Home இலங்கை இலங்கையில் சிங்கப்பூர் முதலீடுகளை அதிகரிப்பதற்கான நல்ல வாய்ப்புகள் உள்ளன – சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர்

இலங்கையில் சிங்கப்பூர் முதலீடுகளை அதிகரிப்பதற்கான நல்ல வாய்ப்புகள் உள்ளன – சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர்

by admin


நல்லிணக்கத்தை பலப்படுத்துவதற்காக ஜனாதிபதி  மைத்ரிபால சிறிசேன அவர்கள் மேற்கொண்டுவரும் முயற்சிகள் பாராட்டத்தக்கவை என சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி விவியன் பாலகிருஷ்னன் தெரிவித்தார்.

ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (18) ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். நாளை யாழ்ப்பாண நூலகத்திற்கு சென்று யாழ் நூலகத்திற்கு நூல்களை அன்பளிப்பு செய்யவுள்ளதாகவும் நூலக ஊழியர்களுக்கு பயிற்சி வசதிகளை வழங்கும் உடன்படிக்கையில் கைச்சாத்திடவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அத்துடன் யாழ்ப்பாண வைத்தியசாலையின் எலும்பு இயல் திணைக்களத்திற்கு சிங்கப்பூர் உதவவுள்ளதாகவும் அவர் கூறினார்.

சிங்கப்பூருக்கும் இலங்கைக்கும் இடையே நீண்டகாலமாக இருந்துவரும் இருதரப்பு உறவுகளை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, யாழ்ப்பாண நூலகத்திற்கும் வைத்தியசாலைக்கும் சிங்கப்பூர் வழங்கும் உதவிகளுக்கு நன்றி தெரிவித்தார்.

மேலும் இலங்கையில் சிங்கப்பூர் முதலீடுகளை அதிகரிப்பதற்கான நல்ல வாய்ப்புகள் உள்ளதாக கலாநிதி பாலகிருஷ்னன் தெரிவித்தார். சுற்றுலா மற்றும் உபசரிப்பு துறைகளில் சிங்கப்பூர் முதலீட்டார்களுக்கு நல்ல முதலீட்டு வாய்ப்புகள் உள்ளதாக ஜனாதிபதி   தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இலங்கையில் ஏற்கனவே 300க்கும் மேற்பட்ட சிங்கப்பூர் முதலீடுகள் உள்ளதாக குறிப்பிட்ட சிங்கப்பூர் வெளிநாட்டமைச்சர், சக்திவளம், நீர், கல்வி மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைகளிலும் சிங்கப்பூர் முதலீட்டாளர்கள் முதலீடுகளை செய்யும் வாய்ப்புகள் உள்ளதாக தெரிவித்தார்.

இலங்கையின் சர்வதேச உறவுகள் தொடர்பில் பாராட்டுக்களைத் தெரிவித்த கலாநிதி பாலகிருஷ்னன், பலம்பொருந்திய அயல்நாடுகளுக்கு பக்கத்தில் உள்ள சிறிய நாடுகள் என்ற வகையில் சிங்கப்பூர் மற்றும் இலங்கை போன்ற நாடுகள் வெளி உறவுகள் மற்றும் வலுச் சமநிலையில் மிகுந்த கவனத்துடன் செயற்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More