புங்குடுதீவு மாணவியின் சடலம் மீட்கப்பட்ட இடத்தில், மாணவி கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டாமைக்கான சாத்தியம் இல்லை என சட்ட வைத்திய அதிகாரி உருத்திரபசுபதி மயூரதன் சாட்சியம் அளித்துள்ளார்.
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு விசாரணைகளின் ஆறாம் நாள் சாட்சி பதிவுகள், நேற்றைய தினம் புதன்கிழமை யாழ்.நீதிமன்ற கட்டட தொகுதியின் இரண்டாம் மாடியில் மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையில் மேல் நீதிமன்ற நீதிபதிகள் அன்னலிங்கம் பிரேமசங்கர் மற்றும் மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகியோர் முன்னிலையில் நீதாய விளக்கம் ( ரயலட் பார் ) முறைமையில் நடைபெற்றது.
பிரதி சொலிஸ்டர் ஜெனரல் வழக்கை நெறிப்படுத்தினார்:-
நேற்றைய வழக்கு விசாரணைகளின் போது பிரதி சொலிஸ்டர் ஜெனரல் குமார் இரட்ணம் தலைமையில் அரச சட்டவாதிகளான நாகரத்தினம் நிஷாந்த், லக்சி டீ சில்வா மற்றும் சட்டத்தரணி மாலினி விக்னேஸ்வரன் ஆகியோர் முன்னிலையாகி இருந்தனர்.
எதிரிகள் சார்பில் 5 சட்டத்தரணிகள் முன்னிலை:-
1ம் ,2ம் , 3ம் , 5ம் மற்றும் 6ம் எதிரிகள் சார்பில் சட்டத்தரணி மஹிந்த ஜெயவர்த்தன , எம். என். நிஷாம் மற்றும் சட்டத்தரணி சரங்க பாலசிங்க , ஆகியோரும் 5ம் எதிரியின் சார்பில் சட்டத்தரணி ஆறுமுகம் ரகுபதியும் 4ம், 7ம் , மற்றும் 9ம் எதிரிகள் சார்பில் சட்டத்தரணி சின்னராசா கேதீஸ்வரன் ஆகியோர் முன்னிலையாகி இருந்தனர். அத்துடன் 8ஆம் எதிரி சார்பிலும் மன்றினால் ஒன்று தொடக்கம் 9 வரையிலான எதிரிகள் சார்பில் நியமிக்கப்பட்ட சட்டத்தரணி விக்னேஸ்வரன் ஜெயந்தாவும் முன்னிலை ஆகி இருந்தார்.
எதிரிகள் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்:-
எதிரிகளான பூபாலசிங்கம் இந்திரகுமார், பூபாலசிங்கம் ஜெயக்குமார், பூபாலசிங்கம் தவக்குமார் , மகாலிங்கம் சசிதரன் , தில்லைநாதன் சந்திரகாசன் , சிவதேவன் துஷாந்த் , பழனி ரூபசிங்கம் குகநாதன் , ஜெயதரன் கோகிலன் , மற்றும் மகாலிங்கம் சசிக்குமார் ஆகிய ஒன்பது எதிரிகளும் மன்றில் முற்படுத்தப்பட்டனர்.
அதனை தொடர்ந்து நேற்றைய தினம் ஆறாம் நாள் சாட்சி பதிவுகள் ஆரம்பமானது.
குறித்த வழக்கின் 22 ஆவது சாட்சியமான யாழ்ப்பாண பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் தடயவியல் பிரிவு பொலிஸ் உத்தியோகஸ்தர் ரொஷான் சந்தனகுமார சாட்சியம் அளிக்கையில் ,
தடயவியல் பிரிவில் எனது பணியானது குற்ற செயல்கள் நடைபெற்ற இடங்கள் , அதனோடு சந்தேகப்பட கூடிய இடங்களை சென்று அவதானித்து , விஞ்ஞான , தொழிநுட்ப ரீதியிலான சாட்சியங்கள் சான்று பொருட்களை சேகரிப்பதாகும்.
கடந்த 2015. 05.14 ஆம் திகதி ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் இருந்து யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்திற்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது.
புங்குடுதீவு ஆலடி சந்திக்கு அருகில் பாடசாலை மாணவி ஒருவரின் சடலம் கிடப்பதாகவும் , அது தொடர்பில் தடயவியல் பரிசோதனைகளை மேற்கொள்ள வருமாறு எமது பிரிவுக்கு அந்த தொலைபேசி அழைப்பின் மூலம் தெரியப்படுத்தப்பட்டு நாம் அந்த இடத்திற்கு சென்று இருந்தோம்.
சடலம் இருந்த பகுதியானது சன நடமாட்டம் இல்லாத பகுதியாகும். ஒரு பாழடைந்த வீட்டின் பின் பகுதியில் தான் சடலம் கிடந்தது. சடலம் கிடந்த இடத்திற்கு நாம் நிமிர்ந்த நிலையில் செல்ல முடியாத அளவுக்கு அலரி மரங்களும் பூவரசு மரங்களும் காணப்பட்டன.
என்னுடன் வந்த எனது சக உத்தியோகஸ்தர்களுடன் சூழலை அவதானித்தேன். என்னுடன் வந்த சக உத்தியோகஸ்தர் புகைப்படங்களை எடுத்தார்.
பின்னர் சட்ட வைத்திய அதிகாரி அந்த இடத்திற்கு வந்த பின்னர் சடலத்தை பார்வையிட்டோம். சடலத்தின் மூக்கினால் இரத்த வடிந்து உறைந்து காணப்பட்டது. இடது பக்க காது பக்கமாகவும் இரத்தம் வடிந்து உறைந்து காணப்பட்டது.
இரு முடிகளை மீட்டேன்.
சடலத்தில் மேலும் அவதானித்த போது முடி இரண்டு இருந்தன.அவற்றினை , சேகரித்து கொண்டேன். அதன் பின்னர் சடலம் கிடந்த இடத்தில் நிலத்தினை அவதானித்து அந்த இடத்தை பரிசோதித்தோம். சந்தேகத்திற்கு இடமான எந்த தடய பொருட்களையும் மீட்கவில்லை.
பின்னர் சட்ட வைத்திய அதிகாரி கொண்டு வந்த வெள்ளை நிற பையில் சடலத்தை பொதி செய்து பிரேத பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்திய சாலைக்கு சடலத்தை அனுப்பி வைத்தோம். என சாட்சியம் அளித்தார்.
அதனை தொடர்ந்து பிரதி சொலிஸ்டர் ஜெனரல் சடலத்தில் இருந்து மீட்கபட்ட இரண்டு முடிகளையும் என்ன செய்தீர்கள் என கேட்ட போது அதனை ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்ற நீதிவானின் உத்தரவின் பேரில் அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்பி வைத்தேன் என பதிலளித்தார்.
உம்மால் அனுப்பட்ட உறையினை அடையலாம் காட்ட முடியுமா ? என கேட்டதற்கு ஆம் என பதிலளித்தார்.
மரபணு பரிசோதனை அறிக்கை உள்ளிட்ட அறிக்கைகள் கொண்ட பொதி திறந்த நீதிமன்றில் திறக்கபட்டது.
அதனை அடுத்து பிரதி சொலிஸ்டர் ஜெனரல் ஜின்டேக் நிறுவனத்தால் மன்றுக்கு பாரப்படுத்தப்பட்ட மரபணு பரிசோதனை அறிக்கை உட்பட்ட அறிக்கைகள் உள்ளடங்கிய பொதியினை திறந்த மன்றில் திறந்து பார்க்க அனுமதி கோரினார். அதற்கு மன்று அனுமதித்ததை அடுத்து பொதி திறந்த மன்றிலே திறக்கப்பட்டது.
அந்த பொதியில் இருந்து மாணவியின் சடலத்தில் இருந்து மீட்கப்பட்ட முடி அனுப்பட்ட உறையினை சாட்சியத்திடம் காண்பித்த போது அதில் தான் எழுதிய தகவல்கள் உள்ளது என சாட்சி அந்த உறையை அடையாளம் காட்டினார்.
எதிரி தரப்பு சட்டத்தரணிகளுக்கு அறிக்கைகளின் பிரதி கையளிப்பு.
அதனை அடுத்து எதிரி தரப்பு சட்டத்தரணி மஹிந்த ஜெயவர்த்தன , ஜின் டேக் நிறுவன அறிக்கையின் பிரதிகள் தமக்கு இதுவரை வழங்கப்படவில்லை. அதனை வழங்க வேண்டும் என மன்றில் கோரினார். குறித்த அறிக்கைகள் வழக்கின் மூல கோவையில் இணைக்கப்பட்டு உள்ளதால் அதனை எதிர் தரப்பு சட்டத்தரணிகளுக்கு வழங்க முடியவில்லை. இன்றைய தினம் அந்த அறிக்கைகளின் பிரதிகளை எதிரி தரப்பு சட்டத்தரணிகளுக்கு வழங்கப்படும் என மன்று தெரிவித்தது.
அதனை அடுத்து சாட்சியத்திடம் எதிரி தரப்பு சட்டத்தரணி ஆறுமுகம் ரகுபதி குறுக்கு விசாரணையின் போது , நீர் எத்தனை தடவைகள் இந்த வழக்கு தொடர்பில் பரிசோதனை செய்ய சென்றீர் என கேட்டார் , இரண்டு தடவைகள் என சாட்சி பதிலளித்தார். எந்த எந்த திகதிகள் என குறிப்பட முடியுமா ? என கேட்டார், சடலம் கண்டெடுக்கப்பட்ட தினமான 13 ஆம் திகதியும் 19 ஆம் திகதியும் சென்றேன். என பதிலளித்தார்.
ஏன் 19 ஆம் திகதி சென்றீர் என கேட்டதற்கு , கைது செய்யபப்ட்ட சந்தேக நபர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் , மாணவியை பிறிதொரு இடத்தில் வைத்து வன்புணர்வுக்கு உட்படுத்தி உள்ளார்கள் என ஊர்காவற்துறை பொலிசார் எமது பிரிவுக்கு அறிவித்தனர். அதனால் நாம் 19ஆம் திகதி சந்தேக நபர்கள் கூறிய இடம் என ஊர்காவற்துறை பொலிசாரால் காண்பிக்கப்பட்ட இடத்தை பரிசோதனை செய்தோம்.
அங்கு ஏதேனும் தடய பொருட்களை சேகரித்தீர்களா ? என கேட்டதற்கு அன்றைய தினம் 19ஆம் திகதி நான் உதவிக்கு சென்று இருந்தேன். அன்றைய தினம் தடய பொருட்களை சேகரித்தது என்னுடன் வந்த பிறிதொரு உத்தியோகஸ்தர் ஆவார். என பதிலளித்தார்.
அவற்றினை தொடர்ந்து குறித்த சாட்சியம் முடிவுறுத்தப்பட்டு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டது.
அதனையடுத்து விசாரணைகளை மன்று மதிய போசன இடைவேளைக்காக மதியம் 1 மணிக்கு ஒத்தி வைத்தது பின்னர் , மதியம் 2 மணியளவில் விசாரணைகள் மீண்டும் ஆரம்பமானது.
காலை தள பரிசோதனை மேற்கொண்டேன்.
மாலை பிரேத பரிசோதனை மேற்கொண்டேன்.
அதன் போது குறித்த வழக்கின் 23 ஆவது சாட்சியமான சட்டவைத்திய அதிகாரி உருத்திர பசுபதி மயூரதன் சாட்சியமளிக்கையில் ,
நான் யாழ்.போதனா வைத்திய சாலையில் சட்ட வைத்திய அதிகாரியாக கடமையாற்றி வருகிறேன். புங்குடுதீவில் மாணவியின் சடலம் மீட்கப்பட்டமை தொடர்பில் ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்ற நீதிவானின் அழைப்பின் பேரில் தள பரிசோதனைக்காக சடலம் மீட்கப்பட்ட இடத்திற்கு காலை 10 .30 மணியளவில் சென்றேன்.
அதன் பின்னர் பிரேத பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்திய சாலை க்கு சடலத்தை எடுத்து வந்தோம். அன்றைய தினம் (14 ஆம் திகதி ) மாலை 5 மணியளவில் பிரேத பரிசோதனையை மேற்கொண்டேன்.
மூன்று காரணங்களால் மரணம் ஏற்பட்டு இருக்கலாம்.
இந்த மரணம் மூன்று காரணங்களால் ஏற்பட்டு இருக்கலாம் ஒன்று தலையில் ஏற்பட்ட காயத்தால் அதிகார இரத்த பெருக்கு ஏற்பட்டு , மரணம் சம்பவித்து இருக்கலாம் என தெரிவித்த போது மன்று இவ்வாறான காயத்திற்கு இரத்த பெருக்கை கட்டுப்படுத்தினால் மரணத்தை தடுக்க முடியுமா ? என கேட்டதது. அதற்கு இது உள்ளக இரத்த பெருக்கு அதனை கட்டுபடுத்துவது கடினம். சத்திர சிகிச்சை மேற்கொள்ளவும் முடியாது. அதானால் உடனடியாக சிகிச்சை வழங்கினால் காப்பாற்ற முடியும் என நிச்சயமாக கூற முடியாது என பதிலளித்தார்.
இரண்டாவது கழுத்து பட்டியினால் கழுத்தை நெரித்து கட்டியதால் கழுத்து நெரிந்து மரணம் சம்பவித்து இருக்கலாம். மூன்றாவது வாய்க்குள் உள்ளாடையை திணித்தமையால் சுவாச பாதை அடைக்கப்பட்டு மரணம் சம்பவித்து இருக்கலாம்.
வாய்க்குள் உள்ளாடையை திணித்தமையால் மூச்சு திணறல் ஏற்பட சந்தர்ப்பம் குறைவு ஏனெனில் மூக்கினால் சுவாசிக்க முடியும். ஆனால் வாய்க்குள் திணிக்கபப்ட்ட துணி உமிழ் நீர் சுரப்பினால் ஈரமாகி அதனால் துணி பாரம் கூடி தானாக தொண்டை குழியை நோக்கி உட்சென்று சுவாச பாதையை அடைத்து இருக்கலாம். அல்லது தொண்டை குழி வரையில் துணியை அடைந்து இருக்கலாம்.
விசாரணைகள் 18ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு.
அதனை தொடர்ந்து சட்டவைத்திய அதிகாரியின் சாட்சியம் முடிவுறுத்தப்பட்டு , சாட்சி மன்றினால் விடுவிக்கப்பட்டதை அடுத்து, வழக்கு விசாரணை எதிர்வரும் 18 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. அதுவரையில் ஒன்பது எதிரிகளையும் விளக்கமறியலில் வைக்குமாறும் மன்று உத்தரவு இட்டது.
அன்றைய தினத்தில் இருந்து ஜூலை மாதம் 19ஆம் , 20ஆம் , 24ஆம் , 25 ஆம், மற்றும் 26ஆம் , ஆகிய தினங்களிலும் பின்னர் அடுத்தமாதம் ஆகஸ்ட் 2ஆம் , 3ஆம், மற்றும் 4ஆம் திகதி ஆகிய திகதிகளில் வழக்கு விசாரணைகள் நடைபெறும் என மன்று அறிவித்து உள்ளது.