குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பிரிட்டன் சிறைச்சாலைகளில் இருந்து 71 கைதிகள் கடந்த ஓரு வருட காலப்பகுதியில் தவறுதலாக விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.நீதி அமைச்சு வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்கள் இதனை வெளிப்படுத்தியுள்ளன. மேலும்; சிறைச்சாலைகளில் வன்முறைகள் அதிகரித்து வருவதையும் அமைச்சின் புள்ளிவிபரங்கள் புலப்படுத்தியுள்ளன.
தற்செயலாக விடுதலை செய்யப்பட்டுள்ள 71 சிறைக்கைதிகளில் 58 பேர் சிறைகளில் வைத்து விடுவிக்கப்பட்டுள்ளனர் எனவும் ஏனையவர்கள் நீதிமன்றங்களிலும் வேறு சந்தர்ப்பங்களிலும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் எனவும் என நீதியமைச்சு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
எனினும் இவ்வாறு விடுவிக்கப்பட்ட கைதிகள் சட்டவிரோதமாக வெளியில் இருப்பதாக கருதப்படமாட்டார்கள் என்றும் அவர்களிற்கு தாங்கள் தங்கள் தண்டனைக்காலத்தை பூர்த்தி செய்யவில்லை என்பது தெரியாமலிருக்கலாம் அல்லது மேலும் பல பிடியாணை இருப்பது தெரியாமலிருக்கலாம் எனவும் அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை சிறைகளில் வன்முறைகள் தீவிரமடைவதையும் இந்த அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. மார்ச் வரையான ஓரு வருட காலப்பகுதிக்குள் சிறைக்கைதிகளில் 40,414 பேர் தங்களிற்கு தாங்களே காயங்களை ஏற்படுத்த முனைந்தனர் என நீதியமைச்சின் அறிக்கை தெரிவித்துள்ளது.
மேலும் சிறைச்சாலை ஊழியர்கள் மற்றும் பெண்கைதிகள் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளது எனவும் அமைச்சின் அறிக்கை தெரிவித்துள்ளது.