விபுலானந்த அடிகளாரை நினைவுகொள்ளுதல் அவரது பணிகளினைக் காலமறிந்து முன்னெடுப்பதுடன் தொடர்புபடுகிறது. இது அவரை அறிந்து கொள்வதுடனும் புரிந்துகொள்வதுடனும் சாத்தியமாகிறது.
அறிவுப் பரப்பின் முக்கியத்துவமிக்க பகுதிகளை இனங்கண்டு மக்களுக்குரிய வகையில் தகவமைக்கும் பணியில் வல்லவராக விபுலானந்த அடிகள் திகழ்ந்தார். அந்தவகையில் ஒருகாலத்தில் தமிழ் மக்கள் பெற்றிருந்த வல்லபங்களில் கட்டடக் கலையும் ஒன்றாகும்.
ஆயினும் நவீனகாலத்து தமிழ்ச் சமூகத்தின் அறிவுப்புலத்தில்படாது வல்லபம் இழந்துநிற்கும் கட்டடக்கலை புலமைமரபின் கீற்றுக்கள் எல்லைகள் கடந்தும் விகசிப்பனவாக உள்ளன.
கட்டடக் கலைஞர் சி.அஞ்சலேந்திரன் அந்தவகையிலான துருவ நட்சத்திரமாகத் திகழ்கின்றனர். பொதுமக்கள் கட்டடக் கலைமரபு பற்றிய கொள்கையுடன் இயங்கும் அஞ்சலேந்திரன் அவர்கள் மக்கள் நோக்குக் கொண்;ட விபுலானந்த அடிகளாரது நினைவுப் பேருரைக்கு மிகவும் பொருந்தியவர் ஆகின்றார்.
இத்தகையதொரு ஆளுமையை அறிமுகம் செய்துவைக்கும் மற்றுமொரு ஆளுமை கலாநிதி ராதிகா குமாரசுவாமி அவர்கள். வையகத்தில் மனிதர்கள் வாழ்வாங்கு வாழ்வதற்கான புலமைத்துவ வாழ்வு அவருடையது. இந்தவகையிலான இணைப்பைக் கொண்டாடுவதில் கிழக்குப் பல்கலைக்கழகம் பெருமிதம் கொள்கிறது.
கலாநிதிசி.ஜெயசங்கர்
இணைப்பாளர்
சுவாமி விபுலானந்த
நினைவுப் பேருரைக் குழு