சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் சசிகலாவை சென்னை சிறைக்கு மாற்ற வேண்டும் என இரு மாநில தலைமைச் செயலாளர்களுக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது.
சிறையில் சசிகலாவிற்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டிருப்பதாக டிஐஜி ரூபா தெரிவித்ததனைத் தொடர்ந்து, சசிகலா வெளியே சென்று வருவது போன்ற புகைப்படங்கள் மற்றும் வீடியோ வெளியாகியிருந்தன.
இந்தக் குற்றச்சாட்டுகளையடுத்து சசிகலாவிற்கு அளிக்கப்பட்ட சலுகைகள் நிறுத்தப்பட்டன. அத்துடன் அவர் வேறு சிறைக்கு மாற்றப்படலாம் என தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில் சசிகலாவை தமிழக சிறைக்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்தி வழக்கறிஞர் புகழேந்தியின், சிறைக்கைதிகள் உரிமை மையம் மனு அனுப்பியுள்ளது. தமிழக தலைமை செயலாளர் மற்றும் கர்நாடக தலைமை செயலாளருக்கு இந்த மனு அனுப்பப்பட்டுள்ளது.
அதில் உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்படியும், ஐநா மனித உரிமை விதிப்படியும் ஒரு கைதி தனது வசிக்குமிடத்திற்கு மிக அருகில் உள்ள சிறையில் அடைக்கப்பட வேண்டும். குடும்பத்தாரை சந்திக்க வசதியாக விதிக்கப்பட்டுள்ள இந்த சட்ட விதியின்படி சசிகலாவை தமிழக சிறைக்கு மாற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.