குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இன்று 23.07.2017 எதிர்கட்சித்தலைவர் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனும் கொழும்பில் சந்தித்துக் கூடிப் பேசியுள்ளார்கள். இந்த சந்திப்பின் போது ஏனைய விடயங்களுடன் வடமாகாணசபையின் தற்போதைய நிலைமையும் பரிசீலிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
அங்கு எழுந்துள்ள நிலைமை பற்றி முடிவுகளை எடுக்க முன்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எல்லா கட்சித் தலைவர்களுடனும் பேச வேண்டும் என்ற கருத்தின் அடிப்படையில் எல்லாக் கட்சித் தலைவர்களையும் சந்திப்பது என்று முடிவு எடுக்கப்பட்டது.
அது வரையில் வடமாகாணசபையில் முன் மொழியப்பட்ட பிரேரணைகள் உட்பட சபையில் எழும் ஏனைய முரண்பாட்டுக்கமைவான கருமங்கள் பிற்போடப்படுவது தேவை என்றும் இணக்கம் காணப்பட்டது.
சாமுடன் பேசவுள்ளார் விக்கி:-
Jul 22, 2017 @ 04:10
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தனுக்கும் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையிலான சந்திப்பு நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வட மாகாண சபை அமைச்சர்கள் மீது சுமத்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை நடத்திய பின்னர், இலங்கை தமிழரசுக் கட்சி உறுப்பினர்களால் முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்பட்ட நிலையில் சம்பந்தன் உள்ளிட்டோர் விக்னேஸ்வரனுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் முதலமைச்சருக்கு எதிராக வட மாகாண ஆளுனரிடம் சமர்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை வாபஸ் பெறப்பட்டது. எனினும் தொடர்ந்தும் வட மாகாண சபையில் இழுபறி நிலை தொடர்ந்து வருகின்றது. இந்த நிலையிலேயே சம்பந்தன், விக்னேஸ்வரனை நாளை கொழும்பில் சந்தித்து கலந்துரையாட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.