குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தமிழ் மக்களை பொறுத்தவரை மக்கள்தான் விழிப்பாக இருக்க வேண்டுமே தவிர தலைவா்கள் அல்ல , தலைவா்கள் எப்பொழுதும் தவறாகவே சிந்திப்பவா்கள் அவா்கள் தங்களின் அரசியலுக்கு அப்பால் செல்லமாட்டார்கள் என பேராசிரியர் சிவசேகரம் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி கூட்டுறவாளா் மண்டபத்தில் இடம்பெற்ற சமகால அரசியல் நிலவரம் தொடர்பான கலந்துரையாடலின் போதே அவா் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் தங்களின் அரசியல் பிரதிநிதிகளிடம் கேள்வி கேட்கும் நிலைமை உருவாக வேண்டும், பொறுப்புக்கூறும் படி கோர வேண்டும்,அழுத்தக் குழுக்களாக இருக்க வேண்டும், ஆனால் எங்களுடைய மக்களை பொறுத்தவரை எங்களுக்கு ஏன் வீண் வம்பு என எல்லா விடயங்களில் ஒதுங்கியிருப்பதுதான் மக்கள் தலைவா்கள் தவறாக இருப்பதற்கு காரணமாகவும் இருக்கிறது.
சமூகத்தில் எங்கு அநீதி நடந்தாலும் அதற்கு எதிராக குரல் கொடுக்க பின்நிற்க கூடாது எனத் தெரிவித்த பேராசியர் சிவசேகரம். மக்கள் தங்களுக்குள் அரசியல் சாதி இன மத பிரதேசவாதங்களால் பிளவுபட்டு நிற்பது மக்களையே பலவீனப்படுத்துகிறது எனவும் தெரிவித்தார்.