கடந்த 17மே 2017 அன்று வண பிதா. எழில் ராஜன் அவர்களால் முள்ளிவாய்க்கால் கிழக்கு சின்னப்பர் தேவாலயத்திற்கு அருகாமையில் இடம்பெறவிருந்த நினைவு நிகழ்வை தடை செய்து, மத நிகழ்வுகளை மட்டும் அனுமதித்து முல்லைத்தீவு நீதவான் கட்டளை பிறப்பித்திருந்தார்.
இறந்தவர்களின் பெயர்களை சிறிய கற்களின் மீது பொறித்து அவற்றை ஓர் இடத்தில் ஒருங்கு சேர்த்து அதை ஒரு நினைவிடமாக ஆக்கும் முயற்சிக்கு எதிராகவே அத்தடை வழங்கப்பட்டிருந்தது.
அக்கற்களில் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து மரணித்தவர்களின் பெயர்களும் இருக்கலாம் என்ற பொலிசாரின் சந்தேகத்தின் அடிப்படையிலேயே முல்லைத்தீவு நீதவான் அக்கட்டளையை ஆக்கியிருந்தார்.
இக்கட்டளை 14 நாட்களுக்கு ஒரு முறை என்ற அடிப்படையில் தொடர்ந்து நீடிக்கப்பட்டு வருகின்றது. வண பிதா எழில் ராஜன் சார்பில் முல்லைத்தீவு நீதவான் முன்னிலையில் பல சந்தர்ப்பங்களில் ஆஜராகி, யாரை நினைவு கூறலாம் என்பது தொடர்பில் சட்டம் எந்தவொரு மட்டுப்பட்டையும் விதிக்கவில்லை என சட்டத்தரணி கு. குருபரன் சமர்ப்பித்தார்.
எனினும் தேசிய பாதுகாப்பு, தேசிய ஒற்றுமை, சமாதானக் குலைவு எனக் காரணம் காட்டி பொலீசார் தடை உத்தரவை தொடர்ந்து நீடிக்குமாறு நீதவானின் முன்னர் விண்ணப்பம் செய்து வருவதும் அவ்விண்ணப்பத்தை ஏற்று தடையை நீதவான் நீடித்துக் கொண்டும் வருகிறார்.
இந்நிலையில் குறித்த தடை உத்தரவை மீளாய்வு செய்யுமாறு வவுனியா மேல் நீதிமன்றில் சட்டத்தரணி கு. குருபரன் மீளாய்வு வழக்கு ஒன்றை 12.07.2017 அன்று தாக்கல் செய்து சமர்ப்பணங்கள் செய்தார். மனுவை ஏற்றுக் கொண்ட வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி கௌரவ. சசி மகேந்திரன் வழக்கு கோவையை மீளாய்விற்கு வவுனியா மேல் நீதிமன்றிற்கு அனுப்புமாறு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றை பணித்துள்ளார். விளக்கத்திற்கு 25.07.2017 திகதி நியமிக்கப்பட்டுள்ளது.