185
வடமாகாண சபையின் போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் அமைச்சு பதவியை உடனடியாக இராஜிநாமா செய்ய வேண்டும் என தமிழீழ விடுதலை இயக்கத்தின் (டெலோ) தலைமைத்துவ குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வவுனியாவில் சனிக்கிழமை கூடிய அந்தக் கட்சியின் தலைமைத்துவ குழு ஐந்து மணித்தியாலங்கள் பல்வேறு விடயங்கள் குறித்து ஆராய்ந்துள்ளது.
இந்தக் கூட்டத்தில் அமைச்சர் டெனிஸ்வரனின் இராஜிநாமா விடயம் முக்கியமாக ஆராயப்பட்டதாக அந்தக் சட்சியின் செயலாளர் சிறிகாந்தா கூட்டம் முடிவடைந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசகையில் தெரிவித்தார்.
செய்தியாளர்களுடனான சந்திப்பின் போது அவர் மேலும் தெரிவித்ததாவது:
வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு எதிராக சில வாரங்களுக்கு முன்னர் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக வடமாகாண சபையில் உள்ள ஆறு உறுப்பினர்களிலே அமைச்சர் டெனிஸ்வரன் கையெழுத்திட்டிருந்தார். அவருடைய அந்த நடவடிக்கை எங்களுடைய கட்சியினுடைய அனுமதி இல்லாமலும் கட்சித் தலைமையினுடைய ஆலோசனையைப் பெறாமலும் தன்னிச்சையாக எடுக்கப்பட்டிருந்த காரணத்தினாலே நாங்கள் அவரிடமிருந்து இது தொடர்பிலே விளக்கம் கோரி கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தோம்.
கட்சியினுடைய அனுமதியில்லாமல் வடமாகாண முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திலே கையெழுத்திட்ட காரணத்துக்காக அவர் மீது ஏன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படக் கூடாது என்பதற்கு காரணம் ஏதாவது இருந்தால் அதனை கடிதம் கிடைத்து இரண்டு வாரங்களுக்குள்ளே எழுத்து மூலமாக எங்களுக்கு சமர்ப்பிக்குமாறு கட்சியின் சார்பில் என்னால் அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இருந்தும் அமைச்சர் டெனிஸ்வரனிடமிருந்து எழுத்து மூலமான விளக்கம் எதுவும் எங்களுக்குக் கிடைக்கப்பெற்றிருக்க வில்லை. இருந்தாலும் இன்றைய தலைமைக்குழு கூட்டத்திலே அவர் சமூகமளித்து, தன்னுடைய நடவடிக்கை தொடர்பிலே விளக்கமளித்திருக்கின்றார். நாங்களும் அவரிடம் சில விடயங்கள் தொடர்பிலே கேள்விகளை எழுப்பி தெளிவுபடுத்தல்களைப் பெற்றிருக்கிறோம்.
இந்த நிலையிலே நாங்கள் எற்கனவே தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகள் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அவர்களுடனும், வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்களோடும் கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்ட சந்திப்பின் போது எட்டப்பட்ட முடிவின் பிரகாரம் வடமாகாண அமைச்சரவையை முதலமைச்சர் மீள அமைப்பதற்கு ஏதுவாக டெனிஸ்வரன் வகித்து வருகின்ற அமைச்சர் பதவியை இராஜிநாமா செய்யும்படி நாங்கள் கேட்டிருக்கிறோம்.
கட்சியின் கட்டுப்பாட்டை மீறினார் என்கிற அந்த ஒழுங்கு நடவடிக்கைகளுக்கு புறம்பாக இந்த வேண்டுகோள் அவருக்கு இன்றைய தினம் விடுக்கப்பட்டிருக்கின்றது.
அதைப் பரிசீலிப்பதாகவும் அதன் முடிவை நாளைய தினம் அறிவிப்பதாக அவர் எங்களுக்குத் தெரிவித்திருக்கி ன்றார்.
அவருடைய முடிவைப் பொறுத்துத்தான் ஒழுங்கு நடவடிக்கையை தொடர்ந்து முன்னெடுப்பதா அல்லது ஒழுங்கு நடவடிக்கையை முடிவுக்குக் கொண்டு வருவதா என்பதுபற்றி நாங்கள் தீர்மானிக்க வேண்டியிருக்கும்.
இப்போது விவகாரம் முற்று முழுக்க டெனிஸ்வரனிடம் விடப்பட்டிருக்கின்றது. கட்சியினுடைய வேண்டுகோளை மதித்து, அவர் ஏற்கனவே எமது கட்சியும் கூட்டமைப்பினுடைய ஏனைய மூன்று கட்சிகளும் முதலமைச்சரோடு ஏற்படுத்திக் கொண்டிருக்கின்ற உடன்பாட்டிற்கு ஏதுவாக தனது அமைச்சர் பதவியை இராஜிநாமா செய்வார் என்றும் அதனூடாக வடமாகாண அமைச்சரவையை மீள் அமைப்பதற்கான சந்தர்ப்பம் முதலமைச்சருக்குக் கிடைக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம் என்றார் தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் சிறிகாந்தா.
அமைச்சர் டெனிஸ்வரன் இராஜிநாமா செய்வதனால் ஏற்படுகின்ற வெற்றிடத்திற்கு தமிழீழ விடுதலை இயக்கத்தின் மற்றுமொரு உறுப்பினராகிய விந்தன் கனகரட்னமே நியமிக்கப்படுவார் என்பதையும் தலைமைக்குழு தீர்மானித்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
அமைச்சர் டெனிஸ்வரனுடைய விவகாரத்திற்கு அடுத்ததாக அரசாங்கம் கொண்டு வரவுள்ள 20 ஆவது திருத்தச் சட்டம் மற்றும் இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வு காணும் விடயம் என்பன குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆராயப்பட்டுள்ளது.
இருபதாவது திருத்தமும் அரசியல் தீர்வு விவகாரமும்
அரசியலமைப்புக்குக் கொண்டு வர உத்தேசிக்கப்பட்டிருக்கின்ற 20 ஆவது திருத்தம் தொடர்பிலே விவாதித்து கூட்டமைப்பு ஒரு நிலைப்பாட்டுக்கு வருவதற்கு ஏதுவாக கூட்டமைப்பினுடைய ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தை உடனடியாக விரைந்து கூட்ட வேண்டும் என நாங்கள் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளுக்கு வேண்டுகோள் விடுப்பது என தீர்மானித்திருக்கின்றோம்.
குறிப்பாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அவர்களுக்கு எழுத்து மூலமான இந்த வேண்டுகோள் அடுத்து வரும் இரண்டொரு தினங்களிலே அனுப்பி வைக்கப்படும்.
மேலும் அரசியலமைப்பு தொடர்பான விவகாரங்கள் சம்பந்தமாகவும் எங்களுடைய அடிப்படை கோரிக்கைகளில் சமரசம் செய்து கொள்ளாமல், அதேநேரத்தில் இரண்டு பிரதான சிங்கள பிரதான கட்சிகளும் கூட்டாக அரசை அமைத்து அந்த அரசு நீடித்துக் கொண்டிருக்கி;ன்ற இன்றைய அரசியல் சூழ்நிலை இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்குக் கிடைத்திருக்கின்ற ஓர் அரிய சந்தர்ப்பம் என்பதையும் கருத்தில் கொண்டு, இந்த அரசியல் தீர்வ முயற்சிகளைத் தொடர்ந்து விரைவாக முன்னெடுப்பதற்கு ஏதுவாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பு உரிய நடவடிக்கைகளi எடுக்க வேண்டும் எனவும் நாங்கள் விரும்புகிறோம்.
இதுதொடர்பாக எற்கனவே ஒரு சந்திப்பு தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அவர்களோடும் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா அந்தக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறப்பினர் சுமந்திரன் ஆகியோருடன் நடத்தப்பட்டிருக்கின்றது.
இருந்தாலும்கூட நாங்கள் முழுமையான பிரதிதித்துவத்தைக் கொண்ட ஒரு குழு தமிழரசுக்ட்சியின் சார்பிலும் எங்களுடைய கட்சியின் சார்பில் இன்னுமொரு குழுவுமாக இந்த பேச்சுவார்த்தை முயற்சிகளை முன்னெடுப்பது தமிழ்த்தேசிய கூட்டமைப்பு அரசியல் தீர்வு முயற்சிகளைப் பொருத்தமட்டிலே காத்திரமான சில முடிவுகளை எடுத்து நடவடிக்கைகளை முன் நகர்த்துவதற்கு உதவியாக இருக்கும் என்றும் அதனைத்தொடர்ந்து தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பு கூட்டத்தின் ஊடாக ஒடடுமொத்தமாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகள் அனைத்தும் ஒரே நிலைப்பாட்டிலே ஒன்றாக இந்த அரசியல் தீர்வு விடயத்திலே குரல் எழுப்பக் கூடிய சூழல் உருவாகும் என்றும் எதிர்பார்க்கின்றோம்.
Spread the love