Home இலக்கியம் ஈழத்து நாடக ஆளுமைகளுள் போற்றப்பட வேண்டியவர் பாலேந்தரா – தியாகராஜா சிறிரஞ்சினி:-

ஈழத்து நாடக ஆளுமைகளுள் போற்றப்பட வேண்டியவர் பாலேந்தரா – தியாகராஜா சிறிரஞ்சினி:-

by admin

தமிழ் நாடகங்கள் உலக தரத்திற்குப் போற்றப்பட வேண்டும் என்றும் தொடர்ந்த நாடக மேடையேற்றங்களே தீவிர நாடக இயக்கத்தை வலுப்படுத்தும் என்ற ரீதியிலும் பல வருடங்களாக தொடர்ச்சியான நாடகத் தயாரிப்புக்களையும், நெறிப்படுத்தல்களையும் தனது இலட்சியப் போக்காய்க் கொண்டு மிளிர்கின்ற திரு. க. பாலேந்தரா அவர்கள் இலங்கை மொறட்டுவப் பல்கலைக்கழகப் பொறியியல் பட்டதாரி. அத்தோடு லண்டனில் பொறியியல் துறையில் முதுமானிப் பட்டமும் பெற்றுள்ளார். தான் பிறந்த ஊரான அரியாலையிலே தன்னுடைய கலைப்பயணத்தை சினிமாப்படங்கள் பார்த்தல், ஊர்நாடகங்கள் பார்த்தல் போன்றவற்றின் ஊடாகத் தொடங்கி இன்று வரையும் எந்த அமைப்புக்களிடமிருந்தும் நன்கொடை பெற்றுக்கொள்ளாமல், நாடகமே முழு மூச்சாக இயங்கி, இடைவிடாது, தமிழ் நாடகங்களை உலகின் பல நாடுகளிலும் மேடையேற்றி வருகின்ற தலைசிறந்த நெறியாளனாக திரு. க. பாலேந்திரா காணப்படுகின்றார்.

அந்த வகையிலே 1951.08.08ல் பிறந்த இவருடைய நாடகப்பிரவேசமானது பதினேழு (17) வயதிலே ஆரம்பகிவி;ட்டது. திரு.க.பாலேந்திரா அவர்களின் நாடகப் பிரவேசமானது ஏனைய நாடக ஆளுமைகள் போன்று அமைந்துவிடவில்லை. தனது தாயாரைப் போன்றே சிறுபராயம் தொட்டு காண்பவற்றையெல்லாம் வாசிக்கும் பழக்கத்தைக் கொண்டிருந்த இவருக்கு சிறு சஞ்சிகைகள், கட்டுரைகள் என்பவற்றின் ஊடாக ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி என பல எழுத்தாளர்கள் அறிமுகமாகின்றார்கள். இவர்களின் எழுத்துக்களினால் கவரப்பட்ட திரு. க. பாலேந்திரா அவர்கள் கலையுலகின்பால் ஈர்க்கப்பட்டார் ஆயினும் இவருக்கு வீட்டுச் சூழல் இடம் கொடுக்காத போதும் கூட, திருட்டுத்தனமாக தாயாருக்குத் தெரியாமல் ஊர் நாடகங்களைப் பார்த்தல், அவற்றில் நடித்தல் என்றிருந்த இவருக்கு அவரது ஊரிலே வருடா வருடம் நடைபெற்ற சுதேசிய விழா நாடகங்களே ஆரம்ப அனுபவங்களாக இருந்தன. 1970 களிலே கொழும்பில் நல்ல சிங்கள, ஆங்கில மொழி நாடகங்களையும், லயனல் வென்ற் அரங்கில் நாடக திரைப்படச் செயற்பாடுகளையும் கண்ட இவருக்கு நாடகத்துறையின்மீதான ஈடுபாடும், ஆர்வமும் மேலும் ஊற்றெடுக்கத் தொடங்கியது.

இந்த ரீதியிலே இவருடைய நாடகச் செயற்பாடுகளை நாம் இரண்டு வகையாகப் பிரித்து நோக்கலாம். ஒன்று, ஈழத்தில் இவருடைய நாடகப் பயணம், மற்றயது புலம்பெயர்வில் இவருடைய நாடகப் பயணம். அந்த வகையில் ஈழத்தில் இவருடைய நாடகப் பயணத்தை நோக்குவோமானால், 1972இல் மொறட்டுவைப் பல்கலைக்கழகத்திலே பொறியியல் துறையில் கல்வி பயில்வதற்காகப் பிரவேசித்த இவர் தன்னுடைய 1ம் வருடத்திலே ‘சாவின்சதி’ என்ற நாடகத்தில் நடித்து பல பாராட்டுக்களையும் பெற்றார்.; அங்கிருந்த தமிழ்ச் சங்கத்தின் வெளியீடான ‘நுட்பம்’ சஞ்சிகையின் ஆசிரியராகவும், சங்கத் தலைவராகவும் இருந்த போது கலைஞர்கள், அறிஞர்களுடன் ஏற்பட்ட தொடர்புகள் ஒரு சீரிய நாடகக் கலைப் பயணத்திற்கு இவருக்கு அடிகோலின. ஆயினும் இவரை முதன் முதலில் சிறந்த நடிகனாக அறியச் செய்தது. இவர் 1973ல் பிரதான பாத்திரம் ஏற்று நடித்த சுகைர் ஹமீட் அவர்களின் ‘ஏணிப்படிகள்’ என்ற நாடகமாகும். இந்நாடகம் அப்போதைய அரசியல் கூட்டணிகளின் எதிர்பார்ப்புக்களையும், ஏமாற்றங்களையும் குறியீட்டு முறையில் வெளிப்படுத்தியது. 1973 இல் இராமகிருஷண மண்டபத்தில் மேடையேறிய இந்நாடகம் 1974இல் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தமிழாராய்ச்சி மாநாட்டிலும் மேடையேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

1974 களில் தாசீசியஸ் அவர்களின் நெறியாள்கையில், மொறட்டுவ பல்கலைக் கழக மாணவர்கள் நடித்த அலெக்சி அபுசோவின் ‘பிச்சைவேண்டாம்'(1975) மற்றும் ‘கந்தன் கருணை’ போன்ற நாடகங்களில் பங்குகொண்ட இவர் கலைவிழா நாடகங்களாக ‘இவர்களுக்கு வேடிக்கை’, ‘கிரகங்கள் மாறுகின்றன’, ‘தூரத்து இடிமுழக்கம்’ போன்றவற்றின் பிரதிகளை ஆக்கி நெறியாள்கையும் செய்திருந்தார். ஆனாலும் கூட 1976களில் ‘மழை’ என்ற முழுநீள நாடகத்தாலே இவர் பலர் மத்தியிலும் சிறந்த நெறியாளனாகவும், தயாரிப்பாளனாகவும் பிரபல்யமடைந்தார். இந்நாடகம் இவரால் முதன் முதலில் நெறியாள்கை செய்யப்பட்ட முழுநீள நாடகம் என்பதும் 1972 இல் ‘கசடதபற’ என்ற வல்லினச் சஞ்சிகையிலிருந்து இந்தியத் தமிழில் அமைந்திருந்த இந்திரா பார்த்தசாரதியின் நாடகத்தினை தனக்கு ஏற்ற ஆற்றுகைப் பிரதியாக தயார் செய்து நெறிப்படுத்தியிருந்தார்;. அந்த வகையில் இந் நாடகமானது முதிர் கன்னிகளின் மன உளைச்சல்கள் பேசும் மனோ தத்துவ நாடகமாகும். இதில் திரு.க. பாலேந்திரா அவர்கள் ரகு என்ற பாத்திரத்திலும் திருமதி. ஆனந்தராணி பாலேந்திரா (அப்போது ஆனந்தராணி ராஜரட்ணம்) மாலினி என்ற முக்கிய பாத்திரத்திலும் நடித்தனர் என்பதும், இலங்கையின் எல்லாப் பகுதிகளிலும், உலகின் ஈழத்தமிழர் வாழும் பல நாடுகளிலும் மேடையேறிய இந்நாடகமானது 2010 இல் கூத்துப்பட்டறை, மூன்றாம் அரங்கு ஆதரவில் சென்னையில் மேடையேற்றப்பட்டதென்பதும் குறிப்பிடத்தக்கது. திருகோணமலைக் கவிஞர் த.முசிவராம் எழுதிய ‘நட்சத்திரவாஸி’ என்ற நாடகத்தினையும் சார்வாகன் எழுதிய நாடோடிக் கதை ஒன்றைத் தழுவி தானே எழுதிய ‘பலி’ நாடகத்தினையும் மொறட்டுவ பல்கலைக் கழக தமிழ் மாணவர்களை வைத்து நெறிப்படுத்தி 1978 இல் மேடையேற்றி வெற்றி கண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், இலக்கிய மன்றங்கள் போன்றவற்றிற்காக நாடகங்களைத் தயாரித்தும், நெறிப்படுத்தியும் வந்த இவருக்கு தொடர்ந்தும் நாடகச் செயற்பாடுகளை முன்னெடுக்க ஒரு அமைப்புத் தேவையெனக் கருதி 1978 இல் அவைக் காற்றுக் கலைக்கழகத்தினை நிறுவினார். இதன் மூலமாக அக்காலப் பகுதியிலே காணப்பட்ட தமிழர் சார்ந்த அரசியல், சமூகப் பிரச்சினைகள் பற்றிப் பேசக்கூடிய நல்ல நாடகங்களைப் பிற மொழிகளிலிருந்தும், மேற்குலக நாடுகளிலிருந்தும் தேர்ந்தெடுத்து அதனை நெறிப்படுத்தி ஈழத்தமிழர் மத்தியில் ஆற்றுகை செய்து நல்ல வரவேற்பையும் பெற்றிருந்தார். இதற்கு எடுத்துக் காட்டாக இலங்கையில் இவர் நெறியாள்கை செய்த ரென்னசி வில்லியம்சின் (அமெரிக்கா), ‘கண்ணாடி வார்ப்புகள்’   (The Glass Menagerie) ,  பெர்டோல்ட் பிரெக்ட்டின (ஜேர்மனி) ‘யுகதர்மம்’  ( The Exception and the Rule),  கார்சியா லோர்காவின (ஸ்பெயின்) ‘ஒரு பாலை வீடு’,   ( The House of Bernada Alba),  அன்ரன் செக்கோவின்(ரஸ்யா) ‘சம்பந்தம்’, (The Proposal),   யூஜின் அயனெஸ்கோவின (பிரான்ஸ்) ‘இடைவெளி’  ( The Gap), ஆகிய நாடகங்களையும் புலம் பெயர்ந்த பின்னர் இவர் நெறியாள்கை செய்த சாமுவல் பெக்கற்றின்(பிரான்ஸ்) ‘எப்போ வருவாரோ’,( Waiting for Godot),  ஏரியல் டோப்மனின ;(சிலி) ‘மரணத்துள் வாழ்வு’  ( The Death and the Maiden ), ஹரோல்ட் பின்டரின்(இங்கிலாந்து) ‘போகிற வழிக்கு ஒன்று’     (One For The Road),  யூஜின் அயனெஸ்காவின (பிரான்ஸ்) ‘பாடம்’   (The Lesson), ஹென்றிக் இப்சனின்(நோர்வே) ‘சமூக விரோதி’  (An Enemy Of The People),   ‘சூறாவளி’ (வில்லியம்ஸ் ஷேக்ஸ்பியர் எழுதிய The Tempest  என்ற நாடகத்தைத் தழுவி பேராசிரியர் இந்திரா பார்த்தசாரதி எழுதியது. ) போன்ற நாடகங்களைக் குறிப்பிட முடியும். இது தவிர இந்திய நாடகாசிரியர்கள் பாதல் சர்க்காரின் ‘முகமில்லாத மனிதர்கள்’ (ஏவம் இந்திரஜித்) மோகன் ராகேஷpன் ‘அரையும் குறையும்’ (ஆதே ஆதுரே) கிரிஷ; கர்னாட்டின் ‘துக்ளக்’ போன்ற நாடகங்களையும் தெரிவு செய்து மேடைப்பிரதியை ஆக்கி, நெறியாள்கை செய்து வெற்றிகரமாக மேடையேற்றியுள்ளார்.

அவைக்காற்றுக் கலைக்கழகத்தினூடாக பாலேந்திரா அவர்கள் ஈழத்தில் மேடையேற்றிய நாடகங்கள் தமிழர்களின் சிந்தனைகளைப் புரட்டிப்போடுவதற்கும் வழிகோலின. அந்த வகையில் மனித குலத்தின் பொது அவலங்களைப் பேசும் பிரக்டின் ‘யுகதர்மம்’ என்ற நாடகம் யாழ் கண்ணனின் இசையில் மிளிர்ந்த புதுமையான பாடல்களுடனும், கூத்து வடிவத்தின் சில அம்சங்களுடனும் கூடியது. இந்நாடகம் 1979-1982 வரையிலும் இலங்கையில் 29 தடவைகள் மேடையேற்றம் கண்டது. ‘இயக்க விதி – 03’, ‘துக்ளக்’ ஆகிய நாடகங்கள் அக்காலத்தில் இலங்கை அரசின் தணிக்கைக்கு உள்ளாகிய நாடகங்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. ‘கண்ணாடி வார்ப்புகள்’ நாடகம் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் பகல், இரவுக் காட்சிகளாக மேடையேறியது. அத்தோடு ‘மழை’, ‘அரையும் குறையும்’, ‘கண்ணாடி வார்ப்புகள்’ போன்ற நாடகங்கள் இலங்கை வானொலியில் ஒலிபரப்பானது மட்டுமல்லாமல் ‘கண்ணாடி வார்ப்புகள்’ நாடகம் இலங்கை ரூபவாகினி தொலைக் காட்சியிலும் 1982ஆம் ஆண்டு முதலாவது தமிழ் நாடகமாக ஒளிபரப்பானது. இவ்வாறாக ஈழத்திலே அவைக்காற்றுக் கலைக்கழகத்தின் ஊடாக பல்வேறான நாடக முயற்சிகளை மேற்கொண்ட பாலேந்திரா அவர்கள், பெரும்பாலான பிறமொழி நாடகங்களைத் தானே தெரிவு செய்து ரா.நிர்மலா ,ச.வாசுதேவன், ரா.மல்லிகா, சீ.ஞானச்செல்வதி, எம்.எல்.எம்.மன்சூர் போன்றோரின் உதவியுடன் மொழிபெயர்த்து ஈழத்தில் நெறிப்படுத்தியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவ்வாறாக ஈழத்தில் பல்வேறான நாடக முயற்சிகளை முன்னெடுத்த பாலேந்திரா அவர்கள் 1982 காலப்பகுதியிலே வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொள்ள நேர்ந்தது.

வெளிநாட்டுப் பயணத்தினால் புதிய தேசம், புதிய வாழ்வியல் முறைகளை எதிர்கொண்டாலும்கூட ஈழத்தில் வாழ்ந்த அதே நாடக வாழ்வையே அங்கும் முன்னெடுத்தார். அந்த வகையில் 1982இல் நோர்வேயில் தான் தங்கியிருந்த 10 மாத காலமும் அங்கிருந்த தமிழர்களை இணைத்துக்கொண்டு நோர்வே நாட்டவருக்காக வார்த்தையில்லா நாடகத்தினை நிகழ்த்தியிருந்தார். பார்வையாளர்கள் முழுவதும் நோர்வேஜிய மக்களாக இருந்தனர். அதனைத் தொடர்ந்து லண்டனிலே 1983ஆம் ஆண்டு தமிழ் அவைக்காற்றுக் கலைக்கழகத்தினை திருமதி.ஆனந்தராணி பாலேந்திரா, சட்டத்தரணி மு.நேமிநாதன், சட்டத்தரணி ரெங்கன் தேவராஜன், சி.ராஜ்குமார், சபேஸ், சுகுணசபேசன் ஜனார்த்தனனன், விஜயன், பா.சந்தியேந்திரன், ஆதரவுடன் நிறுவி, லண்டன்வாழ் இலங்கைத் தமிழர்களை ஒன்று திரட்டி அதன்மூலம் பல்வேறான நாடகங்களையும் இன்றுவரையும் மேடையேற்றி வருகின்றார். அத்தோடு 1991ல் இருந்து வருடா வருடம் நாடக விழாக்களையும் நடாத்தி வருகின்றார். இதுவரை லண்டனில் 37 நாடக விழாக்களையும்,மற்றும் கனடா, ஒஸ்ரேலியா, நோர்வே, இந்தியா, பிரான்ஸ், ஹொலன்ட், சுவிற்சலன்ட், ஜேர்மனி போன்ற நாடுகளில் 23 நாடக விழாக்களையும் நிகழ்த்தியுள்ளார். ஒவ்வொரு நாடக விழாவிலும் குறைந்தது மூன்று நாடகங்கள் மேடையேறியுள்ளன. இவை நாடக விழாக்கள் மட்டுமே. வேறு சங்கங்கள், நலன்புரி அமைப்புகள், பழைய மாணவர் சங்கங்கள் என இதுவரை சுமார் 400 நாடக மேடையேற்றங்களை நிகழ்த்தியுள்ளார்.

அது மாத்திரம் அல்லாமல் அந்நியச் சூழலில் வாழும் எமது சிறுவர்கள் தமது சுய அடையாளங்களை இனங்காணவும், தன்னம்பிக்கையுடன் ஒரு பலமான அத்திவாரத்தைக் கட்டியெழுப்பவும், தமிழ் மொழியைச் சரளமாகப் பேசிப் பயிலவும் சிறுவர்களுக்கான பயிற்சிப் பட்டறைகளை நடாத்தி, தொடர்ச்சியாக இன்றுவரையும் பல்வேறான சிறுவர் நாடகங்களையும் மேடையேற்றி வருகின்றார். அந்தவகையில் பேராசிரியர் மௌனகுருவின் ‘வேடரை உச்சிய வெள்ளைப் புறாக்கள்’, மாவை நித்தியானந்தனின் ; ‘அரசனின்; புத்தாடை’ பேராசிரியர் சிவசேகரம் எழுதிய ‘மலைகளை அகற்றிய மூடக் கிழவன்’ போன்ற நாடகங்களைக் குறிப்பிட முடியும்.

இவை மாத்திரமின்றி லண்டன் தமிழ் அவைக்காற்றுக் கலைக்கழகத்தின் நாடகங்கள் ஊடாக, ஈழத்தவரின் போர்ச்சூழலையும், அதனால் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் வேதனைகளையும் கூட லண்டன் வாழ் மக்களிடம் இன்றுவரையிலும் பேசிக்கொண்டிருக்கின்றார். அந்த வகையில் ‘எரிகின்ற எங்கள் தேசம்’, ‘பாரத தர்மம்’ ‘துன்பக்கேணியிலே’, ‘பெயர்வு’ ‘போகிற வழிக்கு ஒன்று’, ‘மரணத்துள் வாழ்வு’ ‘நெட்டை மரங்கள்’போன்றன ஈழத் தமிழரின் துயரங்களை வெளிக்காட்டி பார்வையாளர்களை நெருடிய நாடகங்களாகும். கொள்கையென்று எந்தக் குழுவுடனும் இணையாமல் சுதந்திரமாகவும் நேர்மையாகவும், தனித்துவமாகவும் இயங்கி எந்நாளும் நாடகத்திற்கான தேடலை யாசித்து நிற்கின்ற பாலேந்திரா அவர்களும், அவருடைய அவைக்காற்றுக் கலைக் கழகமும் வெறுமனே தோன்றி நிலைத்திடவில்லை. பல்வேறு சவால்களையும், எதிர்ப்புகளையும் தாண்டியே இன்று வரையிலும் நிலை பெற்று நிற்கின்றது.

அந்த வகையிலே திரு.க. பாலேந்திரா அவர்கள் நிறுவிய அவைக்காற்றுக் கலைக்கழகமானது ஈழத்தில் இயங்குகின்ற பொழுது நடிகர்களை ஒன்று திரட்டவும், அவர்களை நாடகத்திற்காக தயார்படுத்தவும் பல சவால்களை எதிர்கொண்டதோடு, நாடகத்தில் பேசும் பொருளுக்கான எதிர்ப்புகளையும், பல்வேறு தடைக்கற்களையும் எதிர்கொள்ளவும் நேரிட்டது. அத்தோடு ஈழத்தில் அன்று காணப்பட்ட சூழலில் பெண்களை நாடகத்துறையில் ஈடுபடுத்துவதிலும் பெரும் சவால்களையும் எதிர்கொள்ள நேர்ந்தது. இது போலவே லண்டனிலும் அவைக்காற்றுக் கலைக்கழகமானது பல்வேறு சவால்களை இன்றுவரையிலும் எதிர்நோக்கி வருகின்றது. அந்தவகையிலே லண்டனில் தமிழ் நடிகர்களை ஒன்றுதிரட்டுவது. தமிழ் இசைஞர்களை உருவாக்குவது, தமிழ்மொழி மூலம் செயற்பாடுகளை முன்னெடுப்பது எனப் பலவகையான சவால்களை எதிர்கொண்ட பொழுதும் கூட அவர் ஓய்ந்து விடவில்லை. தொடர்ந்தும் தன்னுடைய நாடகப் படைப்பாக்கங்களையும், நெறிப்படுத்தல்களையும் யதார்த்த நாடகங்கள், காவியபாணி நாடகங்கள், குறியீட்டு நாடகங்கள், பரிட்சாத்த நாடங்கள், அபத்தபாணி நாடகங்கள், சரித்திர நாடங்ள், கவிதா நாடக நிகழ்வுகள் எனப் பல பாணிகளிலும் மேற்கொண்டே வருகின்றார். இவருடைய நாடகங்களில் பல, பெண்ணியம் குறித்த கருப்பொருளைக் கொண்டவையாகவும் உள்ளன. மோகன் ராகேஷpன் ‘அரையும் குறையும்’, அம்பையின் ‘ஆற்றைக் கடத்தல்’, சேரனின் ‘அவன்.அவள்’ ‘துன்பக்கேணியிலே’ கவிதா நாடக நிகழ்வு போன்றவற்றை குறிப்பிட்டுச் சொல்லலாம்.

இந்தவகையில் ஒரு கலைக்குடும்பம் சாராத பின்னணியில் இருந்து கலையுலகில் பிரவேசித்த திரு.க.பாலேந்திரா அவர்கள் தன்னுடைய வாழ்வையும் தன்னுடைய குடும்பத்தார் வாழ்வையும் கலையுலகிற்கே அற்பணிப்புச் செய்து வருகின்றார். இந்த ரீதியில் பாலேந்திரா அவர்களின் மனைவி, மற்றும் மகளின் நாடகத்துறைசார் அற்பணிப்புக்களை நோக்கவேண்டிய கடப்பாட்டிலே நாம் உள்ளோம். திருமதி. ஆனந்தராணி பாலேந்திரா அவர்கள் ஈழத்தின் தலை சிறந்த பெண் நடிகையாகக் காணப்பட்டவர். இவருடைய நாடகப்பிரவேசம் பற்றி நோக்குவோமானால், சிறுபராயத்திலே கதைகளை உரத்து வாசிக்கும் பழக்கத்தைக் கொண்டிருந்த இவர் கொழும்பில் தனியார் பாடசாலையில் கல்வி கற்றபோது பாடசாலை நிதிக்காக மேடையேறிய நாடகங்களில் ஆர்வத்துடன் பங்கேற்றார். 1974ல் இலங்கை வானொலி நாடகங்கள், உரைச்சித்திரங்களில் நடிக்க ஆரம்பித்த ஆரம்பித்த இவரின் தீவிர நாடகப் பிரவேசம் 1975ல் நிகழ்ந்தது.மொறட்டுவ பல்கலைக்கழக தமிழ்ச்சங்கத்தில் பாலேந்திரா அவர்கள் தலைவராக இருந்தபோது தயாரித்த ‘பிச்சைவேண்டாம்’ என்ற முழுநீள நாடகத்தில் பிரதான பாத்திரம் ஏற்று திரு.க.பாலேந்திராவுடன் இணைந்து நடித்திருந்தார்;. பாலேந்திரா அவர்கள் நெறிப்படுத்திய ‘மழை’ நாடகத்திலே முக்கிய பாத்திரமான நிர்மலா என்ற பாத்திரத்தில் நடித்து இலங்கையில் பலரின் மத்தியிலும் சிறந்த நடிகையாக இன்று வரையும் நிலைத்து நிற்கின்றார். அதுமாத்திரமன்றி இலங்கையில் தயாரிக்கப்பட்ட ‘வாடைக்காற்று’, ‘கோமாளிகள்’, ஆகிய திரைப்படங்களிலும் நடித்துள்ளார். அந்த வகையில் ஆனந்தராணி அவர்கள் ஈழத்திலும், புலம் பெயர்விலும் பாலேந்திரா அவர்களால் முன்னெடுக்கப்பட்ட அத்தனை நாடகச் செயற்பாடுகளிலும் முக்கிய பங்காற்றி வருகின்றார். பரத நடனத்துறை சார்ந்த தேர்ச்சியால் தன்னுடைய உடலிலே லாவகமானதும், லயத்துவம் மிக்கதுமான அசைவுகளைக் கொண்டு அரங்கிலே சீறிப்பாயும் சிங்கம் N;பான்றே தன்னுடைய நடிபாகத்தை மேற்கொண்டு நிற்பார். இத்தன்மையை ஆனந்தராணி அவர்கள் முக்கிய பாத்திரம் ஏற்று நடித்த ‘மரணத்துள் வாழ்வு’ நாடகத்திலே காண முடியும்.

சிறந்த நடிகையாக மாத்திரம் அன்றி, ஆனந்தராணி அவர்கள் நாடகங்களுக்கான நடனங்களை வடிவமைப்பது, பாடல்களைப் பாடுவது, நெறியாள்கையில் உதவி செய்வது, நடிகர்களுக்கான நடிப்பினை வழிப்படுத்துவது, நடிகர்களுக்கு சிறந்த பயிற்சிகளை வழங்குவது என்று பல தரப்பட்ட பணிகளையும் நாடகத்துறையினுள் மேற்கொண்டு வருகின்ற பல்துறை பெண் ஆளுமையாகவும் காணப்படுகின்றார். அது மாத்திரம் அல்லாமல் லண்டன் தமிழ் நாடகப் பள்ளி மாணவர்களுக்கு சிறந்தவொரு தாயாகவும், சகோதரியாகவும், சக நடிகையாகவும், பயிற்றுவிப்பாளராகவும், தொழிற்பட்டு வருகின்றார். சிறுவயதிலே நாடகத்துறையினுள் நடிகையாக பிரவேசித்த ஆனந்தராணி அவர்கள் அறுபது வயதாகியும் இன்றுவரையிலும் நாடகத் துறைக்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்டிருக்கின்ற ஈழத்தின் தலை சிறந்த பெண் நாடக ஆளுமையாக காணப்படுகின்ற போதிலும் கூட ஈழத்தில் இவருடைய நாடகத்துறை சார்ந்த பங்கும், பணியும் பதிவேற்றங்கள் செய்யப்படவில்லை என்பது மிகவும் கவலைக்குரிய இடமாகும். ஆனாலும் கூட இவர் என்போன்ற நாடகத்துறைசார் பெண்மணிகளுக்கு வழிகாட்டியாக இன்று வரையிலும் திகழ்கின்றார் என்பதில் மகிழ்ச்சியடைகின்றேன். அத்தோடு இவர் தன்னைப் போலவே தன்னுடைய மகள் பாலேந்திரா மானசியையும் நாடகத்துறையில் சிறப்புத் தேர்ச்சி பெற்றவளாக வளர்த்து, திரு.க.பாலேந்திரா அவர்களின் அவைக்காற்றுக் கலைக்கழகத்தில் நடிகையாகவும், பாடகியாகவும், பாலேந்திரா அவர்கள் இல்லாதபோது நாடகப் பள்ளியை நடப்பிப்பவராகவும் தன்னுடைய மகளை தயார்படுத்தியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறாக நாடகத்துறையிலே இறுதி வரையிலும் தங்களுடைய வாழ்க்கைப் பயணத்தை நாடகக் கலைக்காவே அர்ப்பணிக்கக் காத்திருக்கும் திரு. க. பாலேந்திரா அவர்களும் அவருடைய குடும்பத்தாரும் ஈழம் பெற்றெடுத்த நாடகக் குழந்தைகள் என்று குறிப்பிட்டால் அது மிகையாகாது. திரு. க. பாலேந்திரா அவர்கள் இன்று வரையிலும் 68 நாடகங்களை மேடையேற்றியிருக்கின்றார். அவற்றிலே ஈழத்தில் 24 நாடகங்களையும், புலம்பெயர்வில் 44 நாடகங்களையும் நெறிப்படுத்தியிருக்கின்றார். இவற்றில் பல நாடகங்கள் இன்று வரையிலும் மீண்டும் மீண்டும் மேடையேற்றப்பட்டும் வருகின்றன. இந்த 68 நாடகங்களிலும் 46 சுயமொழி நாடகங்களும், 22 மொழிபெயர்ப்பு நாடகங்களும் உள்ளடங்குகின்றன. இந்த வகையில் சுதேசிய மொழிசார் நாடகங்களையே அதிகம் உருவாக்கியமை கவனிக்கப்பட வேண்டியது. ஈழத் தமிழர்களின் பிரச்சினைகளையே பேசுகின்றவராகவும், தன்னுடைய தமிழ், மற்றும் தாய்மண் பற்றினால் இன்றுவரையிலும் சுயமாக நாடகத்துறையிலே ஈடுபட்டு வருபவராகவும் காணப்படுகின்ற திரு. க. பாலேந்திரா அவர்கள் ஈழத்தில் தன்னுடைய நாடகப் பயணத்தினுள் காலடி பதித்து அதனை இன்று வரையிலும் புலம்பெயர் நாட்டிலும் முன்னெடுத்தும் வருகின்றார். இந்த ரீதியில் நாடகக் கலைசார் ஈர்க்கப்பட்ட கலைஞன் ஒருவன் எத்துறை சார்ந்து வேலைபுரிந்தாலும் அவனுடைய எண்ணம், சிந்தனைகள் நாடகத்துறையிலேதான் ஈடுபாட்டைக் கொண்டிருக்கும் என்பதற்கு எடுத்துக்காட்டாகவும், ஈழத்தமிழர் பற்றிப் பேசிக்கொண்டிருக்கின்ற ஈழத்து நாடக ஆளுமைகளுள் பெரிதும் பேசப்படக்கூடியவராகவும், சமகால நெறியாளர்களுக்கு சிறந்த வழிகாட்டியாகவும் காணப்படுகின்ற திரு. க. பாலேந்திரா அவர்கள் ஈழம் ஈன்றெடுத்த, நாடகப் படைப்பாளி, சிறந்தநெறியாளன், இளமையும் துடிப்பும் மிக்க செயல்பாட்டுவாதி, என்றெல்லாம் போற்றினால் கூட அது மிகையாகாது என்பதே எனது சிந்தனைத்தோன்றலாகும்.

நேர்காணல் மற்றும் எழுத்தாக்கம்

செல்வி. தியாகராஜா சிறிரஞ்சினி
04ம் வருட நாடகத்துறை மாணவி,
சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகம்,
கிழக்குப் பல்கலைக்கழகம்.

Spread the love
 
 
      
pCloud Premium

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More