168
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-
புங்குடுதீவு மாணவியின் இரத்த மாதிரியும் சந்தேகநபர்களிடம் இருந்து மீட்கப்பட்ட ஆடையில் காணப்பட்ட இரத்த மாதிரியும் ஒத்துப்போகவில்லை என அரச பகுப்பாய்வு திணைக்கள சிரேஸ்ட அதிகாரி வனிதா ஜெயவர்த்தன பண்டரநாயக்க என நீதாய விளக்கம் ( ரயலட் பார் ) முன்பாக சாட்சியமளித்துள்ளார்.
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு விசாரணை இன்றைய தினம் திங்கட்கிழமை யாழ்.நீதிமன்ற கட்டட தொகுதியின் இரண்டாம் மாடியில் மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையில் மேல் நீதிமன்ற நீதிபதிகள் அன்னலிங்கம் பிரேமசங்கர் மற்றும் மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகியோர் முன்னிலையில் நீதாய விளக்கம் ( ரயலட் பார் ) முறைமையில் நடைபெற்றது.
பிரதி சொலிஸ்டர் ஜெனரல் வழக்கை நெறிப்படுத்தினார்.
இன்றைய வழக்கு விசாரணைகளின் போது பிரதி சொலிஸ்டர் ஜெனரல் குமார் இரட்ணம் தலைமையில் அரச சட்டவாதிகளான நாகரத்தினம் நிஷாந்த், லக்சி டீ சில்வா மற்றும் சட்டத்தரணி மாதினி விக்னேஸ்வரன் ஆகியோர் முன்னிலையாகி இருந்தனர்.
எதிரிகள் சார்பில் 6 சட்டத்தரணிகள் முன்னிலை.
1ம் ,2ம் , 3ம் , 6ம் மற்றும் 8ஆம் எதிரிகள் சார்பில் சட்டத்தரணி மஹிந்த ஜெயவர்த்தன , எம். என். நிஷாம் மற்றும் சட்டத்தரணி லியகே , ஆகியோரும் 5ம் எதிரியின் சார்பில் சட்டத்தரணி ஆறுமுகம் ரகுபதியும் 4ம், 7ம் , மற்றும் 9ம் எதிரிகள் சார்பில் சட்டத்தரணி சின்னராசா கேதீஸ்வரன் ஆகியோர் முன்னிலையாகி இருந்தனர். அத்துடன் ஒன்று தொடக்கம் 9 வரையிலான எதிரிகள் சார்பில் நியமிக்கப்பட்ட சட்டத்தரணி விக்னேஸ்வரன் ஜெயந்தாவும் முன்னிலை ஆகி இருந்தார்.
எதிரிகள் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.
எதிரிகளான பூபாலசிங்கம் இந்திரகுமார், பூபாலசிங்கம் ஜெ யக்குமார், பூபாலசிங்கம் தவக்கு மார் , மகாலிங்கம் சசிதரன் , தில்லைநாதன் சந்திரகாசன் , சிவதேவன் துஷாந்த் , பழனி ரூபசிங்கம் குகநாதன் , ஜெயதரன் கோகிலன் , மற்றும் மகாலிங்கம் சசிக்குமார் ஆகிய ஒன்பது எதிரிகளும் மன்றில் முற்படுத்தப்பட்டனர்.
ஊர்காவற்துறை நீதவானின் சாட்சியம்.
அதனை தொடர்ந்து , வழக்கின் 49ஆவது சாட்சியான ஊர்காவற்துறை நீதிமன்ற மாவட்ட நீதிபதியும் , நீதவான் நீதிமன்ற நீதவனுமான ஏ.எம்.எம்.றியாழ் சாட்சியமளிக்கையில் ,
ஊர்காவற்துறை நீதிமன்ற மாவட்ட நீதிபதியும் , நீதவான் நீதிமன்ற நீதவனுமாக கடந்த 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் பொறுப்பெற்று உள்ளேன்.
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு தொடர்பில் சாட்சியங்கள் வாக்கு மூலங்களை பதிவு செய்துள்ளேன். புங்குடுதீவை சேர்ந்த நடராஜா புவனேஸ்வரன் என்பவரின் வாக்கு மூலத்தை 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் 1ஆம் திகதி பதிவு செய்தேன்.
அரச தரப்பு சாட்சியின் வாக்கு மூலத்தை பதிவு செய்தேன்.
இந்த வழக்குடன் தொடர்புடையவர் என 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் 3ஆம் திகதி உதயசூரியன் சுரேஷ்கரன் என்பவரை எனது வாசஸ்தலத்தில் குற்றபுலனாய்வு பிரிவினர் முற்படுத்தினார்கள். அதனை அடுத்து சுரேஷ்கரனை 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு இட்டேன்.
பின்னர் 8ஆம் திகதி மீண்டும் சுரேஷ்கரன் நீதிமன்றில் என் முன்னிலையில் சிறைச்சாலை உத்தியோகஸ்தர்களால் முற்படுத்தப்பட்ட போது அவரது வாக்கு மூலத்தை எனது சமாதன அறையில் வைத்து பதிவு செய்தேன்.
அதன் பின்னர் 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 29ஆம் திகதி இலங்கேஸ்வரன் என்வரின் வாக்கு மூலத்தை பதிவு செய்தேன். பாலசிங்கம் பாலசந்திரன் என்பவரினது வாக்கு மூலத்தை 2016ஆம் ஆண்டு மே மாதம் 10ஆம் திகதி பதிவு செய்தேன்.
இந்த வழக்கில் 11ஆவது சந்தேக நபரான உதயசூரியன் சுரேஷ்கரன் என்பவர் நிபந்தனைகளுடன் கூடிய மன்னிப்பு வழங்கப்படுவதாக சட்டமா அதிபர் திணைக்களம் வழங்கிய உறுதியை அடுத்து, அவர் அரச சாட்சியாக மாறுவதற்கு சம்மதித்து இருந்தார்.
அது தொடர்பில் அவரது சத்திய கடதாசியுடன் சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆவணங்கள் 2017ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 22திகதி மன்றுக்கு அனுப்பப்பட்டு இருந்தது. அதனை சுரேஷ்காரனுக்கு மன்று உரத்த குரலில் அவருக்கு விளங்கி புரிந்து கொள்ள கூடிய தமிழ் மொழியில் வாசித்து காட்டியது.
பின்னர் அதனை விளங்கி கொண்டீரா என மன்று அவரிடம் வினாவியது. அவர் தான் விளங்கி கொண்டேன் என தெரிவித்ததை அடுத்து அவரது கையொப்பத்தை சத்திய கடதாசியில் பெற்றுகொண்டேன். என சாட்சியம் அளித்திருந்தார்.
வாக்குமூலத்தின் மூல பிரதி இணைப்பு .
அதேவேளை இன்றைய தினம் நீதிவான் சாட்சியம் அளிக்கும் போது நீதாய விளக்கத்தின் ( ரயலட் பார் ) மூல வழக்கேட்டில் பாலசிங்கம் பாலசந்திரன் ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் வழங்கிய வாக்கு மூலத்தின் மூல பிரதி இணைக்கப்பட்டு இருக்கவில்லை.
அந்நிலையில் குறித்த வாக்கு மூலத்தின் நீதிவானால் அத்தாட்சிப்படுத்தப்பட்ட வாக்கு மூலத்தின் பிரதியினை பார்த்தும் , நீதிமன்ற நாட்குறிப்பை பார்த்ததுமே நீதிவான் சாட்சியம் அளித்து இருந்தார்.
அதற்கு எதிரிகள் தரப்பு சட்டத்தரணி மஹிந்த ஜெயவர்த்தன அதற்கு தமது கடும் எதிர்ப்பினை தெரிவித்தார்.
அந்நிலையில் நீதிவானின் சாட்சியம் மன்றினால் முடிவுறுத்தப்பட்டு சாட்சி விடுவிக்கப்பட்டு அடுத்த சாட்சி சாட்சி பதிவுகள் ஆரம்பமானது. அந்நிலையில் பாலசிங்கம் பாலசந்திரன் என்பவரின் வாக்கு மூலத்தின் மூல பிரதி நீதிமன்ற காவலில் இருந்து எடுக்கப்பட்டது.
மீண்டும் சாட்சியமளித்தார் நீதவான்.
அதனை அடுத்து மன்றில் சாட்சியம் அளித்த சாட்சியம் இடை நடுவில் நிறுத்தப்பட்டு மீண்டும் நீதிவான் சாட்சி கூண்டில் ஏறி சத்தியம் செய்து பாலசிங்கம் பாலசந்திரனின் மூல வாக்கு மூலத்தினை பார்த்து மன்றில் சாட்சி அளித்தார். அதனை தொடர்ந்து மூல வாக்கு மூல பிரதி நீதாய விளக்கத்தின் ( ரயலட் பார் ) மூல வழக்கேடுடன் இணைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து நீதிவான் சாட்சி மன்றினால் முடிவுறுத்தப்பட்டு சாட்சி விடுவிக்கப்பட்டது.
36 சான்று பொருட்கள்
வழக்கின் 52ஆவது சாட்சியான அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தின் சிரேஸ்ட அதிகாரி வனிதா ஜெயவர்த்தன பண்டரநாயக்க சாட்சியமளிக்கையில் ,
நான் கடந்த 23 வருடங்களாக அங்கு பணியாற்றி வருகிறேன் இரசாயன பகுப்பாய்வு தொடர்பில் பட்டப்படிப்புக்களை முடித்துள்ளேன்.
இந்த வழக்கு தொடர்பில , இரத்தம், விந்து மற்றும் உரோமம் ஆகியவை தொடர்பில் பகுப்பாய்வுகளை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பித்து உள்ளேன்.
எமக்கு மூன்று கட்டங்களாக சான்று பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன, முதலில் 2015ஆம் ஆண்டு ஜூன் மாதம் 1ஆம் திகதி , 2015ஆம் ஆண்டு ஜீன் மாதம் 15ஆம் திகதி , 2015ஆம் ஆண்டு 10மாதம் 5ஆம் திகதி ஆகிய திகதிகளில் சான்று பொருட்கள் எமக்கு அனுப்பி வைக்கபட்டன.
அதில் 36சான்று பொருட்கள் காணப்பட்டன. 6 உரோமங்கள், பாடசாலை சீருடை, சப்பாத்து , தலைப்பட்டி , கழுத்துப்பட்டி , பெண்களின் உடுப்புகள் , காலுறைகள் , இரத்த மாதிரி, முக்கிய திராவகங்கள், 2 ரீசேர்ட், 1 சேர்ட், 1 ஜீன்ஸ், 1 அரைக்காற்சட்டை, நகங்கள், பூபாலசிங்கம் இந்திரகுமார், பூபாலசிங்கம் ஜெயக்குமார், பூபாலசிங்கம் தவக் குமார் , மகாலிங்கம் சசிதரன் , தில்லைநாதன் சந்திரகாசன், சிவதேவன் துஷாந்த், பழனி ரூபசிங்கம் குகநாதன், ஜெயதரன் கோகிலன், மற்றும் மகாலிங்கம் சசிக்குமார் ஆகியோரின் இரத்த மாதிரிகள் என்பன பகுப்பாய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
பகுப்பாய்வு செய்ய முடியவில்லை.
அதில் 1 தொடக்கம் 6 வரையிலான உரோமங்களை பகுப்பாய்வு செய்து கண்டறிய முடியவில்லை. ஏனெனில் அவற்றில் வேர்கள் இருக்கவில்லை அதனை நுணுக்குகாட்டி ஊடாக பரிசோதித்தும் அதனை அடையாளம் காணமுடியவில்லை. அது தொடர்பில் குற்றபுலனாய்வு துறையினருக்கு தெரியப்படுத்தினோம். திராவகங்களை ஆய்வுக்கு உட்படுத்திய போதிலும் அதனையும் கண்டறிய முடியவில்லை. அது அடையாளம் காண கூடிய நிலைமையில் இருக்கவில்லை.
இரத்த மாதிரிகள் ஒத்துப்போகவில்லை.
பாடசாலை சீருடையில் இருந்த இரத்தமும், மாணவியின் உடையது என அடையாளம் காண முடிந்தது. அதேவேளை நீள (ஜீன்ஸ்) காற்சட்டையில் இருந்த இரத்த மாதிரி மாணவியின் இரத்த மாதிரியுடன் ஒத்துபோகவில்லை. என சாட்சியம் அளித்தார்.
அதனை தொடர்ந்து குறித்த சாட்சியின் சாட்சி பதிவு முடிவுறுத்தப்பட்டு சாட்சி வழக்கில் இருந்து விடுவிக்கபட்டது,
கலவர பூமியாக இருந்தது யாழ்ப்பாணம்.
குறித்த வழக்கின் 35 சாட்சியான பிரதான விசாரணை அதிகாரி குற்றபுலனாய்வு திணைக்கள பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த சில்வா சாட்சியமளிக்கையில் ,
குற்றபுலனாய்வு திணைக்களத்தில் பொலிஸ் பரிசோதகராக கடமையாற்று கிறேன். கடந்த 2015ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் திகதி இரவு , யாழில் பாடசாலை மாணவி ஒருவர் வன்புணர்வுக்கு உட்படுத்தி படுகொலை செய்யப்பட்டு உள்ளார் அது தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுக்க பொலிஸ் குழு ஒன்றுடன் யாழ்ப்பாணம் செல்லுமாறு பணிப்பாளர் பணித்ததாக உதவி பொலிஸ் அத்தியட்சகர் திசேர எனக்கு தொலைபேசி மூலமாக கூறினார்.
அதனை அடுத்து நான் மறுநாள் காலை கொழும்பில் இருந்து எனது பொலிஸ் குழுவுடன் புறப்பட்டு மதியம் யாழ்ப்பாணம் வந்திருந்தேன். அப்போது யாழ்ப்பணத்தில் கலவரங்கள் நடந்தது போன்று காணப்பட்டது. கலக்கம் அடக்கும் போலீசார், பொலிஸ் விசேட அதிரடி படையினர் ஆகியோர் வீதிகளில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு இருந்தனர்.
யாழ்.பொலிஸ் நிலையம் வந்த பின்னர் அறிந்து கொண்டேன் , நீதிமன்ற கட்ட தொகுதி , சிறைச்சாலை வாகனம் உள்ளிட்டவை மீதி தாக்குதல்கள் நடத்தபட்டு பொருட் சேதம் ஏற்படுத்தப்பட்டு உள்ளதாக
விசாரணைகளை ஆரம்பித்தேன்.
எனது விசாரணையின் நோக்கமாக இரு பிரதான விடயங்கள் இருந்தன. ஒன்று மாணவி கடத்தப்பட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு, படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுதல , மற்றையது பிரதான சந்தேக நபர் பொலிஸ் நிலையத்தில் இருந்து விடுவிக்கப்பட்டமை தொடர்பிலான விசாரணை.
மாணவி கொலை தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுக்க ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்திற்கு தற்சமயம் வருவது பாதுகாப்பில்லை எனவும் அங்கு நிலமை அசாதாரணமாக இருப்பதாகவும் ஊர்காவற்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கூறினார்.
அதனால் அன்றைய தினம் (20 ஆம் திகதி) சந்தேக நபர் யாழ் பொலிஸ் நிலையத்தில் இருந்து விடுவிக்கப்பட்டமை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க தொடங்கினேன். அந்த சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரிகள், உத்தியோகஸ்தர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டு வாக்கு மூலங்களை பெற்றுக்கொண்டேன்.
சுவிஸ் குமாரிடம் ஆறு மணிநேர விசாரணை
பின்னர் 21ஆம் திகதி அதிகாலை யாழ்.பொலிஸ் நிலையத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட சந்தேக நபரை வெள்ளவத்தையில் வைத்து வெள்ளவத்தை போலீசார் கைது செய்து யாழ்.பொலிஸ் நிலையத்தில் முற்படுத்தினார்கள்.
குறித்த சந்தேக நபரிடம் (சுவிஸ்குமார்) அதிகாலை 3 மணி முதல் காலை 9 மணி வரையில் விசாரணைகளை முன்னெடுத்து வாக்கு மூலத்தினை பெற்றுக்கொண்டேன்.
பின்னர் அப்போதைய கொடிகாம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி குறித்த சந்தேக நபரை (சுவிஸ் குமாரை) ஊர்காவற்துறை நீதிமன்றில் முற்படுத்தினார்.
குற்றம் இடம்பெற்ற இடத்தை ஒன்றரை மணித்தியாலங்கள் அவதானித்தோம்.
அன்றைய தினம் (21ஆம் திகதி) நாம் ஊர்காவற்துறைக்கு சென்று கொலை செய்யப்பட்ட மாணவியின் தாய், சகோதரர்கள் ஆகியோரிடம் வாக்கு மூலங்களை பெற்றோம்.
பின்னர் மறுநாள் (22ஆம் திகதி) ஊர்காவற்துறை சென்று குற்ற சம்பவம் இடம்பெற்ற பகுதியினை சுமார் ஒன்றரை மணித்தியாலங்கள் அவதானித்தோம்.
குறித்த இடம் குற்ற செயல்கள் செய்வதற்கு ஏதுவான இடமாக மறைவான இடமாக காணப்பட்டன. சம்பவம் நடந்து எட்டு நாட்களுக்குள் அந்த இடத்திற்கு நாம் நேரில் சென்றமையால் , அந்த இடத்தில் மாற்றங்கள் ஏற்பட்டு இருக்காது எனும் எண்ணத்தில் அதனை என்னால் குறிப்பிட முடியும்.
ஆரம்பத்தில் இந்த வழக்கினை போலீசார் விசாரணைகளை முன்னெடுத்து இருந்தாலும் , நாம் புதிதாகவே விசாரணைகளை முன்னெடுத்தோம். புதிதாகவே வாக்கு மூலங்களையும் பதிவு செய்தோம்.
சிறையில் சந்தேக நபர்களின் வாக்கு மூலத்தை பெற்றோம்.
பின்னர் ஊர்காவற்துறை நீதிமன்ற அனுமதியுடன் 26ஆம், 27ஆம், மற்றும் 28ஆம் திகதிகளில் வவுனியா சிறைச்சாலைக்கு சென்று அங்கு சந்தேக நபர்கள் ஒன்பது பேரினதும் வாக்கு மூலங்களை பதிவு செய்தோம்.
கடற்படையுடன் தொடர்புபடுத்த முயற்சி.
இந்த குற்ற செயல் கலகம் ஒன்றினை ஏற்படுத்தும் எண்ணத்துடன் செய்யபப்ட்டது போன்று எமது விசாரணைகளில் தெரிய வந்தது. குற்ற சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு அருகில் கடற்படை முகாம் ஒன்று அமைந்து இருந்ததால், இந்த குற்ற சம்பவத்தை அவர்களுடன் தொடர்பு படுத்தி , கலகத்தை உண்டாக்கும் உள்நோக்கம் கொண்டதாகவும் , நாட்டின் நற்பெயருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தவுமே . இந்த குற்ற செயல் புரிந்ததாக சந்தேகம் ஏற்பட்டது.
பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் விசாரணை .
அது தொடர்பில் விசாரணை செய்வதற்கு சந்தேக நபர்களை எமது தடுப்பு காவலில் எடுத்து விசாரணை செய்ய எதுவாக பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் உத்தரவு வழங்க வேண்டும் என பாதுகாப்பு அமைச்சர் எனும் ரீதியில் ஜனாதிபதியிடம் 2016ஆம் ஆண்டு ஜீன் மாதம் 12ஆம் திகதி முதல் ஜூலை மாதம் 12ஆம் திகதி வரையிலான 30 நாட்களுக்கு முன்னதாக அனுமதி பெற்றோம் பின்னர் மீண்டும் மேலும் 30 நாட்களுக்கு அனுமதி பெற்று சந்தேக நபர்களை சிறைச்சாலையில் இருந்து எமது கட்டுப்பாட்டிற்கு எடுத்து எமது தடுப்பு காவலில் வைத்து விசாரணைகளை மேற்கொண்டோம்.
அதன் போது சந்தேக நபர்களிடம் பெற்ற வாக்கு மூலத்தில் சிவதேவன் துஷந்த் என்பவரின் வாக்கு மூலத்தின் அடிப்படையில் மீண்டும் நாம் புங்குடுதீவுக்கு விசாரணைக்கு வந்தோம். அதன் போது துஷந்தையும் அழைத்து வந்தோம். அவரை எமது வாகனத்தில் மறைத்தே அழைத்து சென்றோம்.
மூக்கு கண்ணாடி மீட்பு.
அவரின் வாக்கு மூலத்தின் அடிப்படையில் அவரது வீட்டுக்கு சென்று அவரின் வீட்டில் உள்ள சீமெந்து கட்டு ஒன்றின் மேல் இருந்து மனைவியின் உடையது என சந்தேகிக்க கூடிய மூக்கு கண்ணாடி ஒன்றினை மீட்டோம்.
அது சோப்பின் பை ஒன்றினுள் சுற்றி அதனை சுற்றி ஒரு பியாம துணி ஒன்றினால் சுற்றப்பட்ட நிலையில் மீட்டு இருந்தோம்.
மூக்கு கண்ணாடியை உறுதிப்படுத்தினோம்.
அதனை தொடர்ந்து அந்த மூக்கு கண்ணாடி மாணவியின் உடையதா என்பதனை உறுதிப்படுத்த நாம் மாணவியின் வீட்டுக்கு சென்று தாயிரிடம் விசாரணை செய்தோம்.
அப்போது அவர் தனது மகள் சிறுவயதாக இருக்கும் போது சக மாணவி ஒருவர் துடைப்பானால் (டச்சர் ) எறிந்த போது அது மகளின் கண்ணில் பட்டு கண் கரு விழி பாதிக்கபட்டு பார்வை குறைபாடு ஏற்பட்டது. அதனால் அவர் மூக்கு கண்ணாடி பாவிக்கின்றவர்.
அந்த மூக்கு கண்ணாடி யாழில் கண் வைத்தியரிடம் காட்டி யாழில் உள்ள கடை ஒன்றில் மூக்கு கண்ணாடியினை வாங்கியதாக கூறினார். அப்போது மகளின் மூக்கு கண்ணாடியினை அடையாளம் காட்ட முடியுமா என வினாவி எம்மால் மீட்கப்பட்ட மூக்கு கண்ணாடியினை தாயிடம் காட்டினோம் அவர் அதனை அடையாளம் காட்டினார்.
அதனை அடுத்து நாம் அந்த கண்ணாடியினை யாழில் வாங்கிய கடைக்கு சென்று அது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டோம் என சாட்சியம் அளித்தார்.
சான்று பொருளாக இணைக்க அனுமதி
அதன் போது கண்ணாடி மீட்கப்படும் போது அதனுடன் மீட்கப்பட்ட சோப்பின் பையும் மற்றும் பியாமாவையும் சான்று பொருளாக சேர்த்து கொள்ள பிரதி சொலிஸ்டர் ஜெனரல் மன்றின் அனுமதியினை கோரினார்.
அதற்கு எதிரிகள் தரப்பு சட்டத்தரணி மஹிந்த ஜெயவர்த்தன கடும் ஆட்சேபனை தெரிவித்தார். இருந்த போதிலும் மன்றினால் அவை சான்று பொருளாக இணைத்து கொள்ளப்பட்டது..
அதனை அடுத்து குறித்த சாட்சியத்தின் சாட்சி பதிவை இத்துடன் இடை நிறுத்தி கொள்வதாகவும் , மிகுதி சாட்சி பதிவு எதிர்வரும் 2ஆம் திகதி தொடரும் என மன்று அறிவித்தது.
இறுதி சடங்குக்காக வழக்கு விசாரணை ஒத்திவைப்பு.
அதனை தொடர்ந்து நீதாய விளக்க ( ரயலட் பார் ) நீதிபதிகளில் ஒருவரான மா.இளஞ்செழியன் அவர்களின் உயிரிழந்த மெய் பாதுகாவலரின் இறுதி சடங்கு எதிர்வரும் 26ஆம் திகதி நடைபெறவுள்ளதால் , அன்றைய தினம் நடைபெற உள்ள விசாரணைகள் எதிர்வரும் 2ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கபட்டது.
அதன் போது இன்றைய தினம் நிறுத்தப்பட்ட பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த சில்வாவின் சாட்சி பதிவின் மிகுதி அன்றைய தினம் தொடரும் என மன்று அறிவித்தது.
அதேவேளை 9 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 2ஆம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்க மன்று உத்தரவு இட்டது.
Spread the love