சுமார் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த மன்னார் மடு மாதா ஆடித்திருவழிவின் விண்ணேற்பு விழா நாளை காலை இடம்பெறவுள்ளது. மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலர் ஆயர் யோசப் கிங்சிலி சுவம் பிள்ளை ஆண்டகை தலைமையில் நாளை காலை திருப்பலி ஒப்புக்கொடுக்கும் நிகழ்வு இடம்பெறும்.
அத்துடன் திருகோணமலை மறைமாவட்ட ஆயர் நோயல் இம்மானுவல், அனுராதபுரம் மறைமாவட்ட ஆயர் நோபட் அன்றாடி ஆகியோரும் இணைந்து கூட்டுத்திருப்பலியினை ஒப்பக்கொடுக்கவுள்ளனர்.
வரலாற்றில் மடு மாதா
தமிழ் மக்களின் பகுதியில் இருந்தமையால் தமிழ் மக்கள் எதிர்கொண்ட இன்னல்களை எதிர்கொண்ட இவ்வாலயம் போர்காலத்தில் மக்களுக்கு அடைக்கலம் வழங்கியிருந்தது. எனினும் நாலாம் ஈழப்போரில் மடுமாதாவும் இடம்பெயர நேர்ந்தது.
ஈழப்போர் தொடங்கியதில் இருந்து இவ்வாலயத்திற்கு செல்வோரின் தொகை பல மடங்கு குறைந்தது. போரினால் இடம்பெயர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் இவ்வாலயச் சுற்றுவட்டத்தில் பாதுகாப்புக் அகதிகளாக தஞ்சமடைந்திருந்தனர்.
ஏப்ரல் 2008 இல் ஆலயத்தை நோக்கி இலங்கை இராணுவத்தினர் தொடர்ச்சியாக நடத்திய பலத்த எறிகணை வீச்சினால் ஆலயம் பலத்த சேதத்துக்குள்ளாகியது.
பாதுகாப்புத் தேடி அங்கு அடைக்கலமடைந்திருந்ந்த மக்கள் அனைவரும் வேறு இடத்தை நோக்கி இடம்பெயர்ந்தனர். அந்த ஆலயத்தில் இறுதியாகத் தங்கியிருந்த குருக்கள் மற்றும் பணியாளர்களும் அங்கிருந்து வெளியேறினர்.
இதனை அடுத்து தேவாலயத்தில் 400 ஆண்டுகளாக அருள் பாலித்து வரும் அன்னையின் திருவுருவச் சிலை ஏப்ரல் 4, 2008, மன்னார் தேவன்பிட்டி புனித சவேரியர் ஆலயத்துக்கு இடம்பெயர்ந்து கொண்டு செல்லப்பட்டதும் இவ்வாலயத்தின் வரலாற்றின் முக்கியதானதொரு குறிப்பாகும்.