யாழ். மேல்நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தை வன்மையாகக் கண்டிப்பதாக புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள கண்டன அறிக்கையில்,
நீதிபதி இளஞ்செழியன் மிக நீண்ட காலமாக எனக்கு நன்கு பரீட்சயமானவர். அவர் வவுனியாவில் இருந்த காலத்தில், அதிஉச்ச யுத்தகாலமாக இருந்தபோதிலும் மிகத் துணிவாகவும், நேர்மையாகவும் தன்னுடைய நீதிச் சேவையினை ஆற்றிவந்ததை நாங்கள் பார்த்திருக்கின்றோம்.
எந்தவிதமான அரசியல் கலப்பும், பக்கச்சார்பும் இன்றி மிகவும் நேர்மையான முறையிலே அவர் செயற்பட்டு வந்திருக்கின்றார். யாழ்ப்பாணத்திலே மிகவும் பாரதூரமான, உயிர் அச்சுறுத்தல் மிக்க வழக்குகள் பலவற்றை அவர் நேர்மையாக கையாண்டிருக்கின்றார்.
இத்தகைய துணிவும் நேர்மையுமுள்ள நீதிபதி இளஞ்செழியன், எங்களுடைய பகுதிக்கு இன்று மிக அத்தியாவசியமான நீதியை வழங்குபவராகவும், நீதியைப் பாதுகாப்பவராகவும் பார்க்கப்படுகின்றார்.
இன்று குற்றச்செயல்கள் மற்றும் வன்முறைகள் அதிகமாக இருக்கின்ற எங்களுடைய பகுதியிலே இப்படியான ஒரு நேர்மையான, பக்கச்சார்பற்ற ஒரு நீதிபதியின் சேவை மிகவும் அவசியமாகும்.
இப்படியான குற்றச்செயல்கள் தொடராமல் பார்ப்பது பாதுகாப்புத் தரப்பினருடைய கடமையாகும். இதை அவர்கள் செவ்வனே செய்யவேண்டுமென்று நாம் வலியுறுத்திக் கூறுகின்றோம்.
இவர்மீதான தாக்குதலை நாம் வன்மையாகக் கண்டிப்பதுடன், இந்த சம்பவத்தில் கொலையுண்ட சார்ஜண்ட் ஹேமச்சந்திரவின் குடும்பத்திற்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.
நீதிபதி இளஞ்செழியன் மீதான கொலை முயற்சிக்கு கண்டனம்:- TNPF:
யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி மாண்புமிகு இளஞ்செழியன் அவர்களைக் குறிவைத்து துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அச் சம்பவத்தில் நீதிபதியின் மெய்ப்பாதுகாவலர் கொல்ப்பட்டதுடன், நீதிபதி தெய்வாதீனமாக காயங்களின்றி தப்பியுள்ளார்.
அரசியல் அதிகாரம் மிக்கவர்களுக்கு எதிரான வழக்குகளிலும், பொலீஸ் அதிகாரிகளுக்கு எதிரான வழக்குகளிலும் அரசியல் கட்சிகள் என்னும் போர்வையில் துணை இராணுவக்குழுவாக இயங்கியவர்களிற்கு எதிரான வழக்குகளையும் மிகத் துணிச்சலுடன் கையாண்டு தண்டனை வழங்கியவர்.
நீதிபதி இளஞ்செழியன் அவர்கள் மாமனிதர் குமார் பொன்னம்பலம் அவர்களின் கனிஸ்ட சட்டத்தரணியாக இருந்து அவரது பாசறையில் வளர்ந்தவர். அவர் உண்மை, நேர்மை, துணிச்சல், நீதி என்பவற்றிற்கு கட்டுப்பட்டு மக்களுக்கு சேவை செய்து கொண்டிருக்கின்றார்;. அவர் வவுனியாவில் நீதவானாக பதவியேற்ற காலப்பகுதியில் யுத்தம் உக்கிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. அக்காலப்பகுதியில் அரசியல் கட்சிகள் என்ற பெயரில் வவுனியாவில் இயங்கிய துணை இராணுவக் குழுக்களின் கடத்தல், கப்பம் கோரல், சித்திரவதைகள் போன்றவற்றை இயன்றளவுக்கு கட்டுப்படுத்தியதன் மூலம் மக்கள் மத்தியில் உயர்ந்த மதிப்பை பெற்றார்.
அன்று முதல் இன்றுவரை அச்சுறுத்தல்களுக்கும், அநியாயத்திற்கும் அடிபணியாத நீதிபதி இளஞ்செழியன் அவர்கள் யுத்த்தின் பின்னர் ஒட்டுமொத்த நாட்டையும் கொதிப்படைய வைத்த வித்தியா என்ற மாணவியின் மீதான பாலியல் வல்லுறவு மற்றும் கொலை வழக்கில் பாதிக்கப்பட்ட தரப்புக்கு நீதி பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதிலும், எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறக்கூடாது என்பதிலும் தீவிர அக்கறையுடன் செயற்பட்டுவருகின்றார்.
இந்நிலையிலேயே அவர் மீதான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்ட நபர் துப்பாக்கியை கையாள்வதில் மிகுந்த அனுபவம் மிக்கவர் போன்றே துப்பாக்கியை கையாண்டார் என்றும் தன்னைக் குறிவைத்தே தாக்குதல் முயற்சி நடைபெற்றது என்றும் நீதிபதி அவர்கள் கூறியுள்ளார். எனினும் சூட்டுச் சம்பவம் நடைபெற்று 24 மணி நேரம் கடப்பத்ற்குளாகவே மேற்படி துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துக் கூறியுள்ள பொலிஸ் தரப்பினர் குறித்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் நீதிபதியை குறிவைத்து நடாத்தப்பட்டதல்ல என்று கூறியுள்ளனர். விசாரணைகளின்றி பொலிசார் அவசரப்பட்டு இவ்வாறு கூறுவதன் மூலம் பொதுமக்களுக்கு பொய்யான தகவலை வழங்கி அவர்களது கவனத்தை திசைதிருப்புவதற்கும், இக் கொலை முயற்சியின் பின்னால் இருக்கக்கூடிய சூத்திரதாரிகளை பாதுகாப்பதற்கும் முயல்கின்றார்களா என்ற சந்தேகம் எழுகின்றது.
நீதிபதி மீதான கொலை முயற்சி மற்றும், அவரது மெய்ப்பாதுகாவலர் கொல்லப்பட்ட சம்பவங்களையும், பொலீசாரின் பொறுப்பற்ற செயற்பாடுகளையும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றது.
அத்துடன் நீதிபதியின் உயிரை காப்பாற்றுவதற்காக போராடி காயமடைந்த பொலிஸ் கான்டபிள் மற்றும் உயிர்துறந்த சிங்கள பொலிஸ் உத்தியோகத்தரான உப பொலிஸ் பரிசோதகர் ஹேமர்சந்திர ஆகியோரது சேவையையும் அற்பணிப்பையும் பாராட்டுவதுடன், உயிரிழந்த ஹேமர்சந்திர அவர்களின் ஆத்;மா சாந்தியடைய பிரார்த்திப்பதுடன், அவரது பிரிவால் சோகத்தில் ஆழ்ந்திருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.
கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
தலைவர்
செல்வராசா கஜேந்திரன்
பொதுச் செயலாளர்