படும் வலைகளில் சாராயப் போத்தல்களும் பியர் ரின்களும் சிக்குவதாக நன்னீர் மீன்பிடியாளர்களினால் தெரிவிக்கப்படுகின்றது.
இக்குளத்தினை ஆழமாக்குவதன் மூலம் கிளிநொச்சி நகரத்தின் கிணறுகளின் நீர் மட்டத்தினை குறைவடையாமல் குடிநீர் நெருக்கடிகள் ஏற்படாமல் பாதுகாப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதன் காரணமாக கிளிநொச்சிக் குளம் ஆழமாக்கப்பட்டு சுத்தமாக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.