கும்பகோணம் கதிராமங்கலம் மக்களுக்கு ஆதரவாக போராட்டம் நடைபெறுவதனை தடுப்பதற்காக சென்னை மெரினாவில் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
கதிராமங்கலத்தில் 12 இடங்களில் ஓஎன்ஜிசி நிறுவனம் எண்ணெய் எடுத்து வருகின்ற நிலையில் கடந்த 2 மாதங்களாக எண்ணெய் கொண்டு செல்லப்படும் குழாய்களை பராமரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் கடந்த இரண்டு மாதங்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசி நிறுவனம் அமைத்த எண்ணெய் குழாய்களில் நேற்று திடீர் கசிவு ஏற்பட்டதனால் மாவட்ட ஆட்சியர் எண்ணெய் கசிவு ஏற்பட்ட இடத்தை பார்வையிட வேண்டும் என அப்பகுதி மக்கள்; வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எனினும் மாவட்ட ஆட்சியர் வராமல் காவல்துறை அதிகாரிகளே கசிவு ஏற்பட்ட பகுதியில் ஆய்வு செய்தனர். இதற்கு ஏதிர்ப்பு தெரிவித்த கிராம மக்கள் காபவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இந்தநிலையில் திடீரென எண்ணெய் கசிவு ஏற்பட்ட இடத்தில் திடீரென தீப்பிடித்துள்ளது. தீயை அணைத்த காவல்துறையினர் பொதுமக்கள் மீது தடியடி மேற்கொண்டு கூட்டத்தை கலைக்க முயன்றனர். இதனால் காவல்துறையினருக்கும் மக்களும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் பலர் கைது செய்யப்பட்டனர். இதனைக் கண்டித்து அங்கு இன்றும் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில் கதிராமங்கலம் மக்களுக்கு ஆதரவாக சென்னை மெரினாவில் போராட்டம் நடத்தப்படும் என தகவல் பரவியது. இதையடுத்து அங்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
200க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். ஜல்லிக்கட்டுக்காக நடைபெற்ற போராட்டத்தை போன்று கதிராமங்கலம் மக்களுக்காக போராட்டம் நடைபெற்றுவிடக் கூடாது என முன்னெச்சரிக்கைக்காக காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.