173
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-
அவுஸ்திரேலிய அரசியல் கட்சிகளிற்கு கடந்த சில வாரங்களில் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள இரட்டை பிரஜாவுரிமை விவகாரத்தில் லிபரல் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஓருவர் சிக்குண்டுள்ளதை தொடர்ந்து பிரதமர் மல்கம் டேர்ன்புல் அரசாங்கத்திற்கு நெருக்கடி ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
லிபரல் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிஸ்கோம் யூலியா பாங்ஸ் இரட்டை பிராஜவுரிமையை கொண்டுள்ளார் என குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. குறிப்பிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கிரேக்க பிரஜாவுரிமைக்குரியவர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் நிருபிக்கப்படும் பட்சத்தில் அவர் தனது பதவியை இராஜினாமா செய்ய வேண்டிய நிலை ஏற்படலாம். அதன் பின்னர் அவரது தொகுதிக்காக நடைபெறும் இடைக்கால தேர்தலில் லிபரல் கட்சி தோல்வியை சந்திக்க நேர்ந்தால் அதன் காரணமாக சனப்பிரதிநிதிகள் சபையில் பிரதமர் மல்கம் டேர்ன்புலின் பெரும்பான்மையை இழக்கலாம்
இதன் காரணமாக அவர் சிறுபான்மை அரசாங்கத்துடன் ஆட்சி புரிய நேரிடலாம் அல்லது புதிய தேர்தலிற்கான அறிவிப்பை வெளியிடவேண்டிய நிலை ஏற்படும்
இதேவேளை சிஸ்கோம் யூலியா பாங்ஸ் தான் இரட்டை பிரஜாவுரிமையை பெறவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
எனது தாய் இங்கு பிறந்தவர் தந்தை கிரேக்கத்தில் பிறந்தவர் நான் அவுஸ்திரேலியாவில் பிறந்தேன் என அவர் குறிப்பிட்டுள்ளார். நான் பிறந்தவேளை எனது பெற்றோர்கள் அவுஸ்திரேலிய பிரஜைகள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை ஓரு தேசம் கட்சியின் செனெட்டர் மல்கம் ரொபேட்சும் இரட்டை பிரஜாவுரிமைக்குரியவர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த சில வாரங்களில் இரட்டை பிரஜாவுரிமை குற்றச்சாட்டுகளிற்கு உள்ளான கீறின்ஸ்கட்சியின் இரு உறுப்பினர்கள் பதவி விலகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Spread the love