உலக வங்கியின் அனுசரனையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனையில் மேற்கொள்ளப்படவுள்ள சுத்தமான குடிநீரைப் பெற்றுக் கொடுத்தல், மற்றும் மக்களின் பொது சுகாதார வசதிகளை மேம்படுத்துவது தொடர்பான கருத்திட்டங்களை, விரைவுபடுத்துமாறு நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.
உலக வங்கியின் 25ஆயிரம் மில்லியன் ரூபா நிதிஉதவியினால் எமது நாட்டில் மேற்கொள்ளப்பட்டுவரும் நீர் வழங்கல் மற்றும் ஆரோக்கியப் பாதுகாப்பை உறுதிப்படுத்தக்கூடிய பொது சுகாதாரத் திட்டங்கள் தொடர்பாக ஆராயும் உயர்மட்ட கலந்துரையாடலொன்று இன்று இடம்பெற்ற போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டதில் மேற்கொள்ளப்படவுள்ள கருத்திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பவிருப்பதுடன், இக்கருத்திட்டங்களை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கும் வைபவம் எதிரவரும் ஓகஸ்ட் மாதம் 28ஆம் திகதி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
முல்லைத்தீவு மாவட்டத்தில், சுமார் 4000 ஆயிரம் மில்லியன் ரூபா செலவில் நீர் வழங்கல் மற்றும் பொது சுகாதார திட்டங்கள் பூர்த்தியடைகின்ற போது அம்மாவட்டத்தில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்களுக்கு சுத்தமான குடி நீரை குழாய் வழியாக வழங்க முடியும் எனவும் அத்தோடு 15 ஆயிரம் குடும்பங்களுக்கு சுகாதார மேம்பாட்டுடன் கூடிய கழிவறைகளைப் பெற்றுக் கொடுக்கவும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.