210
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
யாழ்.நல்லூர் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் , யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனின் பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் இருவர் காயமடைந்துள்ளார்.
நல்லூர் தெற்கு வாசல் கோபுரத்திற்கு முன்பாக இன்று சனிக்கிழமை மாலை 5.10 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்று உள்ளது.
துப்பாக்கிதாரி என்னை நோக்கி சுட்டார்.
மெய்பாதுகாவலர் என்னை காரினுள் தள்ளினார்.
குறித்த சம்பவம் குறித்து யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தெரிவிக்கையில் ,
எனது மெய்பாதுகாவலரான பொலிஸ் சார்ஜென்ட் துப்பாக்கி தாரியின் துப்பாக்கியை பிடித்து பறிக்க முயன்ற வேளை நான் துப்பாக்கியை விடுடா என கத்திக்கொண்டு அவனை நோக்கி ஓடி அவனுக்கு அருகில் சுமார் எட்டடி தூரம் சென்ற போது , துப்பாக்கி தாரி சரமாரியாக துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டார்.
அதில் துப்பாக்கி சூட்டுக்கு எனது மெய்பாதுகாவலரான பொலிஸ் சார்ஜென்ட் இலக்காகி காயமடைந்தார். அதனை தொடர்ந்து துப்பாக்கிதாரி என்னை நோக்கி துப்பாக்கியை திருப்பி சுட முயன்ற போது என்னுடைய மற்றைய பொலிஸ் கான்ஸ்டபிள் ஓடி வந்து என்னை காரினுள் தள்ளி ஏற்றினார்.
என்னை காரினுள் ஏற்றி விட்டு அவர் துப்பாக்கி தாரி மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டார். அவர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் , ஆலய பின் பகுதியில் இருந்த வேலி தகரங்களை துளைத்து சென்றன
துப்பாக்கி தாரி மீண்டும் என்னை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டார். அப்போது பொலிஸ் காண்டபிளுக்கு தோள் பட்டையில் துப்பாக்கி சூட்டு காயம் ஏற்பட்டது.
எனது பாதுகாப்பு உத்தியோகஸ்தர் துப்பாக்கிதாரி மீது மூன்று நாலு சூட்டினை நடாத்தி இருந்தார். அதில் துப்பாக்கி தாரிக்கு காயம் ஏற்பட்டதா என்பதனை அவதானிக்க முடியவில்லை. ஆனாலும் அவர் நொண்டி நொண்டி ஓடினதை அவதானித்தேன்.
அதனை தொடர்ந்து காயத்திற்கு உள்ளன, எனது இரு மெய்பாதுகாவலர்களையும் எனது காரில் ஏற்றிக்கொண்டு யாழ்.போதனா வைத்திய சாலைக்கு கொண்டு சென்றேன்.
இது தொடர்பில் , பிரதி பொலிஸ் மா அதிபருக்கும் , தலைமையாக பொலிஸ் பொறுப்பதிகாரிக்கும் அறிவித்து குறித்த இடத்தில் உள்ள கண்காணிப்பு காமராக்களை பரிசோதித்து துப்பாக்கி தாரியை கைது செய்யும் நடவடிக்கையை துரித கெதியில் முன்னெடுக்குமாறு உத்தரவு இட்டுள்ளேன்.
இந்த சம்பவம் ஆனது நான் வழமையாக கோவில் வீதியால் தான் சென்று வருவேன். அதனை அவதானித்து என்னை இலக்கு வைத்து இந்த துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டதா எனும் சந்தேகம் எனக்கு எழுந்துள்ளது. எனில் அண்மைக்காலமாக யாழ்.மேல் நீதிமன்றில் நடைபெறும் பார தூரமான வழக்குகளை கையாளும் நபராக இருப்பதனால் , இந்த துப்பாக்கி சூடு என்னை இலக்கு வைத்து நடந்ததாக இருக்கலாம் என சந்தேகம் எழுகின்றது.
ஏனெனில் அந்த துப்பாக்கியை அவர் கையாண்ட விதம் ஒரு அனுபவம் உள்ள நபர் போன்று இருந்தது. அவர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகம் பார்த்த போதும் அவர் ஒரு அனுபவம் மிக்க துப்பாக்கி சூட்டாளர் போன்றே தோன்றியது.
வீதியில் சுமார் ஐந்து நிமிடங்கள் எனது மெய் பாதுகாவலர்களுக்கும் துப்பாக்கி தாரிக்கும் இடையில் துப்பாக்கி சண்டை நடைபெற்றது.
நீதித்துறைக்கு விடுக்கப்பட்ட சவால்.
மேல் நீதிமன்ற நீதிபதியான என் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகம் ஆனது நீதித்துறைக்கு விடுக்கப்பட்ட சவாலாகவே நான் கருதுகின்றேன்.
ஏனெனில் அண்மைக்காலமாக நடைபெறும் வழக்குகள் அனைத்தும் உயிர் அச்சுறுத்தல் உள்ள வழக்குகள் தான் அத்துடன் எனது மெய் பாதுகாவலர்களை எவருக்கும் தெரியாது. அதனால் அவர்களை இலக்கு வைக்க வேண்டிய தேவை எவருக்கும் இருந்திருக்காது.
ஆகவே இது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு , நீதி அமைச்சு மற்றும் நீதிச்சேவை ஆணைக்குழு எனது பிரதம நீதியரசரும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோருகிறேன். என தெரிவித்தார்.
வீதியில் நின்ற இளைஞன் மீது துப்பாக்கி பிரயோகம்.
சம்பவத்தை நேரில் பார்த்த இளைஞர் ஒருவர் தெரிவிக்கையில் ,
நாம் வீதியால் வந்து கொண்டிருந்த வேளை நல்லூர் பின் வீதியில் உள்ள கோவில் வீதி பருத்துறை வீதி சந்திக்கு அருகில் இளைஞர் ஒருவர் நின்றிருந்தார். அவரது ஆடையில் வர்ண நிறபூச்சுக்கள் (பெயின்ட்) காணப்பட்டன. அவரை பார்க்கும் போது வர்ண நிறபூச்சு (பெயின்ட் அடிக்கும்) வேலைக்கு சென்று வந்தவர் போன்று காணப்பட்டார்.
குறித்த இளைஞன் மீது ஆயுததாரி ஒருவர் கைத்துப்பாக்கியால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டார். அவ்வேளை அந்த வீதியால் எமக்கு பின்னால் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதியின் வாகனமும் வந்திருந்தது.
துப்பாக்கி பிரயோகத்தை அடுத்து நாமும் வீதியால் வந்து கொண்டிருந்த நீதிபதியும் வாகனத்தை நிறுத்தினோம். அதன் பின்னர் நாமும் நீதிபதியின் வாகனத்தில் வந்திருந்த நீதிபதியின் பாதுகாப்பு உத்தியோகஸ்தரான பொலிஸ் உத்தியோகஸ்தரும் துப்பாக்கி தாரியை பிடிக்க முயன்றோம்.
அதன் போது துப்பாக்கி தாரி எம் மீதும் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டார். அதன் போது நீதிபதியின் பாதுக்காப்பு உத்தியோகஸ்தர்கள் இருவருக்கு காயம் ஏற்பட்டு உள்ளது.
துப்பாக்கிதாரி மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றார்.
அதனை தொடர்ந்து துப்பாக்கிதாரி வீதியால் ஸ்கூட்டி ரக மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த வயோதிப தம்பதிகளின் மோட்டார் சைக்கிளை துப்பாக்கியை காட்டி மிரட்டி பறித்து கொண்டு தப்பி செல்ல முயன்ற வேளை மோட்டார் சைக்கிள் கட்டுபாட்டை இழந்து வீதியோர மதிலில் மோதுண்டது.
அதன் போது துப்பாக்கி தாரியின் கையில் இருந்த கைத்துப்பாக்கி வீதியில் வீழ்ந்து. அதை கைவிட்டு துப்பாக்கி தாரி கோவில் வீதி வழியாக மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றார் என தெரிவித்தார்.
இலக்கு யார் ?
வீதியால் வந்த நீதிபதியின் காரினை மறிக்கவும் , நீதிபதியை காரினை விட்டு இறக்கவும் , வீதியில் நின்ற இளைஞர் ஒருவரை இலக்கு வைத்து துப்பாக்கி பிரயோக நாடகம் நடத்தப்பட்டு இருக்கலாம் எனவும் , ஏனெனில் சம்பவத்தை பார்த்த இளைஞர் தெரிவித்த, துப்பாக்கிதாரியின் இலக்கான வர்ணநிற பூச்சு (பெயின்ட்) ஆடையில் இருந்த இளைஞன் சம்பவத்தின் பின்னர் தலைமறைவாகி உள்ளார்.
அதனால் துப்பாக்கிதிரியும் வர்ணநிற பூச்சு (பெயின்ட்) ஆடையில் இருந்த இளைஞனும் சேர்ந்தே அந்த இடத்திற்கு வந்த பின்னர் நீதிபதியின் வாகனத்தை வழி மறிக்கும் முகமாக முன்னராக துப்பாக்கி பிரயோக நாடகம் ஒன்றினை நடாத்தி வாகனத்தை விட்டு நீதிபதி கீழ் இறங்கியதும் நீதிபதியினை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு இருக்கமால் எனும் கோணத்தில் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
துப்பாக்கியின் மகசீன் மீட்கப்படவில்லை.
அதேவேளை சம்பவ இடத்தில் பத்து வெற்று துப்பாக்கி சன்னங்கள் காணப்பட்டன. துப்பாக்கிதாரி வீழ்த்தி சென்ற நிலையில் மீட்கப்பட்ட கைத்துப்பாக்கியானது , 12MM வகையை சேர்ந்து எனவும் , துப்பாக்கி மீட்கப்பட்ட போது மகசீன் காணப்படவில்லை எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
Spread the love