தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் நகரில் உள்ள கட்கேசர் பகுதியை சேர்ந்தவர் ரவிதேஜா(12). இங்குள்ள அரசு பள்ளியொன்றில் ஐந்தாம் வகுப்பில் தேர்வு பெற்று உறைவிடப் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், நேற்று பிற்பகல் ஹப்சிகுடா மெயின் ரோட்டில் இருந்த சாலை பள்ளங்களை, சிறுகற்கள் மற்றும் ரப்பிஷ் ஆகியவற்றை கொண்டு மூடும் பணியில் ரவிதேஜா ஈடுபட்டு கொண்டிருந்தார்.
போக்குவரத்து நெரிசல் குறித்தோ, வாகனங்கள் வெளியிடும் புகை குறித்தோ அவன் சிறிதும் கவலைப்படுவதாக தெரிவதில்லை. அந்த வழியாக சென்ற பலர், ரவிதேஜாவினது செயலைப் பார்த்து பாராட்டு தெரிவித்தனர்.
இதுகுறித்து ரவிதேஜா கூறுகையில், ’’சமீபத்தில் ரெங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள செவல்லா பகுதியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சென்னாரி என்ற சிறுமி மரணம் அடைந்ததை என்னால் மறக்க முடியாது.
நான் சாலையில் செல்லும்போது பலர் பள்ளங்களில் விழாமல் இருக்கும் வகையில் பயந்தவாறு வாகனங்களை ஓட்டிச் செல்வதை பார்த்து வருகிறேன். ஆனாலும், சிலர் அந்த பள்ளங்களில் விழுந்து செல்வதையும் பார்த்துள்ளேன். இனி, வாகனத்தில் செல்பவர்கள் இதுபோல் பள்ளங்களில் விழுந்து உயிரை விடுவதை நான் விரும்பவில்லை.
எனவே, சாலையில் உள்ள பள்ளங்களை நானே மூட முடிவு செய்தேன். அதற்காக சிறிய கற்கள் மற்றும் களிமண் கட்டிகளை சேகரித்து சாலையில் இருக்கும் பள்ளங்களை மூடி வருகிறேன். இந்த பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருவேன். விரைவில் எனது நண்பர்களும் இந்த சேவையில் ஈடுபட உள்ளனர்’’ என தெரிவித்தார்.
எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் சேவை செய்துவரும் ரவி தேஜாவுக்கு, அப்பகுதியை சேர்ந்த பலரும் தங்களது பாராட்டுதல்களை தெரிவித்து வருகின்றனர்.
maalaimalar