குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சவூதி அரேபியாவிற்கு விஜயம் செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வர்த்தகம் மற்றும் முதலீடுகளை மேம்படுத்தும் நோக்கில் இவ்வாறு விஜயம் செய்யுமாறு கோரப்பட்டுள்ளது.
வர்த்தகப் பிரதிநிதிகளுடன் சவூதி அரேபியாவிற்கு விஜயம் செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சவூதி அரச குடும்ப உறுப்பினரும் பிரபல வர்த்தகருமான இளவரசர் Alwaleed bin Talal bin Abdulaziz al Saud வர்த்தகப் பிரதிநிதிகளுடன் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அவர் இன்றைய தினம் சந்தித்துள்ளார். இலங்கையின் பொருளாதாரம் அபிவிருத்தி அடைந்து வருவதாகவும் நாட்டின் சுற்றுலாத்துறையில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் சுற்றுலாத்துறைக்கு சிறந்த சாதக நிலைமை காணப்படுகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, தொடர்ச்சியாக சவூதி அரேபியா இலங்கைக்கு வழங்கி வரும் உதவிகளுக்கு நன்றி பாராட்டுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
சவூதி அரேபியாவில் சுமார் 400,000 இலங்கையர்கள் தொழில் வாய்ப்பு பெற்றுக் கொண்டுள்ளதாகவும் நாட்டின் வருமானத்திற்கு இது உதவுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.