235
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மாணவி “ஐயோ விடுங்கடா , விடுங்கடா ” என குழறி அழ அவரின் வாயை பொத்தி அவரை பற்றைக்குள் இழுத்து சென்றனர் என மாணவி கொலை வழக்கின் 03ஆவது சாட்சியமான கண்கண்ட சாட்சியமான நடராஜா புவனேஸ்வரன் சாட்சியம் அளித்து உள்ளார்.
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு விசாரணைகளின் இரண்டாம் நாள் சாட்சி பதிவுகள், இன்றைய தினம் வியாழக்கிழமை யாழ்.நீதிமன்ற கட்டட தொகுதியின் இரண்டாம் மாடியில் மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையில் மேல் நீதிமன்ற நீதிபதிகள் அன்னலிங்கம் பிரேமசங்கர் மற்றும் மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகியோர் முன்னிலையில் ” ரயலட் பார் முறைமையில் நடைபெற்றது.
அதன் போது வழக்கின் மூன்றாவது சாட்சியமான மாப்பிள்ளை என்று அழைக்கப்படும் நடராஜா புவனேஸ்வரன் மாலை 4 மணியளவில் தனது சாட்சியத்தை அளித்தார்.
நான் சீவல் தொழில் செய்கிறவன். பெரியாம்பியும் சுரேஷ்கரன் ஆகிய இருவரும் வழமையாக என் வீட்டுக்கு வந்து கள்ளு வாங்கி குடிக்கிறவர்கள். ஒருநாள் தான் வித்தியாவை காதலிப்பதாகவும் , அவரையே திருமணம் செய்ய போவதாகவும் பெரியாம்பி என்னிடம் கூறினார்.
சம்பவ தினத்திற்கு முதல் நாள் 12ஆம் திகதி என்னை வித்தியா பாடசாலை செல்லும் வழிக்கு பெரியாம்பியும், சந்திரஹாசனும் அழைத்து சென்றனர். அன்றைய தினம் வித்தியா வேறு ஒரு மாணவியுடன் வந்ததால் ஒன்றும் கதைக்கவில்லை.
பற்றைக்குள் மறைந்து இருந்தோம்.
மறுநாள் 13ஆம் திகதி (சம்பவ தினத்தன்று) மீண்டும் வித்தியா பாடசாலை செல்லும் வழியில் ஆலடி சந்திக்கு அருகில் வித்தியாவுக்காக காத்திருந்தோம். வித்தியா வரும் வேளை என்னையும் சுரேஷ்கரனையும் அருகில் இருந்த பற்றைக்குள் ஒளிந்து இருக்குமாறு பெரியாம்பியும் சந்திரஹாசனும் கூறினார்கள். நாமும் பற்றைக்குள் மறைந்து இருந்தோம்.
அவ்வேளை அந்த இடத்திற்கு ரவியும் , தவக்குமாரும் வந்திருந்தார்கள். அந்நேரம் வித்தியா பாடசாலை சீருடையுடன் காலில் சப்பாத்துடன் சைக்கிளில் வந்து கொண்டு இருந்தார். அவருடைய சைக்கிள் முன் கூடைக்குள் குடை ஒன்றும் இருந்தது.
சைக்கிளில் வந்த வித்தியா அவர்கள் அருகில் வந்ததும் சந்திரஹாசனும் , பெரியாம்பியும் மறித்தனர். பின்னர் சந்திரஹாசன் பெரியாம்பி ரவி , மற்றும் தவக்குமார் ஆகிய நால்வரும் வித்தியாவை பிடித்து இழுத்து சென்றனர். அப்போது வித்தியா கத்தினார். உடனே பெரியாம்பி வாயை பொத்தினார். வித்தியாவின் மூக்கு கண்ணாடியையும் பெரியாம்பியே கழட்டி எடுத்தான். பின்னர் நால்வருமாக வித்தியாவை பற்றைகள் ஊடாக பாழடைந்த வீட்டுக்குள் இழுத்து சென்றனர்.
குழறி அழுதார்.
அப்போது பெரியாம்பி வித்தியாவிடம் ‘ நான் உன்னை காதலிக்கிறேன். உனக்கு விருப்பமில்லையா ” என கேட்டான். அப்போது வித்தியா “ஐயோ விடுங்கடா , விடுங்கடா ” குழறி அழுது கொண்டு இருந்தார். மீண்டும் பெரியாம்பி வித்தியாவின் வாயை பொத்தினான்.
பின்னர் வித்தியா மயங்கிய நிலையில் அவரை கைத்தாங்கலாக நால்வரும் தூக்கி வந்து சுமார் 50 மீற்றர் தூரத்தில் உள்ள அலரி மரம் ஒன்றில் வித்தியாவை கட்டினார்கள். அவரின் ஆடைகளை அவரின் உடலின் மீது போட்டார்கள். பின்னர் பாடசாலை சீருடையின் இடுப்பு பட்டியினால் கைகள் இரண்டையும் ஒன்றாக கழுத்துக்கு பின்னால் வைத்து கட்டினார்கள். பாடசாலை பையின் நாடாவால் ஒரு காலை இழுத்து மரத்துடன் கட்டினார்கள். சப்பாத்து நூல்களினாலும் கட்டினார்கள்.
இவ்வளவு சம்பவமும் ஒன்று , ஒன்றேகால் மணித்தியாலங்கள் நடைபெற்றது. அதன் பின்னர் நான் 8.30 மணியளவில் சீவல் தொழிலுக்காக சென்று விட்டேன். 09.15 மணியளவில் பெரியாம்பியும் , சந்திரஹாசனும் சுரேஷ்கரனும் என் வீட்டுக்கு வந்து கள்ளு வாங்கி குடித்தார்கள். பிறகு பின்னேரமும் கள்ளு வாங்க வீட்டுக்கு வந்தார்கள் அன்றைய தினம் மழை பெய்தமையால் நான் தொழிலுக்கு போகவில்லை. அதனால் கள்ளு இல்லை என கூறி அவர்களை அனுப்பி விட்டேன்.
சுவிஸ் குமாரை எனக்கு அறிமுகப்படுத்தியது பெரியாம்பி தான். அவர் வெளிநாடு கொண்டு செல்வதற்காக தான் இந்த வீடியோவை எடுத்ததாக பெரியாம்பி எனக்கு கூறினான்.
ஊர்காவற்துறை போலீசில் செல்வாக்கு உள்ளவர்கள்.
இந்த சம்பவங்கள் தொடர்பாக நான் பொலிசாரிடம் சொல்லவில்லை. ஏனெனில் இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் ஊர்காவற்துறை பொலிசாருடன் நெருங்கிய தொடர்பினை கொண்டவர்கள். அது மட்டுமின்றி பணபலம் படைத்தவர்கள். அதனால் சம்பவம் குறித்து நான் சொல்லவில்லை. இந்த சம்பவம் இடம்பெற்ற சில காலத்தின் பின்னர் எனக்கு தொலைபேசி மூலம் மிரட்டலும் விடுக்கப்பட்டு இருந்தது என தனது சாட்சியத்தில் தெரிவித்தார்.
எதிரிகளை அடையாளம் காட்டினார்.
அத்துடன் எதிரி கூண்டில் நின்ற 6ஆவது எதிரியான பெரியாம்பி என அழைக்கப்படும் சிவதேவன் துஷாந்த் , 5ஆவது எதிரியான சந்திரகாசன் என அழைக்கப்படும் தில்லைநாதன் சந்திரஹாசன் , 3ஆவது எதிரியான செந்தில் என்று அழைக்கப்படும் பூபாலசிங்கம் தவக்குமார் 2ஆவது எதிரியான ரவி என அழைக்கப்படும் பூபாலசிங்கம் ஜெயக்குமார் 9ஆவது எதிரியான சுவிஸ் குமார் என அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமார் , 4ஆவது எதிரியான சசி என அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமார் 7ஆவது எதிரியான நிஷாந்தன் என அழைக்கபப்டும் பழனி ரூபசிங்கம் குகநாதன் மற்றும் 8ஆவது எதிரியான கண்ணன் என்று அழைக்கப்படும் ஜெயதரன் கோகிலன் ஆகிய எதிரிகளை சாட்சி தனது சுட்டு விரலால் சுட்டிக்காட்டி அடையாளம் காட்டினார். அத்துடன் மாணவியின் சைக்கிளை , முன் கூடையையும் , சீற்றையும் வைத்து அடையாளம் காட்டினார்.
அதனை தொடர்ந்து 03ஆவது சாட்சியத்தின் சாட்சியம் முடிவுறுத்தப்பட்டு நாளைய (வெள்ளிக்கிழமைக்கு) மூன்றாம் நாள் சாட்சி பதிவுக்காக வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
Spread the love