குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-
கோப்பாய் காவல்துறையினர் மீதான வாள்வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் இதுவரை கைதுசெய்யப்பட்டுள்ள 7 சந்தேகநபர்களையும் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ள நீதிமன்றம் அன்றையதினம் அவர்களை அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்தவும் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 30ஆம் திகதி கொக்குவில் நந்தாவில் அம்மன் ஆலயத்திற்கு அருகில் கோப்பாய் காவல்துறையினர் மீது வாள் வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் இரு காவல்துறையினர் படுகாயமடைந்து இருந்தனர்.
இது தொடர்பில் பயங்கரவாத தடைச்சட்டப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட ஆவா குழுவைச் சேர்ந்த 7 சந்தேகநபர்களும் நேற்று யாழ். நீதவான் நீதிமன்ற பதில் நீதிபதி வி.ரி.சிவலிங்கத்தின் வாசஸ்தலத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.