குளோபல் தமிழ்ச்செய்தியாளர்
போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்திற்கு நிலக்கடலை பொருட்கள் உற்பத்தி நிலையம் பெருங்கொடையாகும் என கிளிநொச்சி மாவட்டச் செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் அ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
21.07.2017 கிளிநொச்சி முழங்காவிலில் தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்கான செயலகத்தின் ஐந்து மில்லியன் ரூபா நிதியில் முழங்காவிலில் அமைக்கப்பட்ட நிலக்கடலை பொருட்கள் உற்பத்தி நிலையத்தினைத் திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது. இப்பிரதேசத்தில் காணப்படுகின்ற விவசாய உற்பத்திப் பொருட்கள் சந்தைப்படுத்தலை நோக்கமாகக் கொண்டதாக இருக்க வேண்டும். ஏற்கனவே போரினால் பாதிக்கப்பட்டு வாழ்வாதார நிலையில் பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் இவ் உற்பத்தி நிலையம் அமைத்து திறக்கப்படுவது பெருங் கொடையாகும்.
இந்நிலையம் தமது உற்பத்திப் பொருட்களை வடமாகாணத்திலே சந்தையில் பெரும் மதிப்புள்ளதாக மாற்றி பெரும் வருமானம் ஈட்டுவதன் மூலம் இந்நிலையம் எதிர்காலத்தில் பெரும் தொழிற்சாலையாக மாறி தொழில் வாய்ப்புகளை வழங்கக் கூடிய நிலைக்கு உயர வேண்டும் எனவும் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் கட்டடத்தினை பூநகரி உதவிப் பிரதேச செயலாளர் எஸ்.அமல்ராஜ், கிளிநொச்சி மாவட்ட கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் வே.ஆயகுலன், கிளிநொச்சி மாவட்டச் செயலக உதவித்திட்டமிடல் பணிப்பாளர் அ.கேதீஸ்வரன் ஆகியோர் நாடாவினை வெட்டித் திறந்து வைத்தனர்.