இந்திய முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் மணி மண்டபத் திறப்பு விழாவில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, வீணை மீட்டும் வகையில் இருந்த கலாமின் சிலையை திறந்து வைத்துள்ளார்.
மக்கள் ஜனாதிபதி அப்துல்கலாமின் 2-ஆவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகின்ற நிலையில் 15 கோடி ரூபா பெறுமதியில் அப்துல் கலாமுக்காக மணி மண்டபம் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
டெல்லியில் இருந்து தனி விமானத்தில் பிரதமர் மோடி மதுரை சென்ற மோடியை தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழக அமைச்சர்கள், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோர் வரவேற்றனர்.
கலாம் மணி மண்டபத்துக்கு எதிரே தேசியக் கொடியை ஏற்றினார். பின்னர் மணி மண்டபத்தை திறந்து வைத்த மோடி உள்ளே சென்று பார்வையிட்ட பின்னர் கலாம் வீணை மீட்டுவது போன்ற சிலையையும் திறந்து வைத்தார். மேலும் கலாமின் நினைவிடத்தில் மோடி மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
அப்துல் கலாம் மணிமண்டபத்தை நரேந்திர மோடி நாளை திறந்துவைக்கவுள்ளார்.
Jul 26, 2017 @ 03:02
ராமேசுவரத்தில் 15 கோடி ரூபா செலவில் கட்டப்பட்ட அப்துல் கலாம் மணிமண்டபத்தை பிரதமர் நரேந்திர மோடி நாளை திறந்துவைக்கவுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தை அடுத்த தங்கச்சிமடத்தில் பேய்க்கரும்பு பகுதியில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் நினைவிடம் உள்ளது. அங்கு மத்திய அரசின் பாதுகாப்புத்துறை சார்பில் அப்துல் கலாம் மணிமண்டபம் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது.
இதில், அக்னி ஏவுகணையின் மாதிரி வடிவம், செயற்கைகோள் மாதிரி, கலாமின் 700-க்கும் மேற்பட்ட புகைப்படங்கள், அவர் தொடர்பான 91 ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன.
அப்துல் கலாமின் 2-ம் ஆண்டு நினைவு தினமான நாளை வியாழக்கிழமை இந்த மணிமண்டபத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைக்கிறார்.
பிரதமர் வருகையையொட்டி அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மண்டபம் முதல் ராமேசுவரம் வரை 2000-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.