குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இராணுவத்தில் இருந்து ஓடிப்போனவர்கள் தெற்கிலே எவ்வாறு பாரிய குற்றங்களைப் புரிந்தார்களோ அதே போல் யுத்த பயிற்சி பெற்றவர்கள் வடக்கிலும் அவ்வாறான குற்றச்செயல்களில் ஈடுபட வாய்ப்பிருக்கின்றது. என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ்.மாவட்டத்தில் வாள்வெட்டு சம்பவங்கள் அதிகரித்திருக்கும் நிலையில் அதனை கட்டுக்குள் கொண்டுவர முப்படையினரும் களத்தில் இறக்கப் படுவார்கள் என பொலிஸ்மா அதிபர் கூறியது தொடர்பில் கேட்ட போதே முதலமைச்சர் அவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,
முப்படையினரையும் களமிறக்கப்போவதாக பொலிஸ் மா அதிபர் கூறவில்லை. பொலிசாருக்கு உதவியாக stf ஐயும் இராணுவத்தையும் வேண்டுமெனில் மக்கள் விருப்பப்பட்டால் களமிறக்கவிருப்பதாகக் கூறினார்.
அவர்கள் தொடர்புகொள்ள தொலைபேசி இலக்கங்களையும் தந்துவைத்தார். யார் வேண்டுமானாலும் குற்றச்செயல்கள் பற்றி தமக்கு முறைப்பாடு செய்யலாம் என்றார்.
வடக்கிலிருந்து இராணுவ வெளியேற்றத்தை நான் இப்பொழுதும் கோருகின்றேன். ஆனால் குற்றங்கள் நடைபெறும் பொழுது அவற்றைத்தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டியது சட்டம், ஒழுங்குக்கு பொறுப்பான அமைச்சரின் கடமையாகும்.
நான் பொலிஸ்மா அதிபருக்கு பின்வருமாறு கூறியிருந்தேன், ’இராணுவத்தில் இருந்து ஓடிப்போனவர்கள் தெற்கிலே எவ்வாறு பாரிய குற்றங்களைப் புரிந்தார்களோ அதே போல் யுத்த பயிற்சி பெற்றவர்கள் வடக்கிலும் அவ்வாறான குற்றச்செயல்களில் ஈடுபட வாய்ப்பிருக்கின்றது. குற்றச் செயல்கள் எங்கு நடைபெற்றாலும் எமது எல்லா வளங்களையும் உள்ளேற்று அவற்றைத் தடுக்கவோ உரிய விதத்தில் நடவடிக்கை எடுக்கவோ வேண்டும்.’ என
இராணுவத்தை வெளியேற்ற வேண்டும் என்ற கொள்கையைக் கொண்டிருக்கும் ஒருவர் எது நடந்தாலும் அவர்களுடைய ஒத்துழைப்பைக் கோரக்கூடாது என்று அதற்கு அர்த்தமில்லை.
அப்படியானால் எது நடந்தாலும் நாங்கள் சும்மா இருக்க வேண்டும் என்று பொருள்படும். மேலும் இராணுவத்தை அவசரத்திற்கும் அழைக்க கூடாது அவர்கள் களமிறக்கப்படுவதை எதிர்க்க வேண்டும் என கேட்பவர்கள் குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு சாதகமானவர்களாகவே இருப்பர் என தெரிவித்தார்.