தேர்தல் பிரச்சாரத்தின்போது அரசியல் கட்சிகள் சாதி, மதத்தின் பெயரில் வாக்கு சேகரிக்கக் கூடாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அங்கீகரிக் கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் ஒரு கடிதம் அனுப்பியுள்ளது.
சமீபத்தில் நடந்த இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது, சில அரசியல் கட்சிகள் சாதி, மதத்தின் பெயரில் வாக்கு சேகரித்ததாக புகார் வந்துள்ளது. இது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறும் செயல் ஆகும் என அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மக்களவை மற்றும் சட்டப் பேரவைகளுக்கு நடைபெறும் இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது, சாதி, மதத்தின் பெயரில் வாக்கு சேகரிப்பது வாக்காளர்கள் மனநிலையில் தாக்கத்தை ஏற்படுத்தும். இது சுதந்திரமாகவும் நியாயமாகவும் தேர்தல் நடைபெறுவதை சீர்குலைப்பதாக அமையும். எனவே, பிரச்சாரத்தின்போது சாதி, மதத்தின் பெயரில் வாக்கு சேகரிப்பதை தவிர்க்க வேண்டும் என்று கட்சிப் பிரமுகர்களுக்கும், தொண்டர்களுக்கும் அவர்கள் சார்ந்த கட்சித் தலைமை உத்தரவிட வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.