குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-
சிட்னியின் மத்திய பேருந்து நிலையத்திற்கு அருகில் காவல்துறையினருடன் மோதலில் ஈடுபட்ட நபர் ஓருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். சிட்னியின் மத்திய பேருந்து நிலையத்திற்கான நுழைவாயிலிற்கு அருகில் காணப்படும் பூக்கடைக்கு அருகில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. தாய்லாந்தை சேர்ந்த டனுகுல் மொக்மூல் என்ற நபரே இவ்வாறு காவல்துறையினரின் துப்பாக்கி சூட்டிற்கு பலியாகியுள்ளார்.
ஆயுதமுனையில் கொள்ளைச் சம்பவமொன்று இடம்பெறுகின்றது என்ற தகவலை தொடர்ந்து அங்கு சென்ற காவல்துறையினர் பின்னர் குறிப்பிட்ட நபர் மீது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர். இது பயங்கரவாத சம்பவம் அல்ல என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கையில் கத்திரிகோலை வைத்திருந்த நபர் மீது காவல்துறையினர் துப்பாக்கிபிரயோகத்தை மேற்கொண்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை குறிப்பிட்ட நபர் தனது கழுத்தில் போத்தல் ஓன்வை வைத்து காவல்துறையினரை அழைக்குமாறு மிரட்டியதாகவும் தான் அவரிடமிருந்து தப்பியோடிய வேளை அந்த நபர் கடையிலிருந்த கத்தியை எடுத்ததாகவும் சம்பவத்தை நேரில் பார்த்த நபர் ஓருவர் குறிப்பிட்டுள்ளார்
இதேவேளை மொக்மூல் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டிருந்தார், சட்டவிரோத போதைப் பொருள் உட்பட பல குற்றச் செயல்களில் ஈடுபட்டிருந்தார் என அவரது 19 வயது சகோதரர் தெரிவித்துள்ளார்