குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தேசியப் பாதுகாப்பிற்கு எவ்வித அச்சுறுத்தல்களும் கிடையாது என இராணுவத் தளபதி லெப்டினன் கேணல் மகேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
நாட்டின் தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக எவ்வித புலனாய்வுப் பிரிவு தகவல்களும் குறிப்பிடவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். யுத்தம் இடம்பெற்ற காலத்தில் இராணுவத் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொள்ளப்பட்ட காணிகளை பொதுமக்களிடம் ஒப்படைப்பதில் பிழையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இராணுவத் தளபதியாக நேற்றைய தினம் பதவியை பொறுப்பேற்றுக் கொண்டதன் பின்னர் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இராணுவத்தினால் பயன்படுத்தப்பட்ட காணிகள் தொடர்பில் கண்காணிப்பு நடத்தப்பட்டுள்ளதாகவும் தற்போது அவற்றை பொதுமக்களிடம் வழங்குவதில் தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்பு கிடையாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மிகவும் முக்கியமான கேந்திர நிலையங்கள் மற்றும் இராணுவ முகாம்கள் தவிர்ந்த ஏனைய இடங்கள் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக விடுவிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இராணுவத்தினர் அரசியலில் ஈடுபடப் போவதில்லை எனவும் அரசியல்வாதிகளின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப் போவதில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறிப்பாக காணி விடுவிப்பு தொடர்பில் பாதுகாப்பு துறைசார் நிபுணர்களின் பரிந்துரைகளின் அடிப்படையிலேயே தீர்வு வழங்கப்படும் எனவும் அரசியல்வாதிகள் மேடைகளில் பேசுவது எல்லாம் நடைமுறைப்படுத்தப்படக்கூடியதல்ல எனவும் இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.