பீகார் மாநிலத்தின் முதலமைச்சராக நிதிஷ்குமார் இன்று மீண்டும் பாஜக ஆதரவுடன் பதவியேற்கவுள்ளார். அதேநேரம் பாஜகவின் சுஷில்குமார் மோடி துணை முதலலமைச்சராக பதவியேற்க உள்ளார்.
2015ம் ஆண்டு நடைபெற்ற பிகார் தேர்தலில் கூட்டணி வைத்து ராஷ்டிரிய ஜனதா தளமும், ஐக்கிய ஜனதா தளமும் வெற்றி பெற்றது. இதன் அடிப்படையில், நிதிஷ் குமார் அம்மாநிலத்தில் முதலமைச்சராகவும், லாலுவின் மகன் தேஜஸ்வி துணை முதலமைச்சராகவும் பதவி வகித்து வந்தனர். இந்நிலையில், தேஜஸ்வி மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததால் அவர் பதவி விலக வேண்டும் என நிதிஷ் குமார் அறிவித்தார். இதற்கு லாலு மற்றும் அவரது மகன் மறுப்பு தெரிவிக்கவே நேற்று மாலை தனது பதவிவிலகல் கடிதத்தை ஆளுனரிடம் நிதிஷ் குமார் கையளித்தார்.
இதனையடுத்து அடுத்த 24 மணி நேரத்தில் மீண்டும் நிதிஷ்குமார் பிகார் முதலமைச்சராக இன்று மாலை 5 மணிக்கு பதவி ஏற்க உள்ளார். லாலுவின் பரம எதிரிக்கட்சியான பாஜகவின் துணையோடு நிதிஷ் குமார் ஆட்சி அமைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.