நந்திக் கடல் நீரேரி புனரமைக்கப்பட்டால் சுமார் 15000 பேர் நன்மையடைவார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
வறுமை நிலைப்பட்டியலில் இருந்துவரும் 14 மாவட்டங்களில் இரண்டாம் நிலையில் முல்லைத்தீவு மாவட்டம் இருப்பதாகத் தெரியவருகின்றது. முல்லைத்தீவு மாவட்டத்தில் காணப்படுகின்ற வளங்களை ஒழுங்குற அபிவிருத்தி செய்தால் அம் மாவட்டத்தை வறுமை நிலையிலிருந்து மீட்க முடியும் என்பதை அவதானத்துக்குக் கொண்டு வருகின்ற நிலையில், அதில் ஓர் அபிவிருத்தி நடவடிக்கையாக நந்திக்கடல் நீரேரி புனரமைப்புத் திட்டம் அடங்கியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்
சுமார் 3120 ஹெக்டயர் பரப்பளவைக் கொண்ட பாரிய நீரேரியாக விளங்கும் நந்திக்கடல், ஒடுங்கிய 2 கிலே மீற்றர் நீளமான கால்வாய் வழியாக வட்டுவாகல் பகுதியில் கடலுடன் கலக்கிறது.
இதனை அண்டியுள்ள சூழலானது புவிசார் உயிரினவியல் முக்கியத்துவம் கொண்டதாக அமையப் பெற்றுள்ளதுடன், அயல் பகுதிகளில் வாழும் மக்களுக்கு புவிசார் உயிரினவியல் சேவைகளை வழங்குவதாகவும் உள்ளதுடன், இக் கடலானது நண்டு, இறால் மற்றும் சில மீன் வகைகளைக் கொண்டுள்ளதாகவும் அமைந்துள்ளது எனவும் நேற்றையதினம் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றில் தெரிவித்தார்.
மேற்படி நந்திக் கடல் நீரேரியில் தற்போது, பாரியளவில் கழிவுப் பொருட்கள் புதைந்து, படிந்துக் கிடப்பதாலும், மழை காலத்தில் மேலும் வண்டல் மண் சேர்ந்தும் இதனது ஆழம் குறைந்துள்ளதுடன், கடலினுள் ஏரியின் நீர் கலக்குமிடத்திலுள்ள பாலத்தடியில் படிவுகள் அதிகம் படிந்து நீரோட்டத்தினைத் தடுத்தும் வருகின்றன எனவும் அவர் தெரிவித்தார்.