192
குளோபல் தமிழ்ச்செய்தியாளர்
அரச தரப்பு சாட்சியாக தன்னை மாற்ற குற்றபுலனாய்வு துறை அதிகாரி உதவினால் அவருக்கு தான் 2 கோடி ரூபாய் பணம் வழங்க தயார் என தன்னிடம் சுவிஸ் குமார் தெரிவித்ததாக ஆறாவது சாட்சியான முஹமட் இப்ரான் என்பவர் ரயலட் பார் முன்னிலையில் சாட்சியம் அளித்துள்ளார்.
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு விசாரணைகளின் மூன்றாம் நாள் சாட்சி பதிவுகள், இன்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழ்.நீதிமன்ற கட்டட தொகுதியின் இரண்டாம் மாடியில் மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையில் மேல் நீதிமன்ற நீதிபதிகள் அன்னலிங்கம் பிரேமசங்கர் மற்றும் மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகியோர் முன்னிலையில் ” ரயலட் பார் முறைமையில் நடைபெற்றது.
பிரதி சொலிஸ்டர் ஜெனரல் வழக்கை நெறிப்படுத்தினார்.
இன்றைய வழக்கு விசாரணைகளின் போது பிரதி சொலிஸ்டர் ஜெனரல் குமார் இரட்ணம் தலைமையில் அரச சட்டவாதிகளான நாகரத்தினம் நிஷாந்த், ஷகிப் ஸ்மாயில் , லக்சி டீ சில்வா மற்றும் மாலினி விக்னேஸ்வரன் ஆகியோர் முன்னிலையாகி இருந்தனர்.
எதிரிகள் சார்பில் 5 சட்டத்தரணிகள் முன்னிலை.
1ம் ,2ம் , 3ம் , 5ம் மற்றும் 6ம் எதிரிகள் சார்பில் சட்டத்தரணி மஹிந்த ஜெயவர்த்தன மற்றும் சட்டத்தரணி சரங்க பாலசிங்க , ஆகியோரும் 5ம் எதிரியின் சார்பில் சட்டத்தரணி ஆறுமுகம் ரகுபதியும் 4ம், 7ம் , மற்றும் 9ம் எதிரிகள் சார்பில் சட்டத்தரணி சின்னராசா கேதீஸ்வரன் ஆகியோர் முன்னிலையாகி இருந்தனர். அத்துடன் மன்றினால் 9 எதிரிகள் சார்பில் நியமிக்கப்பட்ட சட்டத்தரணி விக்னேஸ்வரன் ஜெயந்தாவும் முன்னிலை ஆகி இருந்தார்.
எதிரிகள் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.
எதிரிகளான பூபாலசிங்கம் இந்திரகுமார், பூபாலசிங்கம் ஜெ யக்குமார், பூபாலசிங்கம் தவக்கு மார் , மகாலிங்கம் சசிதரன் , தில்லைநாதன் சந்திரகாசன் , சிவதேவன் துஷாந்த் , பழனி ரூபசிங்கம் குகநாதன் , ஜெயதரன் கோகிலன் , மற்றும் மகாலிங்கம் சசிக்குமார் ஆகிய ஒன்பது எதிரிகளும் மன்றில் முற்படுத்தப்பட்டனர்.
அதனை தொடர்ந்து இன்றைய தினம் மூன்றாம் நாள் சாட்சி பதிவுகள் ஆரம்பமானது, அதன் போது குறித்த வழக்கின் ஆறாவது சாட்சியும் சுவிஸ்குமாருடன் சிறையில் தடுத்து வைக்கப்பட்டு இருந்தவருமான முஹமட் இப்ரான் என்பவர் சாட்சியம் அளிக்கையில் ,
நான் கணணி மென்பொருள் பொறியியல் துறை சார்ந்தவன். 2014ஆம் ஆண்டு கால பகுதியில் எனது வங்கி அட்டையினை பிறிதொருவருக்கு வழங்கி இருந்தேன் அவர் அதனை மோசடி செய்து பண மோசடியில் ஈடுபட்டு இருந்தார். அந்த வங்கி அட்டைக்கு உரியவன் நான் என்பதனால் எனக்கு எதிராக கொழும்பு கோட்டை நீதிமன்றம் , புத்தளம் நீதிமன்றம் மற்றும் வவுனியா நீதிமன்றில் 11 வழக்குகள் உள்ளன. அவையனைத்தும் நிதி மோசடி வழக்கு. மொத்தமாக 13இலட்ச ரூபாய் நிதி மோசடி செய்தேன் என்பது என் மீதான வழக்கு .
நான் கணணி துறையில் ஆர்வம் இருந்ததினால் அது சார்ந்து கற்று இருந்தேன். மென்பொருட்களை பயன்படுத்தியும் , நேரடியாகவும் பிறிதொருவரின் கணணியை என்னால் ஹக் பண்ண முடியும். அதில் எனக்கு அனுபவம் நிறைய உண்டு.
அதேபோன்று தொலைபேசியில் அழிக்கப்பட்ட தரவுகளை என்னால் மீள எடுக்க முடியும். அதற்கான மென்பொருள் ஒன்றினையும் நான் தயாரித்து உள்ளேன்.
வவுனியா நீதிமன்றில் நடைபெறும் வழக்கு தவணைக்காக என்னை வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைத்து இருந்தார்கள். அந்த கால பகுதியிலையே சுவிஸ் குமாரை எனக்கு தெரியும்.
வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டு இருந்த கால பகுதியில் , ஒரு நாள் மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவர்கள் சிறைச்சாலைக்கு வந்து இருந்தார்கள். மருத்துவ பரிசோதனை நடைபெற்ற இடம் சிறைச்சாலை அத்தியட்சகரின் அறைக்கு அருகாமையில் இருந்த அறையில், அப்போது அதன் முன் பகுதியில் வித்தியா வழக்குடன் சம்பந்தப்பட்ட நபர்களிடம் குற்றபுலனாய்வு துறையினர் வாக்கு மூலத்தினை பெற்றுக்கொண்டு இருந்தார்கள்.
சிறைகூடத்தில் இருந்து மூன்று மூன்று கைதிகளாக தான் மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து வருவார்கள். அப்போது நான் முதலாவதாக மருத்துவ பரிசோதனையை முடித்துக்கொண்டு வெளியில் வந்து, என்னுடன் வந்த மற்றைய இவர்களின் மருத்துவ பரிசோதனை முடியும் வரையில் காத்திருந்தேன்.
அவ்வேளை வித்தியாவின் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபர்களிடம் IP நிஷாந்த சில்வா அவர்களுடன் வந்த ஏனைய குற்ற புலனாய்வு துறையினர் வாக்கு மூலங்களை பதிவு செய்து கொண்டு இருந்தனர். IP நிஷாந்த சில்வா அவ்விடத்தில் நின்று இருந்தார்.
அவர் தான் என்னுடைய வழக்கு தொடர்பிலும் விசாரணை செய்தவர். அதனால் நான் ஒரு கணணி மென்பொருள் பொறியியலாளன் என்பது தெரியும். அதனால் என்னிடம் கேட்டார் ” தொலைபேசியில் அளிக்கப்பட்ட தரவுகளை மீள எடுக்க முடியுமா ? ” என கேட்டார். அதற்கு நான் ஆம் என்றேன். அதனை அங்கே வாக்கு மூலம் கொடுக்க இருந்த சுவிஸ் குமார் கேட்டு இருக்க வேண்டும்.
மென்பொருளை பயன்படுத்தி தரவுகளை அழித்தார்களா ?
அதன் பின்னர் சுவிஸ் குமார் என்னை சந்தித்து கேட்டார் தொலைபேசியில் அழிக்கப்பட்ட தரவுகளை மீள எடுக்க முடியுமா ? என நான் ஆம் என்றேன். அப்போது திரும்ப கேட்டார் மென்பொருளினை பயன்படுத்தி அழிக்கப்பட்ட தரவுகளையும் எடுக்க முடியுமா ? என அதற்கு நாம் ஆம் என்னால் முடியும் என்றேன்.
சாதரணமாக தொலைபேசி பாவிக்கின்றவர்கள். அதில் உள்ள தரவுகளை அழிப்பது என்றால் சாதரணமாக தான் அழிப்பார்கள். மென்பொருள் ஊடாக அழிப்பது என்றால் அதில் எதோ பிரச்சனை இருப்பதாக புரிந்து கொண்டேன்.
சுவிஸ்குமார் என்னுடன் இது தொடர்பில் கதைத்த மறுநாள் நான் மகசீன் சிறைக்கு மாற்றப்பட்டுவிட்டேன். கொழும்பு கோட்டை நீதிமன்றில் உள்ள வழக்குக்காக. நான் வவுனியா நீதவான் நீதிமன்றினால் விளக்க மறியலில் தடுத்து வைக்கப்பட்டு இருந்தமையால் 14 நாட்களுக்கு ஒரு முறை என்னை வவுனியா நீதிமன்றில் முற்படுத்த வேண்டும். ஆனால் அந்த தவணை எனக்கு கொழும்பில் வழக்கு இருந்தமையால் வவுனியாவுக்கு அழைத்து வரவில்லை. அடுத்த தவனைக்கே என்னை அழைத்து வந்தார்கள்.
அப்போ என்னை சந்தித்த சுவிஸ் குமார் ஏன் போன தவணைக்கு அழைத்து வரவில்லை ? என கேட்டார். அதற்கு நான் சொன்னேன். கொழும்பில் பிறிதொரு வழக்கு இருந்தமையால் அழைத்து வரவில்லை என . அப்போது சுவிஸ் குமார் கேட்டார் , வழக்குக்காகதான் வரவில்லையா அல்லது குற்ற தடுப்பு புலனாய்வு துறையினரை சந்திக்க போனீயா ? என . அப்போது நான் சொன்னேன் அவர்களை சந்திச்சுட்டு தான் வாறன். அவர்கள் உங்கள் தொலைபேசி பற்றி என்னுடன் கதைத்தார்கள் என சும்மா சொன்னேன். அதற்கு சுவிஸ் குமார் சொன்னார் உன்னை தனியாக சந்திக்க வேண்டும் நான் சந்திப்பது ஏனைய 8 பேருக்கும் தெரிய கூடாது என சொல்லி என்னை தனியாக மறுநாள் சந்தித்தார்.
அரச தரப்பு சாட்சியாக மாற 20 கோடி கொடுக்க தயார்.
மறுநாள் சுவிஸ் குமாரை நான் தனியாக சந்தித்த போது , அவர் என்னிடம் கேட்டார் IP நிஷாந்த சில்வாவின் பலவீனம் என்ன என . அதற்கு நான் அது தெரியாது உங்களுக்கு அவரிடம் என்ன வேண்டும் என கேட்டேன். வித்தியா வழக்கில் நாங்கள் மூன்று பேர் சகோதர்கள் நாம் அரச சாட்சியாக மாற வேண்டும் அதற்கு IP நிஷாந்த சில்வாவுடன் கதைத்து ஏற்பாடு செய்து தருமாறு சுவிஸ் குமார் கேட்டார்.
அவ்வாறு செய்தால் IP நிஷாந்த சில்வாவுக்கு என்ன கொடுப்பீர்கள் என கேட்டேன். 2 கோடி ரூபாய் பணம் கொடுக்க முடியும் என தெரிவித்தார். இவ்வாறு நாம் பேசிக்கொண்டு இருந்த வேளை சுவிஸ் குமாரை யாரோ சந்திக்க சிறைச்சாலைக்கு வந்து இருக்கின்றார்கள் என தெரிவித்து சுவிஸ் குமார் சென்று விட்டார். மீண்டும் என்னை திரும்ப சந்தித்த சுவிஸ் குமார் மூன்று பேரை அரச சாட்சியாக மாற்ற முடியாது. ஒருவரை தான் மாற்ற முடியும் என தெரிவித்து தன்னை மட்டும் IP நிஷாந்த சில்வாவுடன் கதைத்து அரச சாட்சியாக மாற்றி விடும் படி என்னிடம் கேட்டார். இந்த தகவல் ஏனைய எட்டு பேருக்கும் தெரிய கூடாது என என்னிடம் சொன்னார்.
அதன் பின்னர் மறுநாள் என்னை மகசீன் சிறைச்சாலைக்கு அழைத்து சென்று விட்டனர். பின்னர் சிறிது காலத்தில் நான் மீண்டும் வவுனியா சிறைச்சாலைக்கு கொண்டு வந்த போது மீண்டும் சுவிஸ் குமாரை சந்தித்தேன். அப்போது அவருக்கு சொன்னேன் IP நிஷாந்த சில்வாவுடன் கதைப்பது என்றால் எனக்கு காரணம் தெரிய வேண்டும் என சொன்னேன்.
சுவிஸ் நாட்டு மாபியா குழுவுடன் தொடர்பு.
அப்போது சுவிஸ் குமார் சொன்னார் , நான் சுவிஸ் நாட்டில் இருந்தேன். அங்குள்ள மாபியா குழு ஒன்று தெற்காசிய நாட்டு இளம் பெண் ஒருவரை கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி படுகொலை செய்வதனை வீடியோ எடுத்து தருமாறு என்னுடன் ஒப்பந்தம் செய்திருந்தனர்.
அதனை தொடர்ந்து நான் இலங்கையில் உள்ள ஒருவருடன் தொடர்பு கொண்டு அது பற்றி கூறினேன். 20 வயதுக்கு உட்பட்ட பெண் பிள்ளை ஒருவர் தேவை என சொன்னேன். அவர் ஒரு பெண்ணின் புகைப்படத்தை எனக்கு அனுப்பி வைத்தார். அந்த பெண் ஓகே என்றேன். என சுவிஸ் குமார் என்னிடம் கூறினார் நான் யாருடன் இலங்கையில் உள்ள நபருடன் தொடர்பு கொண்டீர் என கேட்டதற்கு இங்கு எதிரி கூண்டில் ஆறாவது நபராக உள்ளவரை (சிவதேவன் துஷாந்தன் ) சுவிஸ் குமார் எனக்கு காட்டி இருந்தார்.
இதில் ஆறாவதாக உள்ள நபருடன் சேர்ந்து இலங்கையில் உள்ள ஏனையவர்கள் ஏற்பாடு செய்தனர். அதற்காக அந்த பெண்ணின் தாயாருடன் பெரிதொரு வழக்கில் தொடர்புடைய ஏனைய மூன்று பேரையும் தம்முடன் கூட்டு சேர்ந்தனர். என சுவிஸ் குமார் என்னிடம் கூறினார்.
பின்னர் மீண்டும் நான் மகசீன் சிறைக்கு கொண்டு செல்லபட்டேன். அங்கே IP நிஷாந்த சில்வாவிடம் சுவிஸ் குமார் சொன்ன விடயங்களை சொன்னேன். அவர் அங்கு வைத்து எனது வாக்கு மூலத்தை பதிவு செய்தார்.
வித்தியாவுக்கு நடந்தது தான் உன் மனைவிக்கும் என மிரட்டல்.
அது எப்படியோ சுவிஸ் குமாருக்கு தெரிந்து விட்டது. நான் மீண்டும் வவுனியா சிறைக்கு வந்த போது குற்ற தடுப்பு புலனாய்வு துறையினருக்கு சொன்ன விடயத்தை நீதிமன்றில் சொல்ல கூடாது சொன்னால் ஏனைய வழக்குகளுக்கு போய் வரும் வேளைகளில் உனக்கு உயிர் ஆபத்து ஏற்படும் என என்னை மிரட்டினர். அத்துடன் உன் மனைவிக்கும் வித்தியாவுக்கு நடந்து போன்றே நடக்கும் எனவும் மிரட்டினார்.
இந்த அச்சுறுத்தல்கள் தொடர்பில் மகசீன் சிறைச்சாலை உத்தியோகஸ்தர்களுக்கும் , புத்தளம் நீதிமன்றிலும் தெரியபபடுத்தினேன்.
கூகிள் ரைவ் மூலம் வீடியோ அனுப்பப்பட்டது.
வீடியோவை தொலை பேசி ஊடாக அனுப்பியுள்ளார்கள். அவர் அதனை கூகிள் டிரைவ் மூலம் வெளிநாட்டுக்கு அனுப்பியுள்ளார்.
அரசியல்வாதியின் தம்பியின் உதவியுடன் தப்பினேன்.
நான் யாழ்ப்பாணத்தில் இருந்து அரசியல் வாதியின் தம்பி ஒருவரின் உதவியுடன் தான் தப்பி கொழும்புக்கு வந்தேன். அரசியல் வாதியின் தம்பியே வாகன ஒழுங்குகளை செய்திருந்தார். அதன் ஊடக போலிஸ் உயர் அதிகாரி ஒருவரின் துணையுடன் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு தப்பி வந்து வெள்ளவத்தையில் மற்றுமொரு சுவிஸ் நாட்டை சேர்ந்த ஒருவருடன் தங்கி இருந்த போதே என்னை வெள்ளவத்தை போலீசார் கைது செய்தனர் என சுவிஸ் குமார் என்னிடம் தெரிவித்தார்.
ஒருவருக்கு வழக்கில் சம்பந்தம் இல்லை.
ஒருநாள் இந்த வழக்கில் உள்ள அண்ணன் தம்பிகள் மூவரும் இந்த வழக்குடன் சம்பந்தப்பட்டவர்கள் இல்லை போல உள்ளதே என சுவிஸ் குமாரிடம் நான் கேட்டேன். அதற்கு அவர் ஆம் அதில் இருவரே சம்பந்தப்பட்டவர்கள் மற்றைய ஒருவருக்கு இந்த வழக்கில் சம்பந்தம் இல்லை என சொன்னார் ஆனால் அது யார் என்று சொல்லவில்லை என தனது சாட்சியத்தை பதிவு செய்தார்.
அதனை தொடர்ந்து எதிரி தரப்பு சட்டத்தரணியான மஹிந்த ஜெயவர்த்தன குறுக்கு விசாரணையின் போது ,
சாட்சியத்திடம் இந்த வழக்கின் எதிரிகளை சிறைச்சாலையில் , சித்திரவதைக்கு உட்படுத்தியதை நீர் கண்டீரா என கேட்டார் ? அதற்கு நீதிபதிகள் மூவரும் எதிரிகள் தம்மை சித்திரவதை செய்தனர் என எங்கும் முறைப்பாடு செய்யவில்லை எனவே அந்த கேள்வியை நிராகரிக்கின்றோம் என அறிவித்தனர்.
அதனை தொடர்ந்து , சாட்சியத்திடம் ” உமக்கு நிதி தேவைப்பட்டு உள்ளது. அதனால் IP நிஷாந்த சில்வாவை தெரியும் என எதிரிகளுக்கு கூறி அவர்களை மிரட்டி அவர்களிடம் இருந்து பணம் பறிக்க முற்பட்டீர் என கூறுகிறேன் என எதிரி தரப்பு சட்டத்தரணி கூறினார். அதற்கு சாட்சியம் அவ்வாறு இல்லை என பதிலளித்தார்.
அதனை தொடர்ந்து எதிரி தரப்பு சட்டத்தரணி சி. கேதீஸ்வரன் , இந்த எதிரிகளுடன் பணம் கேட்டு முரண்பட்டு உள்ளீர். அது தொடர்பில் நீதிமன்றின் கவனத்திற்கு எதிரிகள் கொண்டு வந்துவிடுவார்களோ எனும் பயத்தின் காரணமாக இவர்களுக்கு எதிராக பொய் சாட்சியம் அளிக்கின்றீர் என சாட்சியத்திடம் கூறினார். அதற்கு சாட்சி அவ்வாறு இல்லை என பதிலளித்தார். அதையடுத்து 6 ஆவது சாட்சியத்தின் சாட்சி பதிவு முடிவுறுத்தப்பட்டது.
வழக்கு திங்கட்கிழமைக்கு ஒத்திவைப்பு.
அதனை தொடர்ந்து வழக்கு விசாரணைகளை எதிர்வரும் 03ஆம் திகதி திங்கட்கிழமை காலை 09 மணிக்கு ஒத்திவைத்த நீதிபதிகள் அதுவரையில் எதிரிகளை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு இட்டார்கள்.
குளோபல் தமிழ்ச்செய்தியாளர்:-
Spread the love