குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
உமா ஓயா திட்டம் குறித்து ஆராய்வதற்கு பாராளுமன்றத் தெரிவுக்குழு ஒன்று உருவாக்கப்பட உள்ளதாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
உமா ஓயா திட்டத்தினால் மக்கள் எதிர்நோக்கி வரும் நெருக்கடிகள் மற்றும் அதற்காக பயன்படுத்தப்படும் தரம் குறைந்த இயந்திர சாதனங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக இவ்வாறு பாராளுமன்றத் தெரிவுக்குழு ஒன்று நிறுவப்பட வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் யோசனை முன்வைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
கடந்த மஹிந்த ராஜபக்ஸ ஆட்சிக் காலத்தில் உமா ஓயா திட்டத்திற்காக கொண்டு வரப்பட்ட இயந்திர சாதனங்கள் தரம் குறைந்தவை எனவும் தரம் குறைந்த இயந்திர சாதனங்களை பயன்படுத்துவதனால் பிரதேச மக்கள் நெருக்கடிகளை எதிர்நோக்க நேரிட்டுள்ளதாக துறைசார் நிபுணர்கள் சுட்டிக்காட்டுவதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்றத் தெரிவுக்குழு ஒன்றை நிறுவி ஏற்பட்டுள்ள பாதிப்புக்களுக்கு தீர்வு வழங்க முனைப்பு காட்டப்படும் என தெரிவித்துள்ள அவர் பாரிய பொருட் செலவில் இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதனால் இதனை நிறுத்துவது நடைமுறைச்சாத்தியமற்றது என குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் கிரமமான வழிகளைப் பயன்படுத்தி திட்டத்தை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சமரசிங்க தெரிவித்துள்ளார்.