இலங்கை பிரதான செய்திகள்

தமிழரசு கட்சியை தவிர்த்து ஏனைய கட்சிகள் தனி அணியாக செயற்படுவதனை ஏற்க முடியாது – ஸ்ரீகாந்தா

கூட்டமைப்பில் தமிழரசுக் கட்சியைத் தவிர்த்து, ஏனைய மூன்று கட்சிகளும் கூட்டமைப்புக்குள்ளேயே ஒரு தனி அணியாக செயற்படுவது என்பது எம்மால் ஏற்கப்படமுடியாத நிலைமையாகும். தமிழ் மக்களும் அதனை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்என தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) செயலாளர் ந. ஸ்ரீகாந்தா குறிப்பிட்டுள்ளார்.
ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்தி குறிப்பிலையே அவ்வாறு குறிப்பிடப்பட்டு உள்ளது. அதில் மேலும் குறிப்பிடப்பட்டு உள்ளதாவது ,
தமிழரசுக் கட்சி தவிர்ந்த கூட்டமைப்பின் ஏனைய மூன்று அங்கத்துவக் கட்சிகளும் கடந்த புதன்கிழமை வவுனியாவில் மாவட்ட மட்டத்தில் நடத்திய சந்திப்பு தொடர்பில் சில விடயங்களை தெளிவுபடுத்த வேண்டியுள்ளது.
இச்சந்திப்பு தொடர்பில் செய்தி ஊடகங்களில் நேற்று முன்தினமும், நேற்றும் வெளிவந்திருக்கும் செய்திகள் காரணமாகவே இத்தெளிவுபடுத்தல் தேவைப்பட்டிருக்கின்றது.
குறித்த சந்திப்புக்கு எமது கட்சியான ரெலோவும் அழைக்கப்பட்டிருந்த நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்பில் பல்வேறு விடயங்கள் அங்கு பேசப்பட்டுள்ளன.
இக்கூட்டத்தில் ஈ.பி.ஆர்.எல்.எப், புளொட் மற்றும் ரெலோ ஆகிய மூன்று கட்சிகளோடு சில சிவில் அமைப்புக்களும் சேர்ந்து ஒரு தனி அணியாக சில அரசியல் நடவடிக்கைகளை மாவட்ட மட்டங்களில் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டிருப்பதாக வெளிவந்திருக்கும் செய்திகள் உண்மை நிலைமைக்கு மாறானவை.
எமது கட்சியைப் பொறுத்தமட்டில், தமிழ் மக்களின் நம்பிக்கையைப் பெற்றிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேரிலேயே, அதன் அங்கத்துவக் கட்சிகள் நான்கும் பரஸ்பரம் புரிந்துணர்வோடும் ஒற்றுமையோடும் செயற்படுவதே இன்றைய காலத்தின் கட்டாயத் தேவை என்ற நிலைப்பாட்டில் நாம் உறுதியாக உள்ளோம்.
கூட்டமைப்புக்குள் பல்வேறு பிரச்சினைகளும் சர்ச்சைகளும் நீடித்து வருவது எல்லோருக்கும் தெரிந்த விடயம். இவை அனைத்தும் தமிழ்த் தேசியத்தின் நலனுக்காக, ஜனநாயகக் கோட்பாடுகளின் வழியில் கூடிய விரைவாக தீர்த்து வைக்கப்பட வேண்டும் என்றே நாம் விரும்புகின்றோம்.
கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுவைக் கூட்டி நான்கு கட்சிகளும் மனந்திறந்து விவாதிப்பதன் ஊடாக நிகழ்காலத்தின் சவால்களை ஒற்றுமையாக நாம் அனைவரும் சந்திக்க முடியும் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு.
இதற்குப் பதிலாக, கூட்டமைப்பில் தமிழரசுக் கட்சியைத் தவிர்த்து, ஏனைய மூன்று கட்சிகளும் கூட்டமைப்புக்குள்ளேயே ஒரு தனி அணியாக செயற்படுவது என்பது எம்மால் ஏற்கப்படமுடியாத நிலைமையாகும். தமிழ் மக்களும் அதனை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
கூட்டமைப்பின் செயற்பாடுகள் தொடர்பில் அதன் அங்கத்துவக் கட்சிகள் சந்தித்து விவாதிப்பது என்பது கட்சிகளின் தலைமைத்துவ மட்டத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கையே தவிர, மாவட்ட மட்டத்தில் கையாளப்படக் கூடிய ஒரு விவகாரம் அல்ல என்பதையும் இச்சந்தர்ப்பதில் நாம் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்  என மேலும் குறிப்பிடப்பட்டு உள்ளது

Spread the love
 
 
      

1 Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

  • உங்கள் கொள்கை கோட்பாடுகளை தமிழ் மக்கள் ஏறுக்கொண்டதாக இல்லே. இந்நிலையில் எவ்வாறு தமிழ் மக்களும் ஏற்கமாட்டார்கள் என்கிறீர்கள்.