Home இலங்கை மஹிந்தவும் சம்பந்தனும் – நிக்ஸன்:-

மஹிந்தவும் சம்பந்தனும் – நிக்ஸன்:-

by admin

புதிய யாப்பு நடைமுறைக்கு வருதில் சிக்கல் ஏற்படலாம் என்ற எதிவு கூறலின் அடிப்படையில் 20ஆவது திருத்தச்சட்டத்தை கொண்டு வந்து மாகாண சபைகளை இலகுவாக கலைக்கும் அதிகாரத்தை நல்லாட்சி அரசாங்;கம்உருவாக்குகின்றதா?
-அ.நிக்ஸன்-

இனப்பிரச்சினை என்ற ஒன்றே இல்லை அது பயங்கரவாத செயற்பாடுகள்தான் என்று அடித்துக் கூறிய முன்னாள் மஹிந்த ராஜபக்ச தொடர்ச்சியாக அந்த நிலைப்பாட்டில் இருக்கின்றார் என்பதை அவருடைய பேச்சுக்கள் காண்பிக்கின்றன. ஜனாதிபதி பதவியில் இருந்து விலகிய காலம் முதல் இன்று வரை இனப்பிரச்சினை தீர்வுபற்றி எந்தவொரு இடத்திலும் எவுதும் பேசியதில்லை. இந்த நிலையில் அரசியல் தீர்வுக்கு மஹிந்த ராஜபக்ச ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் எல்லா சமூகங்களும் ஒற்றுமையுடன் வாழ்வதை உறுதிசெய்யுமாறும் சம்பந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.

எதிர்க்கட்சியின் விமர்சனம்

கடந்த வாரம் கொழும்பில் நடைபெற்ற பௌத்த தேரர் ஒருவரின் நூல் வெளியீட்டில் கலந்துகொண்ட மஹிந்த ராஜபக்சவிடம் சம்பந்தன் இவ்வாறு கோரியிருக்கின்றார். அந்த நிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட முக்கிய அரசியல் பிரமுகர்கள் கலந்துகொண்டனர். மஹிந்த ராஜபக்சவுக்கு கைலாகுகொடுத்த சம்பந்தன் நீண்டநேரம் அவருடன் உரையாடியுமுள்ளார். இங்கே கேள்வி என்னவென்றால் மஹிந்த ராஜபக்சவை ஜனாதிபதி தேர்தலில் சம்பந்தன் ஏன் தோற்கடித்தார் என்று கூட்டு எதிர்க்கட்சி அவ்வப்போது விமர்சித்து வருகின்றது.

புதிய அரசியல் யாப்பு நாட்டை பிளபடுத்தப் போவதாகவும் கூட்டு எதிர்க்கட்சி குற்றம் சுமத்தி வருகின்றது. மஹிந்த ராஜபக்சவை மையப்படுத்திய கூட்டு எதிர்கட்சிபுதிய யாப்பக்கு ஆதரவு வழங்குமா இல்லையா என்பதற்கும் அப்பால் புதிய யாப்பில் இனப்பிரச்சினைக்குரிய ஏற்பாடுகள் என்ன இருக்கின்றது என்பது குறித்து யாருக்கும் முழுமையாகத் தெரியாது. ஆனால் ஒற்றையாட்சி முறை மாறாது என்றும் பௌத்த சமயத்துக்கு முன்னுரிமை எனவும் காணி பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படமாட்டாது என்றும் மூத்த அமைச்சர்கள் கூறி வருகின்றனர்.

நகைச்சுவாயாக கேட்டிருக்கலாம்

இந்த நிலையிலேதான் புதிய யாப்புக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்ற தொணியில் சம்பந்தன் மஹிந்தவிடம் கோரியிருக்கின்றார். முன்னரும் இவ்வாறான கோரிக்கை ஒன்றை சம்பந்தன் நாடாளுமன்றத்தில் அதிகாரபூர்வமாக முன்வைத்தார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இனப்பிரச்சினை தீர்வு விவகாரம் குறித்து மஹிந்தவுடன் பேசிவிட்டு வாருங்கள் என்று சம்பந்தனிடம் கூறியிருந்தார். தற்போது மீண்டும் அவ்வாறான நிலை ஒன்று ஏற்பட்டுள்ளது.

புதிய யாப்பின் உள்ளடக்கம் குறித்து சந்தேகமான நிலை இருக்கும்போது சமாதான முயற்சிக்கு ஆதரவு தாருங்கள் என்று சம்பந்தன் நகைச்சுவையாகவும் கேட்டிருக்கலாம் என்று கூறிய விமர்சகர் ஒருவர், மஹிந்த ராஜபக்சவின் ஆதரவை பெற வேண்டுமென்ற கண்டிப்பான உத்தரவு ஒன்றை பிரதமர் ரணில் விக்கிரமசிங் சம்பந்தனிற்கு ஏற்கனவே வழங்கியிருக்கின்றார் எனவும் யாப்புக்கான ஆதரவை சம்பந்தன் மூலமாக பெறுவதற்கு பிரதமர் ரணில் முயற்சிப்பதாகவும் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி, பிரதமர் உறுதியளித்தனரா?

அதனால்தான் சம்பந்தன் மஹிந்த ராஜபக்சவை காணுமிடங்களில் அவ்வாறு கோரிக்கை விடக்கூடும் எனவும் அந்த விமர்சகர் கிண்டலாகக் கூறினார். ஏவ்வாறாயினும் சம்பந்தன் புதிய யாப்புத் தொடர்பாக அதிகளவு நம்பிக்கை கொண்டிருக்கின்றார் என்பதை அவரது பேச்சுக்கள் எடுத்துக் காட்டுகின்றன. அவ்வாறு சம்பந்தன் நம்பும் அளவக்கு சிறந்த அரசியல் தீர்வுக்கான முக்கிய பரிந்துரைகள் புதிய அரசியல் யாப்பில் இருக்கின்றது என்றால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அல்லது ஜனாதிபதி மைத்திபால சிறிசேன ஏதாவது இரகசியமாக சொல்லியிருக்க வேண்டும் என்ற சந்தேகங்களும் எழுகின்றன.

அதவாது யாப்பில் வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு கூடுதல் அதிகாரம் என்றும் சுயநிர்ணய உரிமையுடன் கூடிய அதிகாரங்கள் பகிரப்படும் எனவும் ஏதாவது இரகசியமாக உறுதியளித்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு உறுதிய வழங்கக் கூடிய அரசியலரீதியான் தற்துணிவு ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் உள்ளதா என்பது மற்றுமொரு கேள்வி. ஏனெனில் நல்லாட்சி அரசாங்கத்தை கொண்டு நடத்துவதில் அவர்கள் இருவரும் பெரும்பாடுபடுகின்றனர். பினைமுறி ஊழல் விவகாரம் நல்லாட்சி அரசாங்கத்தை உடைக்கும் நிலையில் உள்ளது.

தற்துணிவு அதிகாரமில்லை.

ஆகவே இவ்வாறானதொரு சூழலில் சம்பந்தனுக்கு இரகசியமாக உறுதிமொழி கொடுக்கக்கூடிய தற்துணிவு ஜனாதிபதிக்கோ பிரதமருக்கோ இருக்காது என்பது வெளிப்படை. அத்துடன் இனப்பிரச்சினை தீர்வு விடயத்தில் தமிழ் மக்கள் கோருகின்ற வடக்கு கிழக்கு இணைப்பு, சுயாட்சி என்ற கருத்துக்கள், சமஸ்டி ஆட்சி முறை என்ற பேச்சுக்கள் போன்றவற்றுக்கு இரு கட்சி உறுப்பினர்களும் கடும் எதிர்ப்பும் தெரிவித்தும் வருகின்றனர். எனவே இவ்வாறான சிக்கல் நிலைமைகளுக்குள் இருந்து கொண்டு ஜனாதிபதியும் பிரதமரும் சம்பந்தனுக்கு இரகசியமாக உறுதிமொழி வழங்கி அல்லது தமிழர்கள் எதிர்பார்க்கும் தீர்வு வரும் என்று கூறும் அளவுக்கு நிலைமை இல்லை.

ஆகவே இவ்வாறான அரசியல் சூழலில் மஹிந்த ராஜபக்சவிடம் ஆதரவு வழங்குமாறு சம்பந்தன் கோருவது என்பது இராஜதந்திரமா? அல்லது தமிழர்களின் அரசியல் உரிமைக் கோரிக்கை நகைச்சுவையாகும் நிலைக்குச் செல்கின்றதா? இராஜதந்திரம் என்பது சிக்கலான அரசியல் சூழலுக்குள் தமது நிலைப்பாட்டை கொண்டு செல்வதற்கான அணுகுமுறையைக் குறிக்கும். ஆனால் இனப்பிரச்சினை தீர்வு விடயத்தில் சிக்கல் என்பதை விட இதுதான் சிங்கள அரசியல் தலைவர்களின் நிலைப்பாடு என்று எழுதப்படாத கொள்கை ஒன்று கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் இருக்கின்றது.

மாகாண சபையின் அதிகாரங்களின் நிலை

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஐக்கியதேசிய கட்சியும் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற அவ்வப்போது வழங்கும் உறுதிமொழிகள் பின்னர் கைவிடப்பட்டமை வரலாறு. தற்போது கூட மாகாண சபைகளின் அதிகாரத்தை மத்திய அரசு தன்வசப்படுத்தும் ஏற்பாடு ஒன்று இடம்பெறுகின்றது. குறிப்பாக மாகாண சபைத் தேர்தல்களை ஒரேநேரத்தில் நடத்துவதற்கு வசதியான ஏற்பாடுகள் என கூறப்பட்டு 20 ஆவது திருத்தச்சட்டம் ஒன்றை அரசாங்கம் தயாரித்து வருகின்றது. எந்தவொரு மாகாண சபையும் கலைக்கப்பட்டால் குறிப்பிட்ட சில மாதங்களுக்குள் தேர்தல் நடத்தப்பட்டு புதிய சபை அமைக்கப்பட வேண்டும் என்பது தற்போதைய விதிமுறை.

ஆனால் புதிய திருத்தச்சட்ட ஏற்பாட்டின்மூலம் மாகாண சபை ஒன்று தெரிவாகி ஒரு வருடத்தில் கலைக்கப்பட்டால் அனைத்து மாகாண சபைகளும் கலைக்கப்பட்டு தேர்தல் நடத்தப்படும் வரை குறைந்தது நான்கு ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். ஆகவே வரவுள்ள 20ஆவது திருத்தச்சட்டத்தை பயன்படுத்தி வடக்கு கிழக்கு மாகாண சபைகளின் ஆட்சியை மத்திய அரசு தன்வசப்படுத்தும் வேலைத் திட்டங்கள் அரங்கேற்றப்படவுள்ளன. இதற்கு தமிழரசுக் கட்சி ஆதரவு கொடுக்குமா? இந்த சட்டமூலத்தின் ஆபத்து குறித்து சம்பந்தன் தென்பகுதி அரசியல்வாதிகளுடன் பேசினாரா? நல்லாட்சியை கொண்டு வந்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவுடன் கலந்துரையாடினாரா? இப்படியான திருத்தச் சட்டமூலங்களை அமூல்படுத்தவா நல்லாட்சிக்கு ஆதரவு கொடுக்கப்படுகின்றது?

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More