ஜேர்மனியின் கொன்ஸ்டன்ஸ் (Konstanz) நகர இரவு விடுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளனர். நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்தத் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 02.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. காயமுற்றோரில் பொலிஸார் ஒருவரும் உள்ளடங்குவதாக தெரிவித்துள்ள பொலிஸ் தரப்பினர் அவருக்கு உயிராபத்து இல்லை எனத் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை துப்பாக்கிச்சூட்டை நடத்தியவர் எனச் சந்தேகிக்கப்படும் நபர் மீது அங்கிருந்த பொலிஸார் மேற்கொண்ட பதில் தாக்குதலில் படுகாயம் அடைந்த அவர் வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தை அடுத்து குறித்த பகுதியில் சிறப்பு கமாண்டோ பொலிஸ் படையினர் குவிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஹெலிகொப்டர் ரோந்துப் பணியில் ஈடுபட்டு தேடுதல் நடத்தப்பட்டு வருவதாகவும் பொலிசார் அறிவித்துள்ளனர்.
தாக்குதல்தாரி அடையாளம் காணப்பட்டு உள்ளதாகவும் அவர் 34 வயதுடைய ஈராக் நாட்டைச் சேர்ந்தவர் என்ற போதிலும் தஞ்சக் கோரிக்கையாளர் அல்ல எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.