Home இலங்கை யாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-

யாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-

by admin

குடாநாட்டுக்கு விஜயம் செய்யும் சுற்றுலாப் பயணிகள் முக்கியமாகச் சென்றுபார்த்து ஆச்சரியப்படும் இடமாக விளங்கும் புத்தூர், நிராவரைக் கிணறு, தன்னுள் பல மர்மங்களையும் அதிசயங்களையும் அடக்கி வைத்திருந்தது. அவற்றைக் கண்டறியும் வகையில், நூற்றாண்டு காலமாக உலகிலுள்ள பல நாடுகளிலிருந்து வந்த ஆராச்சியாளர்கள் பல ஆய்வுகளை மேற்கொண்டிருந்தார்கள். ஆனால், முழுமையான முடிவுகளைப் பெறமுடியவில்லை.  

அன்று, பிற்பகல் 2.30 மணி, 23 ஆம் திகதி ஏப்ரல் மாதம் 2016 ஆம் ஆண்டு. குடாநாட்டின் வெப்பநிலை 35 பாகை செல்ஸியஸைக் காட்டியது. ஆனால், குடாநாட்டில் மிகவும் ஆழமான பகுதியில், நீருக்கடியில் அதன் வெப்பறிலை 26 பாகை செல்சியஸ் எனப் பதிவாகியது.

ஆம்! அன்றுதான் பல புதிர்களையும் இரகசியங்களையும் தன்னகத்தே கொண்டிருந்த நி​லாவரைக் கிணற்றின் ஆழம் அறியப்பட்டது.

இலங்கை கடற்படையின் சுழியோடிகள், ரோபோக்களின் உதவியுடன் நிலாவரைக் கிணற்றின் ஆழத்தை அறியும் வண்ணம், சகல நவீன பாதுகாப்பு நடைமுறைகளையும் பின்பற்றியவாறு கிணற்றுக்குள் இறங்கினார்கள்.

கிணற்றுக்குள் 55.5 மீற்றர் (182 அடி)​ சென்றபோது, கீழ்மட்டம் தென்பட்டது. நன்றாக வளர்ந்த பனை அல்லது தென்னை மரம் சராசரியாக 90 அடி உயரம் வரை காணப்படும். அப்படிப் பார்த்தால், சராசியாக இரண்டு பனை அல்லது தென்னை மரங்களின் உயரம் கொண்டதாக இந்தக் கிணற்றின் ஆழம் காணப்படுகின்றது.

கிணற்றின் அடிப்பாகத்தில் மூன்று மாட்டு வண்டிகள் காணப்படுகின்றன என்பது சுழியோடிகள் கொண்டுசென்று ரோபோக்கள் எடுத்த படங்களின் மூலம் தெரியவந்தது. ஒரு வண்டில் முற்றாகச் சிதைவடைந்த நிலையிலும் மற்றையவை மாட்டு வண்டிகள் என உருவத்தை அடையாளம் காணக்கூடியவாறும்  காணப்படுகிறது. இந்த மாட்டு வண்டிகள் கிணற்றுக்குள் எவ்வாறு வந்தன அல்லது விழுந்தன என்பது தொடர்பில் எதுவித தகவல்களும் கிடையாது. வண்டில்களின் நிலையை வைத்துப் பார்க்கும்போது, இந்தச் சம்பவம், பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்றிருக்கலாம் என அனுமானிக்க முடிகிறது.

ரோபோக்கள் செய்த ஆய்வில், கிணற்றின் ஆழமான இடங்களில் பல திசைகள் நோக்கி, குகைகள் போன்று பல சுரங்க வழிகள் காணப்படுகின்றன. இவற்றில் சில இடங்களில் வேகமானதும் சில இடங்களில் சாதாரணமானதுமான நீரோட்டங்கள் காணப்படுகின்றன என்பதும் தெரிய வந்துள்ளது.

நிலாவரைக் கிணற்றுக்குள் எலுமிச்சம்பழத்தைப் போட்டால், அதை சில மணிநேரத்தின் பின்னர், கீரிமலைத் தீர்த்தக் கேணியில் எடுக்கலாம் என சிறுவயதில் கேள்விப்பட்டதுண்டு. அதற்கான சாத்தியப்பாடுகள் இருப்பதை ரோபோக்களின் ஆய்வுகள் நிரூபணம் செய்கின்றன. ஏனெனில், கிணற்றில் இருந்து, பல திசை நோக்கிச் செல்லும் சுரங்கப்பாதைகளின் ஊடான நீரோட்டங்கள் காணப்படுகின்றன. கீரிமலைக் கேணியின் தென்கீழ் மூலையில், ஒருவர் உள்ளே நுழைந்து செல்லக்கூடிய அளவுக்கு குகை ஒன்று காணப்படுவதை இப்பொழுதும் பார்க்கமுடியும். அதனூடாகவே கேணிக்கு நல்ல தண்ணீர் வருகின்றது. இந்தக் குகைக்கும் நிலாவரைக் கிணற்றில் ரோபோக்கள் உறுதிப்படுத்திய குகைக்கும் இடையிலான நீரோட்டத்தொடர்பு இருப்பதை உய்ந்தறிய முடிகிறது.

நிலாவரைக் கிணற்றுக்கு நேரடியான நிலத்தடி நீர் தொடர்பு இருப்பதனால் வரட்சின்போதும் மழைக்காலத்தின்போதும் நீர் மட்டம் குறைவதோ கூடுவதோ கிடையாது.

இலங்கையின் வடபகுதியின் குறிப்பாக யாழ்ப்பாணக் குடாநாட்டின் தரைத்தோற்ற அமைப்பே நிலத்தடியில் காணப்படும் குகைகளுக்கான காரணமாகும். இதுகுறித்து பேராசிரியர் சிவச்சந்திரனின் ‘ நிலாவரைக் கிணறு ஜீவநதியா’ என்கிற தனது கட்டுரையில் பின்வருமாறு பதிவு செய்துள்ளார்.

‘யாழ்ப்பாணக் குடாநாடு உட்பட, மன்னாரிலிருந்து பரந்தன் முல்லைத்தீவை இணைக்கும் கோட்டுக்கு வடக்காக உள்ள பிரதேசங்கள் யாவும் மயோசின் காலம் என்று புவிச்சரிதவியலாளர்களால் வழங்கப்படுகின்றது. சுண்ணக்கற்பாறைகள் உருவான காலத்தில் இவை தோன்றியவையாகும். அக்காலத்தில் இப் பிரதேசங்கள் கடலிலிருந்து மேலுயர்த்தப்பட்டன. இதனாலேயேதான் யாழ்ப்பாணப் பகுதிகளில் கிணறு தோண்டும்போது, சங்கு, சிப்பி போன்ற கடல் வாழ் உயிரினங்களின் சுவடுகளைக் காணக்கூடியதாக உள்ளது.

இக்கடல் உயிரினச்சுவடுகள் நீண்ட காலமாக இடம்பெற்ற அமுக்கத்தாலும் பௌதிக இரசாயன மாற்றங்களினாலும் சுண்ணப்பாறைகளாக உருமாற்றம் பெற்றன. சுண்ணப் பாறைகள் வன்னிப்பிரதேசத்தில் மிக ஆழத்திலும் யாழ்ப்பாணத்தின் வடகரைப்பகுதிகளில் குறிப்பாக பலாலி, தெல்லிப்பழை, காங்கேசன்துறைப் பகுதிகளில் மேற்பரப்பிலும் காணப்படுகின்றன. இப்பாறைப்படைக்கு மேல் மண் படிவுகள் சில அடி முதல் 30 அடி வரையான கன பரிமாணத்தில் படிந்துள்ளன. ஓர் அங்குல மண் படிவு உருவாவதற்கு குறைந்தது 100 வருடங்கள் செல்லும் என புவிச்சரிதவியலாளர்கள் கணிப்பிட்டுள்ளனர்.

ஒழுங்குமுறையற்று குடாநாட்டு மண் வளத்தை சுரண்டுவோர் இதைக் கருத்தில் கொள்ளுதல் வேண்டும்.

யாழ்ப்பாணக் குடாநாட்டில் சுண்ணக்கற்பாறை அடிப்படைப் பாறையாக அமைந்திருப்பதனாலேயே இங்கு நாம் தரைக்குக்கீழ் இருந்து கிணறுகள் மூலம் நீரைப்பெற முடிகின்றது. இங்கு ஆதிகாலம் முதல் குடியிருப்புகள் தோன்றுவதற்கும் வரண்ட பிரதேசமாக இருப்பினும் நெருக்கமாக மக்கள் வாழ்வதற்கும் நீர் இறைப்பை நம்பிய விவசாய நடவடிக்கைகள் மேலோங்கியிருப்பதற்கும் இங்கு தரைக்கீழ் நீரை இலகுவில் பெறக்கூடியதாய் இருந்தமையே காரணமாகும்.

புவிச்சரிதவியலாளரால் குடாநாட்டில் சுண்ணக்கற்பாறை தரையின் கீழ் நீரோடும் குகைகள் அடையானம் காணப்பட்டுள்ளன. மழையால் பெறப்படும் நீர், நிலத்துக்குள் ஊடுருவிச்சென்று, கடினமான அடித்தள சுண்ணக்கற்பாறைப் படைகளில் தங்கி நின்று, தரைக்கீழ் நீராகக் காணப்படுகின்றது. கிணறு தோண்டும் போது இத்தரைக்கீழ் நீரே ஊற்றாக கிணற்றுக்குள் வந்து தேங்குகின்றது.

இவ்வாறான ஊற்றுக் கண்கள் போன்று, உள்ளே அமைந்துள்ள சிறு துளைகள், தொடர் துளைகள், வெடிப்புகள் என்பன நீண்ட காலமாக இடம்பெறும் இரசாயன அழிதலுக்கு உட்பட்டு, பெரிய குகைகளாக உருமாறி விடுகின்றன. இக்குகைகள் சில அடி முதல் பல மைல் நீளம் வரை ஒரே தொடராகத் தரைக்குக் கீழே அமைந்திருக்கின்றன.

குகை மேலும்மேலும் அரிக்கப்பட, அதன் பரிமாணம் அதிகமாவதால் குகையின் மேற்பரப்பு இடிந்து வீழ்கின்றது. இவ்வாறு உருவான ஒரு குகைப்பள்ளமே நிலாவரைக்கிணறு. இவ்வாறு, மேற்பரப்பு இடிந்து வீழ்ந்ததால் உருவாகிய குகைப்பள்ளங்கள் யாழ்ப்பாணக் குடாநாட்டில் பல பகுதிகளில் காணப்படுகின்றன.

குரும்பசிட்டி பேய்க் கிணறு, புன்னாலைக்கட்டுவன் குளக்கிணறு, அல்வாய் மாயக்கை குளம், கரவெட்டி குளக்கிணறு, ஊரணி வற்றாக்கிணறு, கீரிமலைக்கேணி, நல்லூர் யமுனா ஏரி, மானிப்பாய் இடிகுண்டு, ஊரெழுவில் பொக்கணை போன்றவையாகும்.’
நிலாவரைக் கிணற்றுக்குள் 18.3 மீற்றர் (60 அடி) வரையிலுமே நல்ல தண்ணீர் காணப்படுகின்றது. ஆழம் செல்லச்செல்ல நீரில் உப்புத்தன்மையின் செறிவு அதிகரித்துச் செல்வதாக ஏற்கெனவே நடத்திய பல ஆய்வுகளில் அறியவந்தது.

1965 இல் நீர்வள வடிகாலமைப்புச் சபையினர், நிலாவரைக் கிணற்றில் மேற்கொண்ட ஓர் ஆய்வின்படி, 10 மணித்தியாலங்களில் 30, 000 – 40, 000 கலன் நீர் அக்கிணற்றில் இருந்து இறைக்கப்பட்டது. இதற்கு மேலும், நீர் இறைக்கப்படின் உப்பு நீர் மேலோங்கி வருவது அவதானிக்கப்பட்டு அம்முயற்சி நிறுத்தப்பட்டது. இதற்காக, மட்டக்களப்பிலிருந்து நீராவி இயந்திரம்  தருவிக்கப்பட்டே, அந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

யாழ்ப்பாணக் குடாநாட்டின் தரைக்கீழ் நீர்வளம் உப்பு நீரின் மேல் மிதப்பதை ஆய்வுகள் உறுதிசெய்துள்ளன. எனவே, நல்ல நீர் கிடைக்கும் கிணறுகளில் இருந்து அதிகளவு நீரை வெளியேற்றுவோமாயின் அவை உப்பு நீர்க்கிணறுகளாக மாறிவிடும் ஆபத்துக் காணப்படுகிறது. இன்று குடாநாட்டின் பலபகுதிகளில் இந்தநிலைமை உருவாகிவருகிறது.

பெரும்பாலும் மழைக்காலங்களில், குடாநாட்டில் தரைக்குக் கீழாக அமைந்துள்ள சுண்ணக்கற் குகைகள் மூலம், தரைக்கீழ் நீரின் பெரும்பகுதி வீணாகக் கடலைச் சென்றடையும் நிலை பல இடங்களில் அடையாளம் காணப்பட்டுள்ளது.

குறிப்பாக, கெருடாவில், கீரிமலை போன்ற இடங்களைக் குறிப்பிடலாம். எனவே இவ்வாறான குகைகளின் உள்ளே அணைகளைக் கட்டி, அல்லது நன்னீர் தேக்கங்களை ஏற்படுத்தி, நிலத்தடி நீர் கடலினுள் செல்வதைத் தடைசெய்தல் வேண்டும். யாழ்ப்பாணக்குடாநாட்டின் வளமும் வாழ்வும் இத்தரைக்கீழ் நீர் வளத்தின் கொள்ளளவை அதிகரிப்பதிலேயே பெரிதும் தங்கியுள்ளது.

கி. பி 1824 இல், சேர் எட்வேட்பான்ஸ் எனும் தேசாதிபதியின் கட்டளைப்படி, யாழ்ப்பாண உதவிக ஆளுநராக சேர் டைக் என்பவர் நியமிக்கப்பட்டார்.

 யாழ்பாணத்தின் அபிவிருத்திக்காக தனது சொந்தப் பணத்தைச் செலவு செய்து, பல வளர்ச்சித் திட்டங்களை நடைமுறைப்படுத்தினார். இவரை, மக்கள் ‘யாழ்பாண ராசா’  என செல்லமாக அழைத்தார்களாம்.  டைக், பதவியேற்ற 1824 இல் அந்த வருடமே நிலாவரைக் கிணற்றை மையப்படுத்திய நீர்பாசனத் திட்டம் பற்றி அவர் திட்டம் வகுத்ததாக ஆங்கிலேயரின் யாழ்ப்பாண நிர்வாகக் குறிப்புகளில் காணக் கிடைக்கிறது.

இன்றும் நிலாவரைக் கிணற்றுக்கு மேற்குப்புறமாக உள்ள சிறுப்பிட்டி, மேற்குப்புறமாக உள்ள அச்செழு, ஈவினை  கிராமங்கள் உட்பட அருகிலுள்ள நவகிரி, புத்தூர், கலைமதி ஆகிய கிராமங்களுக்கான விவசாய முயற்சிகளுக்கான நீர், நிலாவரைக் கிணற்றிலிருந்தே பெற்றுக்கொள்ளப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.

  1890 இல் நிலாவரையிலிருந்து யாழ்ப்பாண நகருக்குத் தண்ணீர் கொண்டு செல்வதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால், பின்னர் இந்தத் திட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டமையால் அது கைவிடப்பட்டது.

வலிகாமம் கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட, ஜே/ 275 கிராமசேவகர் பிரிவுக்குள் நிலாவரைக்கிணறு அமைந்துள்ளது. யாழ்ப்பாண நகருக்கு வடக்கு திசையில் 16 கிலோமீற்றர் தொலைவில், அச்சுவேலி நோக்கிச் செல்லும் இராசா வீதி, புத்தூர் பருத்தித்துறை நெடுஞ்சாலை சந்திக்கும் சந்தியில் நிலாவரைக்கிணறு அமைந்துள்ளது.

கிணறு அமைந்துள்ள பகுதி தொல்பொருள் ஆராய்ச்சி திணைக்களத்துக்குச் சொந்தமானதாகும். இதன் பராமரிப்பு பணிகளை வலிகாமம் கிழக்கு பிரதேச சபை மேற்கொள்கின்றது.  இருந்தபோதிலும், நிலாவரைக் கிணற்றின் நீர் வழங்கும் பணிகள், வாராவத்தை குடிநீர் விநியோகத்திட்டம் என்ற பெயரில் தேசிய வடிகாலமைப்பு, குடிநீர் அதிகார சபையால் மேற்கொள்ளப்படுகிறது.

மருது, வேம்பு, வாகை போன்ற விருட்சங்கள் உயர்ந்து, வளர்ந்து சோலையாக நிழல் பரப்பி நிற்பதும் மனதுக்கு இனிமையான அமைதியான சூழலும் நிலாவரைக் கிணற்றின் அதிசயத்துக்கு அப்பால் மக்களை இந்த இடம் தன்பால் இழுக்கின்றது.

2009 ஆம் ஆண்டு போர் ஓய்வுக்கு முன்னர், இந்தக் கிணற்றை பாடசாலை மாணவ மாணவியர் உட்பட, ஒருசில உள்ளூர் வாசிகள் வந்து பார்த்துச் செல்வார்கள். இவர்களை விட, வழிப்போக்கர்களும் விவசாயிகளும் இந்தச் சோலையில் இளைப்பாறிச் செல்வார்கள்.

போர் முடிவுற்ற பின்னர், தென்பகுதி சுற்றுலாப்பயணிகளும் புலம்பெயர்ந்து சென்ற தமிழர்களும் குடாநாட்டுக்கு வரும்போது, சென்று பார்க்கும், இளைப்பாறும் முக்கிய சுற்றுலா இடமாக    இப்போது  நிலாவரை கிணற்றை அண்டிய சுற்றாடல் மாறிவிட்டது.

சுற்றுலாப் பயணிகளைக் கவரும் விதத்தில்  குடாநாட்டு பனை உட்பட்ட உற்பத்திப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளும் குளிர்பானக் கடைகளும் இங்கு வியாபாரத்தில் ஈடுபடுகின்றார்கள்.

நிலாவரைக் கிணற்றுக்கு அருகில் சிவன் கோவில் ஒன்றும் காணப்படுகின்றது. இது மிகவும் புராதனமான சிவாலயமாகும். யாழ்ப்பாண வரலாற்றைக் கூறும் இலக்கிய நூலான தட்சண கைலாய புராணத்தில், இந்த சிவாலயம் குறித்த விவரங்கள் காணப்படுகின்றன. தட்சண கைலாய புராணத்தில் ‘நவசைலேஸ்வரம்’ எனக் குறிப்பிடப்படும் ஆலயம் நிலாவரையில் அமைந்துள்ள சிவன் ஆலயமாகத்தான் இருக்க வேண்டும் என்ற தற்துணிபு பல சமய, வரலாற்று அறிஞர்களிடம் காணப்படுகின்றது.

நிலாவரை தொடர்பான கர்ணபரம்பரைக் கதையும் இராமாயணத்துடன் தொடர்புபட்டதாகக் காணப்படுகிறது. இராமன், சீதையை மீட்பதற்காக இராவணனுடன் போர் புரிவதற்கு, வானரப் படைகளுடன் இலங்கை வந்தபோது, வானரப்படைகளின் நீர்த்தேவையைப் பூர்த்தி செய்வதற்காக தனது அம்பை ஊன்றி, நீர் எடுத்த இடமே இது என்று  அந்த கர்ண பரம்பரைக்கதை கூறுகிறது.

எது எவ்வாறாயினும், நிலாவரைக் கிணறு, குடாநாட்டில் ஒரு பொக்கிஷமாகப் பாதுகாக்கப்பட  வேண்டிய தொட்டுணரக் கூடிய மரபுரிமைச் சொத்தாகும்.
அது, இன்று பெற்றிருக்கும் பிரபல்யம், சுற்றுலாப் பயணிகளைக் கவரக்கூடிய தனித்துவம் போன்றவை காரணமாக இந்தப் பகுதி சுற்றுலாவுக்குரிய  வசதிவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு, இங்கு வரும் மக்கள் சந்தோஷமாகத் தமது பொழுதைப்போக்கிச் செல்ல வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும்.

தரமான உணவுவிடுதிகள், சிறுவர் பூங்கா, தங்கும் விடுதிகள் அத்துடன் பாதுகாப்பு போன்ற உல்லாசப் பயணிகள் எதிர்பார்க்கும் வசதிவாய்ப்புகள் ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.

அவ்வாறு திட்டங்கள் வகுத்துச் செயற்படுத்தப்படுமானால் இப்பகுதில் வேலைவாய்ப்பற்று இருக்கும் நூற்றுக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக் கிைடப்பதுடன் பொருளாதார முன்னேற்றத்துக்கான அடிப்படைகளும் உருவாக்கப்படுவதாக அமையும். இருக்கும் வளத்தை நிறைவாகவும் திறமையாகவும் பயன்படுத்தினால் முன்னேற்றமும் வளர்ச்சியும் சாத்தியமே.

படப்பிடிப்பு: சமன்த பெரேரா – நன்றி – மிரர்…

Spread the love
 
 
      

Related News

6 comments

ராஜன். August 5, 2017 - 9:53 am

சோழியன் குடும்பி சும்மா ஆடாது ?? தரமான சிங்கள உணவு விடுதிகள், அவகளது வழிபாட்டுக்கு பௌத்தகோவில், பாதுகாப்புக்கு சிறிய இராணுவமுகாம், உல்லாசப் பயணிகளை சந்தோசப்படுத்த சிறிய விபச்சாரவிடுதியும் அருகிலே ஒரு கள்ளுகடையும் திறந்துவிட்டு இங்கு உடன் இறக்கிய பனங்கள்ளும் பொரித்தமீனும் உண்டு என்ற விளபரம் செய்து விட்டால் குடா நாட்டு இளஞர்களுக்கு வேலைவாய்ப்புமட்டுமா லட்சுமி கடாட்சம் கொட்டோ கொட்டுஎன்று கொட்டித்தள்ளிவிடும், ஏற்கனவே கதிர்காமத்தையும் நயினாதீவை கொடுத்தோம், திருக்கோணஸ்வரத்தை இழந்தோம் பலாலியிலே கொலைவிடுதி அமைத்துவிட்டான் நாவற்குழியிலே குந்திவிட்டான் நிலாவரை பறிபோவதென்ன பறி போய்விட்டது என்றுதான் சொல்லவேண்டும், காக்கைவன்னியர் கூட்டம் இருக்கும் வரை தமிழனுடைய பூர்வீக நிலமென்ன கோவணமும் பறி போகப்போகின்றது நிட்சயம், ராஜன்.

Reply
Theepan August 5, 2017 - 3:38 pm

Correct bro

Reply
ராம் August 6, 2017 - 9:20 pm

உண்மைதான் ???

Reply
Skandan December 30, 2018 - 10:26 am

தமிழன்ரை கோவணத்தை முள்ளிவாய்க்காலில் உருவிக்கோண்டு போனதை மறந்து போனாயா?

Reply
Jeya August 13, 2020 - 4:10 pm

Everything complained then last 32years war What achieve you guys made it.????your kids and properties all lost Then lost everything the leadership Jaffna mentalities and uneducated head weight.!!

Reply
A.Balendra August 5, 2017 - 12:11 pm

Very useful article.All the Jaffna citizens should read and understand the facts mentioned here.We. Should
Save rain water at any cost.”…….Thanks

Reply

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More