சட்டபூர்வ அங்கீகாரம் இல்லாமல் என்கவுன்ட்டர் நடத்தி மணிப்பூரில் ராணுவத்தினர் படுகொலைகள் செய்துள்ளனர் என எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்துமாறு சிபிஐ.க்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மணிப்பூரில் மாவோயிஸ்ட்கள் உட்பட பல்வேறு தீவிரவாத அமைப்பினர் போராட்ஙகளில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் ராணுவம், அசாம் ரைபிள்ஸ் மற்றும் மணிப்பூர் காவல்துறையினர் இணைந்து தீவிரவாதிகளை ஒடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
எனினும் தீவிரவாதிகள் அல்லாதவர்களையும் ராணுவத்தினர் மற்றும் காவல்துறையினர் சட்டவிரோத மாக சுட்டுக் கொன்றுள்ளனர் எனவும் கடந்த 2000-ம் ஆண்டு முதல் 2012-ம் ஆண்டு வரை என்கவுன்ட்டர் என்ற போர்வையில் 1,528 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் எனவும் இதுகுறித்து விசாரணை நடத்தி பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க உத்தரவிட வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநலன் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் இது குறித்து தீவிர விசாரணை நடத்திட அதிகாரி கள் குழுவை உடனடியாக அமைக் கும்படி சிபிஐ இயக்குநருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.