முறையான எவ்வித சாத்தியவள ஆய்வு அறிக்கையின்றியும் சூழலியல் தாக்கங்கள் குறித்த மதிப்பாய்வை மேற்கொள்ளாமலும் முன்னைய அரசாங்கம் உமா ஓய பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தை ஆரம்பித்தமையால் அதனை நடைமுறைப்படுத்தும் போது தொடராக பிரச்சினைகள் எழுவது கவலைக்குரியதாகும் என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இத்திட்டத்தின் ஆரம்பத்தில் இருந்தே தவறுகள் இடம்பெற்றுவந்துள்ளன. மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு எதிர்காலத்தில் எவ்விதப் பிரச்சினைகளும் ஏற்படாது என்ற உறுதிப்பாட்டுடனேயே இதற்குத் தீர்வை வழங்க முயற்சித்துவருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
உமா ஓய திட்டம் தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட நோர்வே நாட்டின் நிபுணர்கள் குழு அவர்களது இடைக்கால அறிக்கையை இன்று (04) ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து ஜனாதிபதியிடம் சமர்ப்பித்தது. இந்த நிகழ்வின் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
சுரங்கப்பாதையில் பாரிய நீர் கசிவு இடம்பெறுவதற்கான சாத்தியப்பாடுகளை ஆரம்பக்கட்ட ஆய்வுகள் முன்மதிப்பீடு செய்யவில்லை எனத் தெரிவித்த நிபுணர் குழு, திட்டத்திற்காகப் பயன்படுத்தப்பட்ட இயந்திரங்கள் சுரங்கச் சுவர்களை பலப்படுத்தி பலமான மூலப்பொருட்களைக் கொண்டு முத்திரையிடுவதற்கான இயலுமையைக் கொண்டிருக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
‘சுரங்கச் சுவர்களில் அகழ்வுப் பணி பொருத்தமான இயந்திரங்களைக் கொண்டே மேற்கொள்ளப்படவேண்டும் என்பதுடன், இடைவெளிகளை நிரப்புவதற்காக சாந்து பூசுகின்றபோது எதிர்காலத்தில் எவ்வித நீர் கசிவும் இடம்பெறாது என்பதை உறுதிசெய்யவேண்டும்’ என்றும் நிபுணர் குழுவின் தலைவர் தெரிவித்தார். சுரங்கத்தில் பாரிய அளவில் நீர் உட்புகுவதை எதிர்கொள்வதற்கு ஒப்பதந்தக்காரர்கள் தயாராக இருக்கவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.