இலங்கை கட்டுரைகள் பிரதான செய்திகள்

சோதனைக்களம் -செல்வரட்னம் சிறிதரன்

புதிய அரசியலமைப்போ அல்லது அரசியலமைப்புக்கான திருத்தமோ இப்போது அவசியமில்லை என்று பௌத்த மகாசங்கத்தினர் அறிவித்துள்ளதையடுத்து, புதிய அரசியலமைப்பை உருவாக்கும் முயற்சி;கள் ஆணி வேரில் ஆட்டம் கண்டுள்ளது.
பௌத்த மதத்தின் பிரிவுகளான மூன்று நிக்காயாக்களின் மகாநாயக்க தேரர்களும், பௌத்த சங்க சபைகளும் இணைந்து இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டிருக்கின்றார்கள். புதிய அரசியலமப்பும் அவசியமில்லை. அரசியலமைப்புக்கான திருத்தமும் இப்போதைக்கு அவசியமில்லை என்பது அவர்களுடைய முடிவு.
இலங்கை அரசியலில் மிகவும் வலுவானதொரு சக்தியாக இந்த மகாசங்கத்தினர் விளங்குகின்றார்கள். அவர்கள் நிக்காயாக்களாகப் பிரிந்துள்ள போதிலும் ஏனைய பௌத்த சங்க சபைகளுடன் இணைந்து புதிய அரசியலமைப்புக்கு எதிராகக் குரல் கொடுத்திருப்பது, நாட்டின் அரசியல் களத்தையே அதிரச் செய்திருக்கின்றது.
பௌத்த சிங்கள மக்களே இந்த நாட்டின் பெரும்பான்மையினராகத் திகழ்கின்றனர். அவர்களில் ஏறக்குறைய அனைவரும் மகாநாயக்க தேரர்களின் முடிவுகள் தீர்மானங்களுக்கு அமைய செயற்படுவார்கள். அந்தத் தீர்மானங்களை எதிர்க்கவோ அல்லது அதற்கு முரணாகவோ செயற்படமாட்டார்கள். அவ்வாறு அவர்கள் ஒருபோதும் துணிந்ததில்லை. மகாநாயக்கர்கள் எடுக்கின்ற முடிவுகள் சரியான முடிவுகள்தானா என்பதை அவர்கள் ஒருபோதும் விமர்சிப்பதற்குத் துணிவதில்லை.
எனவே பௌத்த சிங்கள மக்களை வழிநடத்துகின்ற வலிமைகொண்ட மகாநாயக்கர்கள், புதிய அரசியலமைப்பு விடயத்தில் தெரிவித்துள்ள எதிர்ப்பானது, அடுத்த கட்ட அரசியல் நடவடிக்கை என்ன என்பது குறித்த கவலைகளையும் கரிசனையையும் ஏற்படுத்தியிருக்கின்றது.
புதிய அரசியலமைப்பை உருவாக்குவதில், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மாற்று அணியினராகிய மகிந்த ராஜபக்ச அணியினர் பல்வேறு விடயங்களில் தடைகளை ஏற்படுத்தி வருகின்றார்கள். அவர்களுடைய ஒட்டுமொத்த சிந்தனையின் வெளிப்பாடாகவே பௌத்த மகாநாயக்கர்களின் அறிவித்தல் வெளி வந்திருக்கின்றது.
சைட்டம் எனப்படுகின்ற தனியார் மருத்துவ கல்லூரி விடயம் தீவிரமாகி, அரசியல் விவகாரமாக அரசாங்கத்தை உலுப்பிக்கொண்டிருக்கின்றது. இந்த நெருக்கடிக்கு தீர்வு காண்பதில் அரசாங்கம் அல்லாடிக்கொண்டிருக்கின்றது. சைட்டம் மருத்துவ கல்லூரி முறைமை முற்றாக இல்லாதொழிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி அரச வைத்தியர் சங்கத்தினர்  பெரும் போராட்டத்தை முன்னெடுத்திருக்கின்றனர். இவர்களின் வழிநடத்தலில் நாட்டின் பல்கலைக்கழகங்களில் மருத்துவ பீடங்களைச் சேர்ந்த மாணவர்கள் சைட்டத்திற்கு எதிராகக் குரல் கொடுத்து, தொடர்ச்சியாக வகுப்புக்களைப் புறக்கணித்து வருகின்றார்கள். அது மட்டுமல்லாமல், தமது கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் சுகாதார அமைச்சுக்கள் அத்துமீறி பிரவேசிப்பதற்கு முயற்சித்ததன் மூலம், அரசாங்கத்திற்குப் பெரும் தலையிடியைக் கொடுத்திருக்கின்றார்கள்.
இந்த நிலையில் சைட்டம் விவகாரத்திற்கு அரசாங்கம் உடனடியாகத் தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கையையும் மகாநாயக்கர்கள் முன்வைத்திருக்கின்றார்கள். அதேவேளை, வலிந்து காணாமல் ஆக்கப்படுவதில் இருந்து ஆட்களைப் பாதுகாத்தல் பற்றிய சர்வதேச சமவாயச் சட்டமூலத்தைப் பின்போட வேண்டும்.  தேர்தல் முறைமையில் மாற்றம் கொண்டு வரப்பட வேண்டுமட் என்றும் அவர்கள் தீர்மானத்தின் ஊடாக அரசாங்கத்தை வலியுறுத்தியிருக்கின்றார்கள்.
அது மட்டுமல்லாமல், நாட்டில் நிலவுகின்ற இன, மத அடிப்படையிலான பிரச்சினைகளின் பின்னணியில் பௌத்த மதத்தினருக்கு ஏற்பட்டுள்ள கவலைகள், துயரங்களுக்குத் தீர்வு காணும் வகையில் விசேட குழுவொன்று அமைக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றார்கள். பௌத்த மதம் சார்ந்த தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைப் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அந்த கோரிக்கையில் அவர்கள் சுட்டிக்காட்டியிருக்கின்றார்கள்.
அரசாங்கத்தின் எதிர்வினை 
இவ்வாறு பல விடயங்கள் குறித்து ஆராய்ந்து தீர்மானங்களை மேற்கொண்டுள்ள மகாநாயக்கர்களுடைய கோரிக்கைகளில், ஆட்கள் வலிந்து காணாமல் ஆக்கப்படுதலைத் தடுக்கும் சட்டமூலத்தை பின்போட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்த அதேநேரம், அதனை ஏற்றுச் செயற்பட்டதைப் போன்று அரசாங்கம் உனடடியாகவே அதனை ஒத்தி வைக்கப்பட்டிருக்கின்றது. இந்த சட்டமூலம் தொடர்பிலான இரண்டாவது வாசிப்பு மீதான விவாதம் நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட இருந்த வேளையிலேயே அரசாங்கம் இவ்வாறு அதனை திடீரென பின்போட்டிருக்கின்றது.
அரசாங்கம் மிகவும் முக்கிய காரணங்களை முன்னிட்டு, இந்த சட்டமூலத்தைப் பின்போட்டிருக்கலாம். ஆயினும், அதுபற்றிய விளக்கம் நாடாளுமன்றத்திலோ அல்லது சபைக்கு வெளியிலோ அரசாங்கத்தினால் அறிவிக்கப்படவில்லை. எனவே, மகாநாயக்கர்களின் கோரிக்கைக்கு அமைவாகவே இந்த சட்டமூலத்தை அரசாங்கம் பின்போட்டிருக்கின்றது என்ற முடிவுக்கு வருவதற்கு அரசாங்கத்தின் நடவடிக்கைகள் தூண்டியிருக்கின்றது.
அந்த வகையில் புதிய அரசியலமைப்பை உருவாக்குவதில் மகாநாயக்கர்களின் தீர்மானத்திற்கு எதிராக அரசாங்கம் செயற்படுமா? அரசாங்கத்தினால் செயற்பட முடியுமா? என்ற கேள்விகள் எழுந்திருக்கின்றன.
மைத்திரி – ரணில் கூட்டு அரசாங்கமானது தேசிய அரசாங்கமமாகவும், நல்லாட்சிக்கான அரசாங்கமாகவும் வர்ணிக்கப்பட்டிருக்கின்றது. இந்த நாட்டின் இரண்டு தேசிய பெரும் கட்சிகளாகிய சிறிலங்கா சுதந்திரக்கட்சியும், ஐக்கிய தேசிய கட்சியும் நாட்டின் அரசியல் வரலாற்றில் முதன் முறையாக இணைந்து அரசாங்கத்தை அமைத்திருக்கின்றன. இதன் காரணமாகவே இந்த அரசாங்கத்தை தேசிய அரசாங்கமாக பலரும் குறிப்பிடுகின்றார்கள்.
இரண்டு தேசிய அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து ஆட்சியமைத்துள்ள போதிலும், சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் முன்னாள் தலைவராகிய முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் விசுவாசிகளான சில நாடாளுமன்ற உறுப்பினர்கள், அவருடைய தலைமையில் அதே கட்சியில் பிரிந்து பொது எதிரணியினராகச் செயற்பட்டு வருகின்றார்கள். புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுவதில் இவர்கள் முரண்பாடான ஒரு போக்கையே கடைப்பிடித்து வருகின்றார்கள்.
பௌத்த மதத்திற்கு அரசியலமைப்பில் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள உயர் நிலையை புதிய அரசியலமைப்பில் இல்லாமல் செய்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதே, மகாநாயக்கர்களின் எதிர்ப்புக்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகின்றது. பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற ஒரு முக்கிய கூட்டத்தில், புதிய அரசியலமைப்பு தொடர்பான முடிவுகள் பற்றி வெளியிடப்பட்ட அறிக்கையொன்றில் பௌத்த மதத்த்pற்குரிய அந்தஸ்தைக் குறைப்பதற்கான தகவல்கள் வெளியாகியிருந்ததாகவும் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. இதற்கென மூன்று ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டிருந்ததாகச் சுட்டிக்காட்டி, அதுபற்றி நாடாளுமன்றத்திலும் சூடான விவாதங்கள் இடம்பெற்றிருந்தன.
புதிய அரசியலமைப்பு தொடர்பிலான உத்தேச வரைபு இன்னும் முடிவுறுத்தப்படாத நிலையில் அது தொடர்பாக எந்தவொரு அறிக்கையும் வெளியிடப்படவில்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உறுதிப்பட தெரிவித்திருந்தார்.
புதிய அரசியலமைப்பை உருவாக்கக் கூடாது என தெரிவித்துள்ள மாகாநாயக்கர்களை அவசர அவசரமாகச் சென்று சந்தித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மகாநாயக்கர்களுக்குத் தெரியமாமல் எந்தவொரு நடவடிக்கையும் புதிய அரசியலமைப்பு விடயத்தில் மேற்கொள்ளப்படமர்ட்டாது என உறுதியளித்திருக்கின்றார். அதேவேளை, இந்த விடயம் தொடர்பில் ஆராய்வதற்கென குழுவொன்றை நியமிப்பதாகவும் அவர் உறுதியளித்திருக்கின்றார். ஆயினும் பிரதமர் மற்றும், ஜனாதிபதி ஆகியோரின் உத்தரவாதங்களை ஏற்று, மகாநாயக்கர்கள் தமது தீர்மானத்தையும் முடிவையும் மாற்றிக்கொண்டதாகத் தெரியவில்லை.
தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடு
நாடு ஒற்றையாட்சியைக் கொண்டிருக்க வேண்டும். பௌத்த மதத்திற்கு விசேட அந்தஸ்து வழங்க்கப்பட்டிருக்க வேண்டும் என்பது மகாநாயக்கர்களின் மாற்ற முடியாத முடிவாகும். இந்தத் தீர்மானத்தின் அடிப்படையில் சிறுபான்மை தேசிய இனங்களாகிய தமிழ் முஸ்லிம் மக்களுக்கு அதிகாரப் பகிர்வுடைய வகையில் ஏற்றதோர் அரசியல் தீர்வு கிடைக்குமா என்று கூற முடியாது.
பிளவுபடாத நாட்டிற்குள் வடக்கு கிழக்கு இணைந்த பிரதேசத்தில் சுயநிர்ணய உரிமையுடன் கூடிய சமஸ்டி முறையில் பகிர்ந்தளிக்கப்பட்ட இறைமையுடனான ஓர் அரசியல் தீர்வு என்பதே தமிழ்த்தேசிய கூட்டமைப்புத் தலைமையின் ந்pலைப்பாடாகும். இதனையே தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தனது தேர்தல் அறிக்கையாக வெளியிட்டிருந்தது. தேர்தலின்போது மக்களுக்கு அளித்த வாக்குறுதிக்கு அமைவாகவே மக்கள் கூட்டமைப்புக்கு வாக்களித்திருந்தனர். எனவே, மக்களின் ஆணையை நிறைவேற்றுவதும், அதற்கான கோரிக்கையை வெற்றிபெறச் செய்வதும் கூட்டமைப்பின் தலையாய கடமையாகும்.
புதிய அரசியலமைப்பை உருவாக்கும் பணியில் தமிழ்த்தேசிய கூட்டமைப்ப்pன் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமாகிய சம்பந்தனும், நாடாளுமன்ற உறுப்பினரும், கூட்டமைப்பின் பேச்சாளருமாகிய சுமந்தினருமே முக்கிய பங்கெடுத்திருக்கின்றனர். தமிழ்த்தேசிய கூட்டமைப்பு என கூறிக்கொண்டாலும், இவர்கள் இருவருமே தமிழரசுக் கட்சியைச் சேர்ந்தவர்களாவர். கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளாகிய டெலோ, புளொட், ஈபிஆர்எல்எவ் ஆகிய கட்சிகளின் தலைவர்களோ அல்லது ஏனையவர்களோ அரசியலமைப்பை உருவாக்கும் பணியில் முக்கிய பங்காற்றுபவர்களாக இல்லை. புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தன் உபகுழுவொன்றின் தலைவராகச் செயற்பட்டிருந்த போதிலும், அனைத்து விடயங்களையும் கையாள்கின்ற தளத்தில் அவர் செயற்பட்டிருக்கவில்லை.
முக்கிய விடயங்வகள் பற்றிய கலந்துரையாடல்கள், தீர்மானம் எடுப்பதற்கான உந்துசக்தியாகத் திகழும் இடங்கள் என்பவற்றில் தலைவர் சம்பந்தனும், சுமந்திரனுமே பங்கெடுத்து வருகின்றனர். அதேவேளை, புதிய அரசியலமைப்பை உருவாக்குவதி;ல் தமிழ் மக்களுடைய அபிலாசைகள், எதிர்பார்ப்புக்கள் என்பன எந்தெந்த வகைகளில் பங்களிப்பு செய்திருக்கின்றன. அல்லது எந்த வகையில் தாக்கம் செலுத்தியிருக்கின்றன என்பதுபற்றிய விபரங்கள் இந்த இருவரையும் தவிர கூட்டமைப்பின் ஏனைய தலைவர்களுக்கோ அல்லது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கோ தெளிவாகத் தெரியாது. அவர்கள் இருட்டில் இருப்பது போன்றதொரு நிலையிலேயே இருக்கின்றார்கள்.
தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள வகையிலான ஒரு தீர்வை நோக்கியே கூட்டமைப்பின் தலைமை அரசியல் தீர்வு விடயத்தில் காய்நகர்த்தல்களை மேற்கொண்டிருப்பதாகக் கூறப்படுகின்றது. ஆயினும் சமஸ்டி ஆட்சி முறை தொடர்பில் சந்தேகமானதொரு நிலைமையே காணப்படுகின்றது. அதேபோன்று வடக்கும் கிழக்கும் இணைந்த தாயகப்பிரதேசத்தில் சுயநிர்ணய உரிமையுடன் கூடிய அதிகாரங்கள் பரவலாக்கப்பட்ட ஆட்சி உரிமை கிடைக்குமா என்பதும் சந்தேகமாகவே இருக்கின்றது.
ஒற்றையாட்சி முறையின் கீழேயே அரசியல் தீர்வு என்பது திட்டவட்டமான முடிவாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. ஒற்றையாட்சி என்ற தமிழ்ச்சொல்லும், ஆங்கிலச் சொல்லும் கருத்தாடல்களில் சிக்கல்களை உருவாக்குகின்றன என்ற காரணத்திற்காக சிங்கள மொழிப் பிரயோகத்தில் உள்ள ஏக்கிய ராஜ்ஜிய என்ற சொல்லின் அடிப்படையில் அதிகாரப் பகிர்வு மேற்கொள்ளப்படும் என கூறப்பட்டிருக்கின்றது.
மகாநாயக்கர்கள் தந்த அதிர்ச்சி 
பிளவுபடாத நாட்டிற்குள் ஏக்கிய ராஜ்ஜிய என்பது ஒற்றையாட்சியையே குறிக்கின்றது. ஏக்கிய ராஜ்ஜியத்துல பலய பெதாஹெரிம ஒற்றையாட்சிக்குள் அதிகாரப் பரவலாக்கல் என்பதே சிங்கள மொழிப் பிரயோகமாகக் கூறப்பட்டிருக்கின்றது. இந்த நிலையில் 13 ஆவது திருத்தச் சட்டத்தின் கீழான மாகாண சபை முறையிலேயே அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படும் என்று எதிர்பார்க்கலாம். சிங்களத் தீவிரவாத அரசியல் சக்திகளின் அதிகாரப் பகிர்வு கொள்கைகளின் அடிப்படையில்  மாகாண சபைக்கு மேலதிகமாக அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படும் என்று கூற முடியாது,
அதேபோன்று வடக்கும் கிழக்கும் இணைக்கப்பட வேண்டும் என்ற தமிழ் மக்களின் எதிர்பார்ப்பும் ஏற்கனவே சிதைக்கப்பட்ட ஒரு விடயமாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. நாடாளுமன்ற உறுப்பினரும், கூட்டமைப்பின் பேச்சாளருமாகிய சுமந்திரனின் கூற்றுப்படி, கிழக்கு மாகாணம் வட மாகாணத்துடன் இணைக்கப்படுவதை முஸ்லிம்கள் விரும்பவில்லை. முஸ்லிம் மக்களின் இணக்கப்பாடின்றி வடக்கையும் கிழக்கையும் இணைக்க முடியாது. ஆகவே இணைப்பென்பது இப்போதைக்கு சாத்தியமற்றது என அவர் தெரிவித்திருக்கின்றார். இந்த விடயத்தை அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்களில் ஒருவராகிய மனோ கணேசனும் வடக்கும் கிழக்கும் புதிய அரசியலமைப்பில் இணைக்கப்படுவதற்கு சாத்தியமில்லை என தெளிவாகக் கூறியிருக்கின்றார்.
வடக்கும் கிழக்கும் இணைந்திருக்க வேண்டியது சிறுபான்மை தேசிய இனங்களாகிய தமிழ் முஸ்லிம் மக்களின் அரசியல் உரிமைப் பாதுகாப்பிற்கு அத்தியாவசியமானது என்பது குறித்து கூட்டமைப்பினர் முஸ்லிம் அரசியல் தலைவர்களுடன் இதுவரையில் ஆக்கபூர்வமான பேச்சுக்கள் எதனையும் நடத்தி அந்த விடயத்தில் முன்னேற்றம் காணப்பட்டிருப்பதாகக் கூறுவதற்கில்லை.
இந்த நிலையில் ஒற்றையாட்சி முறையின் கீழ், இணைக்கப்படாத வடக்கையும் கிழக்கையும் கொண்ட ஓர் அரசியல் தீர்வு என்பதே, இதுவரையில் புதிய அரசியமைப்பு விடயத்தில் காணப்படுகின்ற நிலைப்பாடாகும். அதேவேளை, சுயநிர்ணய உரிமை, பகிர்ந்தளிக்கப்பட்ட இறைமை என்பவை குறித்து பேச்சுக்கள் நடைபெற்றிருப்பதாகவே தெரியவில்லை.
புதிய அரசியலமைப்பின் மூலம் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படும். இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான அரசியல் தீர்வு எட்டப்படும் என்பது தமிழ்த்தேசிய கூட்டமைப்புத் தலைமையின் நம்பிக்கையாகும். இந்த நம்பிக்கையை தமிழ் மக்கள் மத்தியில் அவர்கள் ஊட்டி வருகின்றார்கள். சர்வதேசத்தின் உதவியுடன் அரசியல் தீர்வு உள்ளிட்டஅனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பதில் கூட்டமைப்பின் தலைமைக்கட்சியாகிய தமிழரசுக் கட்சி அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது என்பது அவர்களுடைய தொடர்ச்சியான அரசியல் பிரசாரமாகும்.
எனவே, தமிழ் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளுக்கு அமைவாக புதிய அரசியலமைப்பில் அரசியல் தீர்வு கிட்டுமா என்பது சந்தேகமாக உள்ள நிலையிலேயே புதிய அரசியலமைப்பும் அவசியமில்லை. அரசியலமைப்புத் திருத்தமும் தேவையில்லை என்ற பௌத்த மத பீடத் தலைவர்களான மகாநாயக்கர்களின் கருத்து வெளியாகியிருக்கின்றது. மகாநாயக்கர்களின் இந்தக் கருத்தானது, அரசாங்கத்தின் புதிய அரசியலமைப்பை உருவாக்கும் முயற்சியை ஆட்டம் காணச் செய்திருப்பதைப் போலவே கூட்டமைப்பின் தலைமையையும் அதிர்ச்சிக்கும் தவிப்புக்கும் உள்ளாக்கியிருக்கின்றது.
புதிய அரசியலமைப்பின் மூலம் தமிழ் மக்களுக்கு விமோசனத்தைப் பெற்றுத் தரப் போவதாகக் கூறி வருகின்ற நிலையில் புதிய அரசியலமைப்பை உருவாக்கவிடாமல் தடுக்கும் வகையில் மகாநாயக்கர்கள் எழுச்சி கொண்டிருப்பது கூட்டமைப்பின் தலைமையையும் ஆட்டம் காணச் செய்திருக்கின்றது.
கனவிலும் எதிர்பார்த்திராத வகையில் பௌத்த மகாநாயக்கர்களிடமிருந்து வெளிப்பட்டுள்ள கருத்தானது, நல்லாட்சி அரசாங்கத்தின் இருப்பையே ஆட்டம் காணச் செய்யும் வகையில் பெரும்பான்மை இனத்தவராகிய சிங்கள மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பு அரசியல் அலையாக உருவெடுக்கும் ஆபத்தான நிலைமை காணப்படுகின்றது.
புதிய அரசியலமைப்பு உருவாக்குதவற்கான முயற்சிகள் கடந்த வருடத்தின் ஆரம்பத்தில் முன்னெடுக்கப்பட்ட போதிலும், அதுகுறித்து மகாநாயக்கர்களிடம் இருந்து எந்தவிதமான எதிர்ப்பு உணர்வும் வெளிப்படுத்தப்பட்டிருக்கவில்லை.
புதிய அரசியலமைப்புக்கான நகல் வரைபை முழுமையாக்குகின்ற கட்டத்தை எட்டியுள்ள நிலையில் அவர்களிடம் இருந்து வெளிப்பட்டுள்ள இந்த எதிர்ப்பானது, நிச்சயமாக மிக வலுவான ஓர் அரசியல் பின்னணியைக் கொண்டிருக்கின்றது என்பது தெளிவாகத் தெரிகின்றது. பௌத்த சிங்கள மேலாதிக்கத்தையும், சிறுபான்மை தேசிய இனங்களை இரண்டாம் தரப் பிரஜைகளாக வைத்திருக்கின்ற நோக்கத்தையும் கொண்டுள்ள இந்த அரசியல் பின்னணியானது, நல்லாட்சி அரசாங்கத்திற்கு பெரியதொரு சோதனைக்களத்தைத் திறந்திருக்கின்றது. இந்த சோதனைக் களத்தை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் எவ்வாறு கiயாளப் போகின்றார்கள், எவ்வாறு வெற்றி காணப் போகின்றார்கள் என்பது தெரியவில்லை.

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.