குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நாட்டில் சட்டம் ஒழுங்கு நிலைமை சீர்குலைந்திருப்பதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவே பொறுப்பு சொல்ல வேண்டுமென பாரிய மோசடிகள் மற்றும் அதிகார துஸ்பிரயோகம் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னாள் செயலாளர் லெசில் டி சில்வா தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது சட்டம் ஒழுங்கு நிலைமை சீர்குலைந்துள்ளதாக குற்றம் சுமத்தியுள்ள அவர் இந்த நிலைமைக்கு தற்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவே பொறுப்பு சொல்ல வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த அரசாங்கம் ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வதனையே முதன்மை நோக்கமாகக் கொண்டு செயற்பட்டு வருகின்றது என சுட்டிக்காட்டியுள்ள 19ம் திருத்தச் சட்டம் கூட தற்போதைய அரசாங்கத்தின் ஸ்திரத்தன்மையை உறுதி செய்யும் நோக்கிலேயே உருவாக்கப்பட்டது என குறிப்பிட்டுள்ளார்.
தேசிய அரசாங்கம் அல்லாத நிலையில் பாரியளவில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தேசிய கணக்காய்வு சட்டம் இதுவரையில் நிறைவேற்றப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்த ஜனாதிபதி முன்வரத் தவறினால் அவரும் மக்களை ஏமாற்றியதாகவே கருதப்பட நேரிடும் என அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டில் லெசில் டி சில்வா செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டிருந்த நிலையில் எதற்காக நீக்கப்பட்டார் என்பது பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.