இலங்கை

மலையக தமிழர்களை புண்படுத்தும் வகையிலான கருத்துக்கள் வெளிவருவது மனவேதனையை தருகின்றது – சத்தியலிங்கம்

அண்மைக்காலமாக மலையகத்தமிழ் உறவகளைப் பற்றி விரும்பத்தகாத, அருவருப்பான விமர்சனங்களை சிலர் முன்வைப்பதானது மனவேதனையை தருவதாக வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார்.

நேற்று(04.08) வவுனியா வடக்கு நயினாமடு கிராமத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது உலகின் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் எமது நாட்டில் இனரிதியான வேறுபாடு குறைந்தளவிவேயே காணப்படுகின்றது. குறிப்பாக மொழி ரீதியாக இரண்டு தேசிய இனங்களே காணப்படுகின்றன. அவையும் கலாசார, மதவழிபாட்டு முறைகளில் பெரும்பாலும் ஒத்தனவாகவே காணப்படுகின்றன. எனினும் சுதந்திரத்திற்கு பின்னர் எண்ணிக்கையில் அதிகளவிலான சிங்கள தேசியவாதிகள் தமிழ் மக்களை இரண்டாந்தர பிரஜைகளாகவே நடாத்தி வந்தனர். இதன் பிரதி பலிப்புதான் நாட்டில் ஏற்பட்ட உரிமைப்போராட்டமும் அதன்பால் ஏற்பட்ட இழப்பகளும்.

வடக்குக் கிழக்கை பொறுத்தரை ஈழவிடுதலைப்போராட்டத்தில் மலையகத்தமிழ் மக்கள் பாரிய பங்களிப்பை செய்துள்ளனர். 80களில் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலைகளால் மலையகத்திலிருந்து இடம்பெயர்ந்து வடகிழக்கில் குடியேறிய மலையகத்தமிழர்கள் ஈழத்தமிழர்களாகவே வாழ்ந்து வந்துள்ளனர்.

தமிழ்மக்களுக்கான அகிம்சை போராட்டத்திலும் சரி, ஆயுதப்போராட்டத்திலும் சரி ஒடுக்கப்பட்ட தமிழர்கள் என்பதன் அடிப்டையில் ஈழவிடுதலை இயக்கங்களுடன் இணைந்து போராடியுள்ளனர். எனினும் அண்மைக்காலமாக சில ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் வருகின்ற செய்திகள் இந்த கொடிய போரினால் நொந்துபோன மலையக உறவுகளின் மனதை மேலும் நோகடிப்பதாக அமைந்துள்ளது. பிரதேச வாதம், மதவாதம் பேசும் நேரம் இதுவல்ல. ஏற்கனவே அரசியல் ரீதியாக முரண்பட்ட சமூகமாக காணப்படும் தமிழ்பேசும் மக்கள் இவ்வாறான குறுகிய வட்டத்திற்குள் பிரிந்துசென்றால் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வுநோக்கிய பயணத்தை கேள்விக்குறியாக்கிவிடும் என்றார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply