சொந்தக் காலில் நிற்கவேண்டும், தன்னுடைய சுயசம்பாத்தியத்தில் வாழவேண்டும் என்ற எண்ணம் மூன்றாம் வகுப்பு படிக்கும் சமயத்திலேயே சென்னையை சேர்ந்த ஜனார்த்தனனுக்கு வந்துவிட்டது.
2000-வது ஆண்டின் தொடக்கத்தில் ஒரு விபத்தில், தனது இரண்டு கைகள் மற்றும் கால்களை இழந்த பிறகு, அவரிடம் ஊற்றெடுத்த தன்னம்பிக்கை, தற்போது 25 வயது இளைஞராக அவர் வளர்ந்து நிமிர்ந்து நிற்கிறபோது ஜீவநதியாக மாறி அவரையும், அவரது குடும்பத்தையும் வாழ்க்கையையும் தைரியமாக எதிர்கொள்ள கற்றுக்கொடுத்துள்ளது.
இரண்டாம் குழந்தை பருவத்தில் ஜனா
மாற்றுத் திறனாளி குழந்தையாக ஜனா வளர்ந்த ஒவ்வொரு நாளும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் என பிறர் அவரிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்தான் அதிகமாகின.
மருத்துவச் செலவிற்காக தனது அச்சகத்தை விற்று மகனைக் காப்பாற்றிய கேசவனுக்கு, ஜனார்த்தனன் அறுவை சிகிச்சை முடிந்த பிறகு, முதல் முறையாக எழுதுவதற்கு நோட் வேண்டும் என்று கேட்டது மறக்கமுடியாத தருணம் என்கிறார்.
‘எழுதப்போகிறேன், நோட் வேணும் பா… என்று ஜனா கேட்டபோது, அவன் பிறந்தபோது அடைந்த மகிழ்ச்சியை மீண்டும் பெற்றது போல இருந்தது. இன்று பலரும் அவனைப் பார்த்து வாழக் கற்றுக்கொள்கிறார்கள் என்பது எனக்கு பெருமையாக உள்ளது,” என்கிறார் கேசவன்.
2000 முதல் 2003 வரை சிகிச்சை பெற்ற ஜனா செயற்கை கால்களைப் பொருத்திக்கொண்டு தத்தி, தத்தி மீண்டும் நடக்கத்தொடங்கினார்.
வாயால் எழுத தொடங்கிய காலம்
சுமார் இரண்டு லட்சம் ரூபாய் செலவு செய்து, ஜெர்மனியில் இருந்து செயற்கை கைகளை வரவழைத்தார் ஜனார்த்தனனின் தந்தை கேசவன். அவற்றை ஜனார்த்தனன் சிறிது நாட்கள் மட்டுமே பயன்படுத்தியுள்ளார். இயல்பாக உணரமுடியவில்லை என்று ஜனா சொன்னதும் சற்றும் யோசிக்காமல் , செயற்கை கைகள் வேண்டாம், உனக்கு பிடித்ததை செய் என குடும்பத்தினர் ஊக்கப்படுத்தியுள்ளனர்.
மீண்டும் பள்ளிக்குச் செல்ல ஜனாவிற்கு விருப்பம் இருந்தாலும், அவர் படித்த தனியார் பள்ளியோ, மற்ற பெரிய பள்ளிக்கூடங்களோ அவரை சேர்த்துக்கொள்ள மறுத்துவிட்டன.
”2003ல் ஒரு சிறிய தனியார் பள்ளி சேர்த்துக்கொள்ள முன்வந்தது. ஜனா மீண்டும் அ,ஆ என தொடங்கி வாயால் எழுத பழகிக்கொண்டான். வகுப்பில் ஆசிரியர்கள் பாடம் நடத்தும் போது, கையால் எழுதுவதைப் போல வாயால் எழுதினான்,” என்கிறார் தாய் புவனேஸ்வரி.
சாதாரண மாணவர்களை வென்ற மாற்றுத் திறனாளி
பள்ளிக்கூடத்தில் சாதாரண மாணவர்களுக்கு நடத்தும் ஓவியப் போட்டியில் பங்கேற்ற தொடங்கியது முதல், தனது வாயால் தூரிகை பிடித்து வரிசையாகப் பரிசுகளை வெல்லத் தொடங்கினார் ஜனா. பத்துக்கும் மேற்பட்ட தேசிய அளவிலான விருதுகள் உள்பட நூற்றுகணக்கான பரிசுகளை அள்ளிக் குவித்தார் ஜனா.
”எனக்கு அனுமதி மறுத்த பள்ளிக்கூட நிர்வாகங்கள் என்னைச் சேர்த்துக்கொள்ள போட்டிபோட்டனர். பள்ளி நிர்வாகத்திற்கு நான் பெறும் பரிசும், புகழும் தேவையாக இருந்தது. ஆனால் என்னை முதன்முதலில் ஊக்கப்படுத்திய பள்ளியிலேயே தொடர்ந்தேன்,” என்கிறார் ஜனா.
ஓவியம், வரைகலை,எடிட்டிங்கில் சாதனை
பள்ளிப்படிப்பு முடித்து, காட்சித்தொடர்பியல் படிப்பில் டிப்ளமா படிப்பை படிக்கச் சென்றபோது அவரது வகுப்பு தோழர்கள் மட்டுமல்லாமல், கல்லூரி ஆசிரியர்களும் வியந்துபோனதாக கூறுகிறார் ஜனாவின் தந்தை கேசவன்.
”டிப்ளமா படிப்பிற்கு விண்ணப்பித்தபோது கல்லூரி நிர்வாகத்தினருக்கு ஜனா படிக்க முன்வந்ததை நம்பமுடியவில்லை. அவர்கள் முன்னிலையில் படங்கள் வரைந்து காட்டியதும், அது அவர்களுக்குப் பெரிய அதிசயமாக இருந்தது,” என்றார் கேசவன்.
ஓவியம் மட்டுமல்லாமல், கிராபிக்ஸ் எனப்படும் வரைகலையில் பயிற்சி மற்றும் குறும்படங்களுக்கு படத்தொகுப்பு செய்யும் வேலை என பலதுறைகளில் ஜனா தனது திறமைகளை வளர்த்துக்கொண்டுள்ளார்.
திரைப்பட இயக்குனராக விருப்பம்
மூன்று ஆண்டுகள் ஒரு தனியார் ஊடகத்தில் வரைகலை கலைஞராக வேலை செய்துள்ளார். அந்தச் சமயத்தில் படங்களை எடிட்டிங் செய்வதில் ஆர்வம் அதிகரித்துள்ளது.
துண்டிக்கப்பட்ட அவரது வலது கரத்தின் பாதியில் மௌஸ்சை நகர்த்துகிறார், விரைவாக தேவையான காட்சிகளை வெட்டி, வரைகலை மென்பொருளைப் பயன்படுத்தி தனது வேலைகளை இயல்பாக செய்துமுடிகிறார்.
”இதுவரை 25 குறும்படங்களுக்கு எடிட்டிங் செய்துள்ளேன். பல கல்லூரி மாணவர்கள் தேர்வுக்காக எடிட்டிங் செய்ய நிறைய செலவு செய்கிறார்கள். பணம் இல்லாத மாணவர்களுக்கு நான் இலவசமாக எடிட்டிங் செய்துகொடுக்கிறேன். இது எனக்கு மனத்திருப்தி தரும் வேலையாக இருக்கிறது,” என்கிறார் ஜனா.
சிங்கப்பூரில் கிடைத்த அங்கீகாரம்
வளர்ந்த குழந்தையாக ஜனா இருந்தாலும், அவருக்கு தினமும் சாப்பாடு ஊட்டிவிடுவது மகிழ்ச்சியாகவே செய்கிறார் அவரது தாய் புவனேஸ்வரி.
ஒரு மூலையில் முடங்கிவிடாமல், தனது கை, கால்களை இழந்தாலும், தன்நம்பிக்கையை மட்டுமே துணையாய் கொண்ட ஜனாவிற்கு சர்வதேச அளவில் இயங்கிவரும் வாய் மற்றும் கால்களால் வரையும் கலைஞர்கள் கூட்டமைப்பு விருது வழங்கி பாராட்டியுள்ளது. அந்த அமைப்பு ஜனாவை பிற மாற்றுத்திறனாளி கலைஞர்களைச் சந்திக்க 2012ல் சிங்கப்பூர் அழைத்தது.
”மாற்றுத் திறனாளி கலைஞர்கள் தங்களது திறமைகளைப் பற்றி பேசவும், புது திறன்களை வளர்த்துக்கொள்ளவும் எனக்கு பெரிய வாய்ப்பாக அமைந்தது. என்னை இந்த நிகழ்ச்சி மேலும் ஊக்கப்படுதியது,” என்று விவரிக்கிறார் ஜனா.
வீட்டின் ஒவ்வொரு மூலைகளையும் ஜனாவின் திறமைக்குக் கிடைத்த பரிசுக் கோப்பைகள், சான்றிதழ்கள், கேடயங்கள் அலங்கரிக்கின்றன.
சுருங்கிய நண்பர் வட்டம்
ஜனாவின் திறமையை பார்த்து வியந்த பல நண்பர்கள் அவரை விட்டு பிரிந்துசென்றுவிட்டதாக கூறுகிறார்.
”முதலில் என்னை உற்சாகப்படுத்திய நண்பர்கள், சிறிது காலத்தில் எனக்கு வந்து சேரும் அங்கீகாரம், பாராட்டு போன்றவற்றை பார்த்து, என்னிடம் இருந்து விலகிச் சென்றுவிட்டனர். விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் நண்பர்கள்உள்ளனர்” என்கிறார் ஜனா.
அவரிடம் எப்போதும் அன்பு செலுத்தும் செல்லப்பிராணி குன்சியிடம் பேசுவதும், கொஞ்சுவதும் ஜனாவின் பொழுதுபோக்கு.
வேலை தேடுவதில் எதிர்கொள்ளும் சிரமம்
முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி மற்றும் ஜெயலலிதா, முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், திரைநட்சத்திரங்கள் என பலரும் ஜனார்த்தனனின் திறமைகளை பாராட்டியுள்ளனர். ஆனால் இதுவரை நிரந்தரமான வேலை என்று அவருக்கு எதுவும் கிடைக்கவில்லை என்பது பெரும் சுமையாகவே உள்ளது.
”ஜனா பல திறமைகளை கொண்டிருக்கிறான். அவனுக்கு துணையாக நாங்கள் இருக்கிறோம். எதிர்காலத்தில், அவனை காப்பற்றிக்கொள்ள ஒரு வேலை வேண்டும். அவனது திறமைக்கு ஏற்றவேலை அளிக்கப்படவேண்டும் என்பதைத் தவிர எங்களுக்கு வேறு எந்த கவலையும் இல்லை,” என்றார் கேசவன்.
கை,கால்கள் இருந்தாலும், தன்னம்பிக்கை இல்லை என்றால் நீங்கள் வாழ்க்கையில் ஒரு அடிகூட எடுத்துவைக்க முடியாது. வேலை கிடைக்க முயற்சிப்பேன், கிடைக்கும்வரை சுயதொழில் செய்து சாதிப்பேன் என்று தெரிவித்தார் ஜனா.
thanks BBC