Home இலங்கை விக்னேஸ்வரனை ஏன் பலப்படுத்த வேண்டும்? நிலாந்தன்

விக்னேஸ்வரனை ஏன் பலப்படுத்த வேண்டும்? நிலாந்தன்

by admin

  

கடந்த வாரம் நடந்து முடிந்த கம்பன் விழாவில் வடக்கிலுள்ள கணிசமான அரசியல்வாதிகளையும் துறைசார் படிப்பாளிகளையும் காணமுடிந்தது. மாகாணசபைக்குள் கீரியும் பாம்புமாகக் காணப்படும் அரசியல்வாதிகள் பலரும் கம்பன் விழாவில் முன்வரிசையில் காணப்பட்டார்கள் . அவர்கள் மட்டுமல்ல விக்னேஸ்வரனின் தலையைச் சுற்றி ஒளிவட்டத்தை வரையும் ஒரு பத்திரிகாதிபரும் விக்னேஸ்வரன் எங்கே பிழைவிடுவார் என்று கண்டுபிடிக்க காத்திருக்கும் மற்றொரு பத்திரிகாதிபரும் கூட கம்பன் விழாவில் காணப்பட்டார்கள்.  விழாவின் இறுதிநாள் உரைநிகழ்த்திய கம்பன் கழக நிறுவுனர்  ஜெயராஜ் பின்வரும் தொனிப்பட உரையாற்றியிருந்தார்  ‘இங்கே மாகாணசபை உறுப்பினர்களைக் கண்டபோது இது மாகாணசபையா அல்லது கம்பன் கழகமா? என்று சந்தேகம் ஏற்பட்டது.  ஆனால் அவர்கள் அமைதியாக அமர்ந்திருப்பதைக் கண்டதும் இது கம்பன் கழகம்தான்  என்று  தெரிகிறது’ என்று.

அதாவது மாகாண சபைக்குள் கீரிகளும் பாம்புகளுமாகக் காணப்பட்ட அரசியல்வாதிகள் கம்பன் விழாவில் அமைதியாக அமர்ந்திருந்தார்கள்.  விக்னேஸ்வரனுக்கு ஆதரவாகவும் எதிராகவும் நிற்கும் அரசியல் வாதிகளும் பத்திரிகாதிபர்களும் அங்கே அமைதியாக அமர்ந்திருந்தார்கள். அவர்களைப் பொறுத்த வரை மாகாண சபையைவிட பொதுத்தன்மை அதிகமுடைய ஓர் அரங்காக கம்பன் விழாவை அவர்கள் பார்த்தார்களோ என்னவோ?

வடமாகாணசபைக்குள் அவர்கள் ஏற்படுத்திய குழப்பத்தை ஒரு கிரிக்கெற் ஆட்டத்தைப் போல் பார்த்திருந்ததாக வடமாகாண சபை ஆளுனர் கூறியிருந்தார்.  வடமாகாணசபைக்குள் வந்த குழப்பம் அதற்கு வெளியே இருந்து பார்க்கும் பலருக்கு பகிடிக்குரிய ஒன்றாக தெரிகிறது.  நம்பிக்கையில்லாத் தீர்மானம் பின்வாங்கப்பட்ட பின் நடந்த மாகாணசபை அமர்வு ஒப்பீட்டளவில் அமைதியாக காணப்பட்டது.  அதுவும் ஓரு வழமைக்கு மாறான விடயமாக ஊடகங்களில் காட்டப்பட்டது.

உண்மையாகவே வடமாகாணசபைக்குள் ஏற்பட்டுள்ள குழப்பம் பகிடிக்குரிய ஒன்றா? அது சில அரசியல்வாதிகளின் பதவி ஆசையின் விளைவா?  அல்லது ஊழல் சம்பந்தப்பட்ட ஒன்றா?  அல்லது முதலமைச்சரின் தலைமைத்துவ பண்பிலுள்ள போதைமைகளின் விளைவா? அல்லது அரசியல்வாதிகளின் பக்குவமின்மையின் விளைவா? அல்லது ஈழத்தமிழ் ஜனநாயகத்தின் செழிப்பின்மையின் விளைவா? அல்லது மேற்கண்ட அனைத்துக் காரணங்களினதும் திரண்ட விளைவா?  அல்லது இதைவிட ஆழமான காரணம் உண்டா?

ஆம் அவற்றைவிட ஆழமான காரணம் உண்டு. அதுதான் அடிப்படையானது. மேற்கண்ட உப காரணங்களுக்கூடாக அது வெளிப்பட்டது என்பதே உண்மை.  அந்த அடிப்படைக்காரணம் எது?

இரண்டு அரசியற் செயல் வழிகளுக்கிடையிலான முரண்பாடே அது.  இலங்கைத் தீவின் சிங்கள பௌத்த இனவாதத்தை எப்படி வழிக்கு கொண்டு வருவது என்பது  தொடர்பான இரு வேறு அணுகு முறைகளே அவை.  இனவாதத்தோடு கூடிய பட்சம் இணங்கியும் குறைந்த பட்சம் எதிர்த்தும் அதை வழிக்கு கொண்டு வரலாம் என்று சம்பந்தனும் சுமந்திரனும் நம்புகிறார்கள்.  தமிழரசுக் கட்சிக்குள் உள்ள குறிப்பிடத்தக்களவு பிரதானிகளும் அப்படித்தான் நம்புகிறார்கள்.

ஆனால் விக்னேஸ்வரனும் அவரைப் போன்றவர்களும் அப்படி நம்பவில்லை. அவர்கள் கூடிய பட்சம் எதிர்ப்பும் குறைந்த பட்சம் இணங்கிப் போதலும் என்ற வழிமுறையை பின்பற்றுகிறார்கள்.

இந்த இரண்டு வழிமுறைகளுக்குமிடையிலான முரண்பாடே மாகாண சபைக்குள் வந்த குழப்பங்கள் அனைத்திற்கும் அடிப்படைக் காரணம்.   ஆனால் விக்னேஸ்வரன் அணி இதில் ஒப்பீட்டளவில் குறைந்தளவே நிறுவன மயப்பட்டு காணப்படுகின்றது. எதிரணியோ அரச அனுசரணையோடும்   சக்திமிக்க நாடுகளின் பின்பலத்தோடும் பலமான வலையமைப்போடும் ராஜீய நுணுக்கங்களோடும் காணப்படுகிறது.

நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தில் விக்னேஸ்வரன் கவிழ்க்கப்படுவதை பெரும்பாலான அவருடைய ஆதரவாளர்கள் விரும்பவில்லை.  அவர் கவிழ்க்கப்படுவது நல்லதென்றும் அதன் மூலம் ஒரு மாற்றுத்  தலைமைக்குரிய அணித்திரட்சி வேகமாக நிகழும் என்றும் ஒரு கணிப்பு இருந்தது.  ஆனால் அவர் கவிழ்க்கப்பட்டால் அவரை ஏந்துவதற்கு உரிய ஏற்பாடுகள் எவையும் பொருத்தமான வளர்ச்சிகளை அடைந்திராத ஒரு பின்னணிக்குள் விக்னேஸ்வரன் வீழ்த்தப்பட்டால் அடுத்தது என்ன? என்ற கேள்வி எல்லோரிடமும் இருந்தது. அவர் பெட்டியைக் கட்டிக்கொண்டு கொழும்புக்குப் போய் விடுவார் என்று அவரை எதிர்ப்பவர்கள் கிண்டலடித்தார்கள்.ஒரு முதலமைச்சராக தொடர்ந்தும் அவர் இருந்தால்தான் அவருடைய கருத்துக்களுக்கு உரிய கவனிப்பு இருக்குமென்றும் ஒரு முதலமைச்சர் எதிர்ப்பு அரசியலின் குரலாக ஒலிப்பதே அவருக்குள்ள கவர்ச்சியும் என்று அவருடைய ஆதரவாளர்கள் நம்பினார்கள்.

அதாவது ஒரு முதலமைச்சராக எதிர்ப்பு அரசியலை முன்னெடுப்பதுதான் விக்னேஸ்வரனுக்குள்ள கவர்ச்சியும் அவரை சூழ்ந்திருக்கும் சர்ச்சைகளுக்குக் காரணமுமாகும்.  மிகக்குறுகிய காலத்துக்குள் அவர் அடைந்த பிரபல்யத்திற்கும் அவருக்கு கிடைத்திருக்கும் ஜனவசியத்திற்கும் அதுதான் காரணம். கடந்த வியாழக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த கொழும்பிற்கான இந்திய தூதுவர் விக்னேஸ்வரனை சந்தித்த பொழுது பெருமளவிற்கு அபிவிருத்தியைப் பற்றியே பேசியதாகவும் அரசியல் விவகாரம் எதையும் பேசவில்லை என்றும் விக்னேஸ்வரன் குறிப்பிட்டிருந்தார்.   இதுதொடர்பில் கருத்து தெரிவித்த ஓர் ஊடகவியலாளர் ‘விக்னேஸ்வரனோடு அவர்கள் எதைத்தான் பேச முடியும்? அவர் என்ன சொல்லக்கூடும் என்பது இப்போது எல்லா வெளிநாட்டு தூதுவர்களுக்கும் நன்கு தெரியும்’ என்று கூறினார்.

அப்படி ஒரு அபிப்பிராயம் கொழும்பிலுள்ள இராஜதந்திரிகள் மத்தியில் பலமாக உருவாகிவிட்டது. தனது நிலைப்பாட்டில் விட்டுக்கொடுப்பற்ற விக்னேஸ்வரன் எதை சொல்லக்கூடும் என்பது அவர்கள் எல்லோருக்கும் நன்கு தெரிந்திருக்கிறது.  இலங்கைத் தீவிற்கான தமது நிகழ்ச்சி நிரலை மறுப்பேதுமின்றி ஏற்றுக்கொள்ளும் ஒரு தலைவராக அவர் இல்லை என்று அவர்கள் கருதுகிறார்கள்.

ஒரு தலைவராகவும் ஒரு நிர்வாகியாகவும் வடமாகாணசபையில் விக்னேஸ்வரன் சாதித்தவை குறைவுதான். ஆனால் தனது அரசியல் நிலைப்பாடுகளில் விட்டுக்கொடுப்பற்றவர் என்ற ஒரு படிமத்தை அவர் ஆழமாக பதித்துவிட்டார்.  ஒரு முதமைச்சராக இருந்து கொண்டு  அவர் முன்னெடுக்கும் எதிர்ப்பு அரசியலே இதற்கு காரணம்.  ஒரு முதலமைச்சராக இல்லாமல் அல்லது ஒரு மாற்று அணியின் தலைவராக இருந்து கொண்டு அவர் கூறப்போகும் கருத்துக்களுக்கு இந்தளவிற்கு கவனிப்பு இருக்காது என்று அவருடைய ஆதரவாளர்கள் நம்புகிறார்கள்.  எனவே அவரை தொடர்ந்தும் பதவியில் வைத்திருக்க வேண்டுமென்று அவர்கள் விரும்பினர்.

அவர் பதவியில் இருப்பதால்தான் அவருக்கு முக்கியத்துவம் உண்டு என்று கருதுவதும் அவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டால் அவராக முன்வந்து ஒரு கட்சியையோ அல்லது மக்கள் இயக்கத்தையோ கட்டியெழுப்ப மாட்டார் என்றும் யாராவது ஒரு கட்சியை கட்டியெழுப்பிவிட்டு அழைத்தால் அவர் வந்து சிம்மாசனத்தில் அமர்வார் என்றும் நம்புவது ஓரு பலவீனமான நிலைதான்.  தமிழ் எதிர்ப்பு அரசியல் எந்தளவிற்கு நிறுவனமயப்படாது காணப்படுகிறது என்பதனை இது காட்டுகிறது.

தமிழ் மக்கள் பேரவைதான் அதை செய்திருந்திருக்க வேண்டும்.  அல்லது ஒரு மாற்று அணியை உருவாக்கத் துடிக்கும் தரப்புக்கள்  அதைச் செய்திருக்க வேண்டும்.   அப்படிப்பட்ட ஏற்பாடுகள் எவையும் அற்ற வெற்றிடத்தில் அடுத்த ஒன்றரை ஆண்டுக்கு  விக்னேஸ்வரனை தொடர்ந்தும் முதலமைச்சராக வைத்திருப்பதை தவிர வேறு தெரிவுகள் உண்டா?

ஆனால் அவரை எதிர்ப்பவர்கள் அதற்கு அனுமதிக்கமாட்டார்கள் என்றே தெரிகிறது.  நம்பிக்கையில்லாத் தீர்மானம் பின்வாங்கப்பட்ட பின் நிகழ்பவை அதைத்தான் காட்டுகின்றன.  அவர்கள் அவரை தொடர்ச்சியாக முற்றுகைக்குள் வைத்திருக்க எத்தனிக்கிறார்கள். அவரை தொடர்ந்தும் சீண்டுகிறார்கள்.  கமலகாசனின் வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்  படத்தில் வரும் பிரகாஸ்ராஜ் போல கோபம் வரும் போதெல்லாம் பொய்யாகச் சிரிப்பதன் மூலம் அவர் மாகாணசபையை ஒரு கட்டம் வரை கொண்டிழுக்கலாம். ஆனால் எதுவரை? என்பதே இப்பொழுதுள்ள கேள்வி.

யாப்புருவாக்க முயற்சிகள் அவற்றின் அடுத்தடுத்த கட்டங்களை நோக்கி நகர்வதாக அமைச்சர் கிரியல்ல கூறுகிறார். கடந்த புதன் கிழமை கிளிநொச்சியில் உரையாற்றிய பொழுது  அவர் இவ்வாறு கூறியுள்ளார்.   இலங்கையில் முதன்முறையாக தமிழ் கட்சிகளும் உட்பட அனைத்துக் கட்சிகளும் இணைந்து ஒரு புதிய யாப்பை உருவாக்கி வருவதாக அவர் கூறுகிறார் .  ‘கட்சிகளுக்குள் எந்த பிரச்சனையும் இல்லை.  எங்களுக்குள்ளும்  எந்த பிரச்சனையும் இல்லை………. முதல் தடவையாக தமிழ் கட்சிகளின்  பங்களிப்போடு யாப்புருவாக்க பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன’ என்று அவர் கூறுகிறார்.  அதாவது தமிழ் கட்சிகளின் ஒத்துழைப்பு அதற்கு உண்டு என்பதை அழுத்தி கூறுகிறார்.  இத்தகையதோர் பின்னணிக்குள் ஒரு முதலமைச்சராக விக்னேஸ்வரன் அதை எதிர்ப்பாராக இருந்தால் என்ன நடக்கும்.?

ஜெனிவாவில் அரசாங்கத்திற்கு இரு வருடகால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தமிழரசுக்கட்சி அதற்கு ஆதரவைக் காட்டியுள்ளது.  இந்த இரண்டு வருடகாலத்திற்குள் நிலைமாறுகால நீதியை நிலைநாட்டுவதற்கான கட்டமைப்புக்களை அரசாங்கம் உருவாக்க வேண்டும்.  இது தொடர்பில் அரசாங்கம் ஏற்றுக்கொண்ட ஏறக்குறைய 25பொறுப்புக்களை நிறைவேற்ற வேண்டும். இப்பொறுப்புக்களை மேம்போக்காக கண்துடைப்பாக நிறைவேற்றிவிட்டு அரசாங்கம் ஜெனிவாவில் கணக்கைக் காட்டக் கூடும். அப்பொழுது உண்மை நிலையை எடுத்துக்கூற விக்னேஸ்வரனைப் போன்ற ஒரு கூர்மையான எதிர்ப்புக் குரல் தேவை.

தமிழ் பேசத்தெரிந்த வடமாகாண ஆளுநரைப் போன்றவர்கள் இனக்கலப்புத் திருமணங்களின் மூலமும், குருதிக்கொடைகளின் மூலமும் நல்லிணக்கத்தை உற்பத்தி செய்யலாம். என்று போதிக்கும் ஒரு காலகட்டம் இது. யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரியில் குருதிக்குத் தட்டுப்பாடு நிலவுவதாகவும் அதற்குக் காரணம் சாதி ஏற்றத் தாழ்வுகளே என்றும் ரணில் விக்கிரமசிங்கவின் உறவினரால் நடாத்தப்படும் டெய்லிமிரர் பத்திரிகையில் ஒரு செய்தி அண்மையில் வெளிவந்திருந்தது. ஆஸ்பத்திரியில் குருதித்தட்டுப்பாடு நிலவுகிறதா? என்று தொலைபேசியில் கேட்கப்பட்ட போது அப்படியெதுவும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது, அதற்குப் பிறகும் மேற்படி செய்தி வெளியிடப்பட்டிருக்கிறது. இச் செய்தியில் உண்மையில்லை என்று யாழ் போதானா வைத்திசாலை பணிப்பாளர் மறுப்புத் தெரிவித்திருந்தார்.

இத்தகையதோர் பின்னணிக்குள்தான் கடந்த 25ம் திகதி யாழ்ப்பாணத்திற்கு வந்த பௌத்த பிக்குக்கள் ஆஸ்பத்திரியில் இரத்த தானம் செய்திருக்கிறார்கள். அதைப்பற்றி உரை நிகழ்த்திய ஆளுநர் குரே இப்பொழுது யாழ்ப்பாணத்தவர்களின் உடலில் பிக்குக்களின் இரத்தமும் ஓடுகிறது என்ற தொனிப்பட கூறியிருக்கிறார். இவ்வாறாக திருமணக்கலப்பு, இரத்தக்கலப்பு என்பவற்றிற்கூடாக இன நல்லிணக்கத்தை கட்டியெழுப்பப் புறப்பட்டிருக்கும் சக்திகளின் மத்தியில் உண்மையை உறைப்பாக உரத்துச் சொல்ல விக்னேஸ்வரனைப் போல ஒருவர் தேவை .

எனவே அடுத்த ஒன்றரை ஆண்டுகாலத்திற்கு ரணில்- மைத்திரி அரசாங்கத்தை அம்பலப்படுத்துவதற்கும் தமிழ் மக்களின் எதிர்ப்பை வலிமையான விதத்தில் பதிவு செய்வதற்கும் விக்னேஸ்வரன் தேவைதான்.  அதைவிட முக்கியமாக தமிழ் மக்களின் உரிமைக்கான அரசியலை விசுவாசமாகவும் அர்ப்பணிப்போடும் முன்னெடுக்கவல்ல ஒரு கட்சி அல்லது ஒரு மாற்று அணி அல்லது ஒரு மக்கள் இயக்கம் உருவாக்கப்படும் வரையிலுமாவது விக்னேஸ்வரனை அரங்கில் வைத்திருக்க வேண்டும்.

அவரிடம் தலைமைத்துவப் பண்புகளும் நிர்வாகத்திறனும் குறைவுதான். அவர் ஒரு நிறுவன உருவாக்கியோ கட்சி உருவாக்கியோ இல்லைத்தான்.  அவருடைய அரசியல் ஒழுக்கம் கிளர்ச்சிப் பாரம்பரியத்திற்கு உரியதுமில்லைத் தான். அவருக்கு வயதாகிவிட்டது. அவருக்கு நோய்கள் உண்டு.  அளவிற்கு மிஞ்சி களைத்தாலோ அல்லது சலித்தாலோ அல்லது விரக்தி வசப்பட்டாலோ கடவுளிடம் பழியைப் போட்டுவிட்டு ஒதுங்கிச் செல்லக் கூடிய ஓர் ஆன்மீக வாதியும் அவருக்குள் உண்டுதான்.  ஆனாலும் தமிழ் தேசிய அஞ்சல் ஓட்டத்தில் அஞ்சல் ஓட்டக் கோல் இப்பொழுது அவருடைய கையில்தான் இருக்கிறது. அவர் வீழ்ந்தால் அந்தக்கோல் மண்ணில் வீழ்ந்து விடும். அடுத்தகட்ட அரசியலை முன்னெடுக்கவல்ல ஓர் அமைப்பு அல்லது ஓரு கட்சி அக்கோலைக்   கையில் எடுக்கும் வரையிலுமாவது விக்னேஸ்வரனை அரங்கில் வைத்திருக்க வேண்டும்.  சரிகளோடும் பிழைகளோடும் குற்றம் குறைகளோடும் இதுதான் இப்போதுள்ள தமிழ் அரசியல் யதார்த்தம்.

விக்னேஸ்வரன்  ஏந்தப்பட வேண்டியவராகக் காணப்படுகிறார் . ஆனால் அவரை ஏந்திப்பிடிக்க எந்த ஒரு கட்டமைப்பும் தமிழ் மக்கள் மத்தியில் இல்லை. எனவே விக்னேஸ்வரனை பாதுகாப்பதென்பது அதன் மெய்யான பொருளில் அஞ்சல் ஓட்டக் கோலை கையிலெடுக்க பொருத்தமான ஒரு கட்டமைப்பை உருவாக்குவதுதான். அது ஒரு கட்சியாகவும் இருக்கலாம் அல்லது கட்சிகளின் கூட்டாகவும் இருக்கலாம் அல்லது  ஒரு மக்கள் இயக்கமாகவும் இருக்கலாம்.

இத்தாலிய சிந்தனையாளரான அன்ரனியோ கிராம்ஷி கூறுவது போல  ‘புரட்சிகரமான அரசியல் என்பது, வரலாற்றில் செயலூக்கமிக்க வகையில் தலையீடு செய்வதுதான். மாறாக, ‘சரியான’ நிலைப்பாடுளை மேற்கொள்வதும் அவை சரியானவைதான் என நிரூபிக்கப்படப்போகும் நாளுக்காகக் காத்திருப்பதுமல்ல’

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More