மும்பையிலுள்ள பைகுலா சிறைச்சாலையில் ரொட்டி திருடியதாக கூறி பெண் கைதியான மஞ்சுளா ஷெட்டி என்பவரை சித்ரவதை செய்து கொலை செய்தமை தொடர்பில் வேலையிலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்டிருந்த சிறை அதிகாரி உள்ளிட்ட 6 பெண் காவலர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆயுள் தண்டனை கைதி மஞ்சுளா ஷெட்டி கடந்த 24-ம்திகதி; சிறையில் மரணமடைந்திருந்தார். கைதிகளுக்கு வழங்கப்படும் உணவில் 2 முட்டைகள் மற்றும் 5 ரொட்டிகள் காணாமல் போனமை தொடர்பில் சிறை அதிகாரியும்; காவலர்களும் மஞ்சுளாவை தனியறையில் வைத்து விசாரித்துள்ளனர்.
அதுகுறித்து தனக்கு தெரியாது என மஞ்சுளா ஷெட்டி கூறியுள்ளதால், ஆத்திரமடைந்த சிறைக் காவலர்கள் மஞ்சுளாவை தாக்கி சித்ரவதை செய்துள்ளதனையடுத்து, அதிகமான ரத்தம் வெளியான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மஞ்சுளா சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து சுமார் 200க்கும் அதிகமான கைதிகள் பைகுலா சிறையில் போராட்டத்தில் ஈடுபட்டதனை தொடர்ந்து அதிகளவிலான பொலிசார்கள் வரவழைக்கப்பட்டு கைதிகளின் போராட்டம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட நிலையில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.