குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ரோஹினிய முஸ்லிம்களுக்கு குடியுரிமை வழங்குமாறு மியன்மார் அரசாங்கத்திடம் ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான முகவர் நிறுவனம் கோரியுள்ளது. மியன்மாரில் ரோஹினிய முஸ்லிம்கள் நாடற்றவர்களாக வாழ்ந்து வருகின்றனர்.
பிரிவினைவாத பிரச்சினைகள் காரணமாக ரோஹினிய முஸ்லிம்கள் பெரும் எண்ணிக்கையில் இடம்பெயர நேரிட்டிருந்த நிலையில் ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான முகவர் நிறுவனத்தின் ஆணையாளர் பிலிப்போ கிராண்டி ( Filippo Grandi ) முதல் தடவையாக மியன்மாருக்கு பயணம் செய்துள்ளார்.
முஸ்லிம் சிறுபான்மை சமூகத்தினருக்கு குடியுரிமை வழங்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரோஹினிய முஸ்லிம் வாழும் பகுதிகளில் கூடுதலாக முதலீடு செய்ய வேண்டுமெனவும் அவர் கோரியுள்ளார். மியன்மாரின் மிகவும் வறிய மாநிலங்களில் ஒன்றாக றக்கீன் ( Rakhine ) திகழ்கின்றது எனவும் அனைத்து இன சமூகங்களையும் உள்ளடக்கி அபிவிருத்தித் திட்டங்களும் முதலீடுகளும் மேற்கொள்ளப்பட வேண்டுமென அவர் கோரியுள்ளார்.