குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வவுனியா மாவட்டத்தில் 195 மில்லியன் ரூபா ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்ட மத்திய பேருந்து நிலையமானது, இலங்கை போக்குவரத்து சபையினருக்கும் தனியார் போக்குவரத்து துறையினருக்கும் இடையிலான முறுகல்நிலை காரணமாக அவ்விடத்திலிருந்து பேருந்து சேவைகளை வழங்குவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
இவ்விடயம் தொடர்பாக கவனம் செலுத்திய வடமாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன், வடமாகாண பயணிகள் வீதிப்போக்குவரத்து அதிகார சபையின் மூலம் போக்குவரத்து தொடர்பான ஒழுங்குவிதிகளை தயாரித்து வர்த்தமானி மூலமாகவும் அறிவித்திருந்தார். அதன் தொடர்ச்சியாக வடமாகணத்தில் இணைந்தநேர அட்டவணையினை அமுல்ப்படுத்தல் மற்றும் வவுனியா மத்திய பேருந்து நிலையத்தினை செயற்ப்படுத்தல் தொடர்பான முக்கிய கலந்துரையாடலானது அமைச்சர் அவர்களினால் அனைத்து வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்களுக்கும் அழைப்புவிடுத்து கடந்த 11.07.2017 செவ்வாய்க்கிழமை மாலை 3 மணியளவில் வவுனியா மாவட்ட செயலக கேட்போர்கூடத்தில் நடாத்தப்பட்டது.
அக்கூட்டத்தில் போக்குவரத்து ஒழுங்குவிதிகள் மற்றும் இணைந்தநேர அட்டவணை தொடர்பாக அறிவுறுத்தப்பட்டதுடன், சேவை வழங்குனர்களான இலங்கை போக்குவரத்து சபை, தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் ஆகிய இருவருக்கும் ஒருவாரகால அவகாசம் கொடுக்கப்பட்டு இவைதொடர்பான ஏதேனும் ஏற்பாடுகள் இருப்பின் அவற்றினை அதிகாரசபைக்கு தெரியப்படுத்துமாறும் அறிவுறுத்தப்படுள்ளது. மீண்டும் எதிர்வரும் 18ம் திகதி நடைபெறவிருக்கும் கூட்டத்தில் சேவை வழங்குனர்களினால் கொடுக்கப்பட்ட பரிந்துரைகளையும் கருத்தில்கொண்டு இறுதித்தீர்மானம் எடுக்கப்படுமெனவும், அதனைத்தொடந்து மூன்று நாட்கள் கால அவகாசத்தில் புதிய மத்திய பேருந்து நிலையத்திலிருந்து இணைந்தநேர அட்டவணைப்படி சேவைகள் ஆரம்பிக்கப்படும் எனவும் அறியமுடிகின்றது.
குறித்த கூட்டத்தில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான், வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், வடமாகாண சபை உறுப்பினர் எஸ்.மயூரன் ஆகிய மக்கள் பிரதிநிதிகளும் வவுனியா மாவட்ட செயலாளர், வடமாகாண போக்குவரத்து அமைச்சின் செயலாளர், இலங்கை போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர், வடமாகாண போக்குவரத்து அதிகார சபையின் தலைவர், பொலிஸ் அதிகாரிகள், இலங்கை போக்குவரத்து சபையின் உயர்மட்ட அதிகாரிகள், வடமாகாண தனியார் பேருந்து உரிமையாளர் சங்கங்களின் சம்மேளனத்தலைவர், உறுப்பினர்கள் மற்றும் தனியார் பேருந்து உரிமையாளர்கள் கலந்துகொண்டிருந்தனர்.