குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நைட்டிரஜன் ஓக்ஸைட் காரணமாக பொதுமக்களின் உடல் நலத்திற்கு பாதிப்பு ஏற்படுகின்றது என்ற அச்சம் காரணமாக 2040 முதல் புதிய பெட்ரோல் டீசல் கார்கள் மற்றும் வாகனங்களிற்கு தடை விதிப்பதற்கு பிரிட்டன் தீர்மானித்துள்ளது.அரசாங்கத்தின் சுத்தமான காற்று திட்டம் குறித்த வாக்குறுதியின் ஓரு பகுதியாகவே இந்த தடையை அறிமுகப்படுத்த அரசாங்கம் எண்ணியுள்ளது
மாசடைந்த காற்று பொதுமக்களின் உடல்நலத்திற்கு ஏற்படுத்தி வரும் பாதுகாப்பை கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அரசாங்கம் இந்த தடை ஹைபிரிட் வாகனங்களிற்கும் பொருந்தும் என குறிப்பிட்டுள்ளது.
பொதுமக்களின் உடல்நலத்தின் மீது மாசடைந்த வாயு ஏற்படுத்தும் தாக்கம் காரணமாக வருடாந்தம் 2.7 பில்லியன் ஸ்டேர்லிங்பவுண்ட்ஸ் உற்பத்தி இழப்பு ஏற்படுகின்றது என அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்
சுத்தமான வாயு வலயத்திற்குள் நுழையும் வாகனங்களிற்கு கட்டணம் விதிக்கவேண்டும் என்ற யோசனையும் முன்வைக்கப்பட்டுள்ள போதிலும் அரசாங்கம் இறுதி வழிமுறையாகவே வரி விதிப்பை பயன்படுத்துவது குறித்து சிந்தித்து வருகின்றது.
மாசடைந்த காற்றே பிரிட்டனில் பொதுமக்களின் உடல்நலத்திற்கு மிகப்பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது என தெரிவித்துள்ள பேச்சாளர் ஒருவர் குறுகிய காலப்பகுதிக்குள் உறுதியான நடவடிக்கைகளை எடுப்பது குறித்து அரசாங்கம் தீவிரமாகவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.